செங்கோட்டையன் திடீர் டெல்லி பயணம்.. மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் உட்கட்சி மோதல்! என்ன நடக்கிறது?
சென்னை: அதிமுகவில் இப்போது மீண்டும் உட்கட்சி குழப்பம் வெடித்துள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கியிருக்கிறார். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் எனச் சொல்லி எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் செங்கோட்டையன் கெடு விதித்திருந்தார். இதற்கிடையே இன்று திடீரென செங்கோட்டையன் டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்..
ஜெயலலிதா மறைவுக்கு பிறகே அதிமுகவில் தொடர்ச்சியாக உட்கட்சி குழப்பங்கள் நிலவி வந்தது. இதனால் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முடக்கும் அளவுக்குக் கூட நிலைமை சென்றது. இரு அணிகளாகவும் அதிமுக பிரிந்தது. அதன் பிறகே நிலைமை எல்லாம் ஒரு மாதிரி செட்டிலாகி கடந்த சில ஆண்டுகளாகத் தான் அங்கு உட்கட்சிப் பூசல் எதுவும் இல்லாமல் இருந்தது

அதிமுக
எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக இருக்கிறார். ஓபிஎஸ் தனியாக போய்விட்டார். டிடிவி தினகரன் தனியாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை நடத்தி வருகிறார். சசிகலா தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். அதேநேரம் அவரது ஆதரவாளர்கள் சசிகலாவை தொடர்ந்து சந்தித்தே வருகிறார்கள்.
இது ஒரு பக்கம் இருக்க கடந்த 2019 லோக்சபா தேர்தல் முதலே அதிமுக தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வருகிறது. லோக்சபா தேர்தல், உள்ளாட்சி தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என அனைத்திலும் அதிமுக தோல்வி அடைந்தே வருகிறது. அதிமுக இப்படி பல பிரிவுகளாக பிரிந்து இருப்பதே தோல்விக்கு காரணம் என பலரும் சொல்லி வருகிறார்கள்.
செங்கோட்டையன்
இந்தச் சூழலில் தான் சமீபத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கியிருந்தார். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அனைவரையும் மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்றும் அப்போது தான் திமுகவை வீழ்த்த முடியும் என செங்கோட்டையன் பேசியிருந்தார். மேலும், இதற்காக எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடுவும் விதித்தார். 10 நாட்களில் நீக்கப்பட்ட அனைவரையும் மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்றும் இல்லை என்றால் அதற்கான நடவடிக்கைகளை தானே எடுப்பேன் என்பது போலவும் கூறியிருந்தார்.
இது தமிழக அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேநேரம் இதுபோல கெடு விதித்த மறுநாளே செங்கோட்டையனின் கட்சி பதவிகளை எடப்பாடி பழனிசாமி நீக்கினார். இருப்பினும், செங்கோட்டையனுக்கு ஆதரவாக 500+ நிர்வாகிகள் தங்கள் பதவிகளையும் ராஜினாமா செய்வதாக அறிவித்தனர். இப்படி அதிமுகவில் மீண்டும் ஒரு குழப்பமான சூழல் ஏற்பட்டுள்ளது.
டெல்லி பயணம்
இந்தச் சூழலில் தான் அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் டெல்லி பயணம் செய்துள்ளார். இன்று காலை அவர் டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார். டெல்லியில் செங்கோட்டையன் பாஜக தலைவர்களைச் சந்தித்துப் பேசவுள்ளதாகத் தகவல் வெளியானது. உட்கட்சி பூசல் தொடர்பாகவும் நீக்கப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் சேர்ப்பது தொடர்பாகவும் பேசவே செங்கோட்டையன் டெல்லி செல்வதாக கூறப்பட்டது.
பரபர பேச்சு
இருப்பினும், தான் பாஜக தலைவர்களை சந்திக்கவில்லை என செங்கோட்டையன் கூறியுள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், மனசு சரியில்லை என்பதால் பலரும் கோயிலுக்கு செல்ல சொன்னதாகவும் இதனால் ஹரித்துவாருக்கு போய் ராமரை தரிசிக்கவே செல்வதாகவும் கூறியிருந்தார்.
அதேநேரம் தமிழக அரசியலில் பரபர சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், சட்டென செங்கோட்டையன் டெல்லி செல்வது விவாதமாகியுள்ளது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.












Click it and Unblock the Notifications