ஜெயலலிதா பல்கலையை இணைக்கும் மசோதாவுக்கு அதிமுக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு -மறியல், கைதாகி விடுதலை
ஜெயலலிதா பல்கலைக் கழகத்தை அண்ணாமலை பல்கலைக் கழகத்துடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்எல்ஏக்கள் சட்டசபையில் அமளியில் ஈடுபட்டதுடன் வெளிநடப்பு செய்தனர். சாலை மறியலில் ஈடுபட்ட எம்எல்ஏக்கள் கைது செய்யப்பட்டு பின்
சென்னை: ஜெயலலிதா பல்கலைக் கழகத்தை அண்ணாமலை பல்கலைக் கழகத்துடன் இணைக்கும் சட்டத்தை ஆரம்ப நிலையிலே எதிர்க்கிறோம் என்று எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். அதிமுக உறுப்பினர்கள் சட்டசபையில் எழுந்து நின்று அமளியில் ஈடுபட்டதுடன் வெளிநடப்பு செய்தனர். சட்டசபைக்கு வெளியில் அமர்ந்து சாலைமறியலிலும் ஈடுபட்டதால் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்து வேனில் ஏற்றி அழைத்துச்சென்றனர். திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்ட அனைவரும் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
Recommended Video
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட மாணவர்களின் நலனுக்காக, முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில், விழுப்புரத்தில் டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. அதற்கு, துணைவேந்தர் நியமனமும் நடைபெற்றது.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைப்பு
ஜெயலலிதா பல்கலைக்கழகத்திற்கான நிதி ஒதுக்கீடு, கட்டுமானம் உள்ளிட்ட பணிகள் நடைபெறவில்லை எனக்கூறி, திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்க முடிவு செய்தது.

அதிமுக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு
இம்மசோதாவைக் கடுமையாக எதிர்க்கிறோம் என, அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார். இம்மசோதாவை ஆய்வுக்கு எடுக்கும்போது விரிவாகப் பேசலாம், வாய்ப்பு தருகிறேன் என, சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். ஆனால் ஜெயலலிதா பல்கலைக் கழகத்தை அண்ணாமலை பல்கலைக் கழகத்துடன் இணைக்கும் சட்டத்தை ஆரம்ப நிலையிலேயே எதிர்க்கிறோம் என்று சட்டசபை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் சட்டசபையில் எழுந்து நின்று அமளியில் ஈடுபட்டனர். அத்துடன் அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

பொன்முடி அறிவிப்பு
ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைப்பதில் எவ்விதக் காழ்ப்புணர்ச்சியும் இல்லை எனவும், தற்போதைக்கு ஜெயலலிதா பல்கலைக்கழகம் தேவையில்லை என்பதால், அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படும் எனவும், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

இணைக்கும் சட்ட முடிவு
இந்த நிலையில் இன்று சட்டசபை கூடியதும் 2021ஆம் ஆண்டு பல்கலைக்கழகங்கள் திருத்த மற்றும் நீக்கறவு சட்ட முன்வடிவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிமுகம் செய்தார். அத்துடன் 2021ஆம் ஆண்டு டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழக சட்டத்தினை நீக்கறவு செய்வதெனவும் அரசு முடிவு செய்துள்ளது என சட்ட முன்வடிவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைக்க எதிர்ப்பு
சட்டசபையை விட்டு வெளிநடப்பு செய்த அதிமுக எம்எல்ஏக்கள் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் மெரினா கடற்கரைக்கு செல்லும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை இணைப்பதற்கு எதிராக முழக்கமிட்டனர்.

அதிமுக எம்எல்ஏக்கள் விடுதலை
அவர்களை கலைந்துபோகும்படி காவல் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் வாலாஜா சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏக்களை காவல்துறையினர் கைது செய்து வேனில் ஏற்றி அழைத்துச் சென்றனர். திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்ட அனைவரும் பிற்பகலில் விடுவிக்கப்பட்டனர். ஜெயலலிதா பல்கலைக்கழகத்தில் அண்ணாமலைப்பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் சட்ட மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.












Click it and Unblock the Notifications