பொறுத்தது போதும் என பொங்கி எழுந்த 'குருநாதர்' செங்கோட்டையன்..அதிர்ந்து போன சிஷ்யர் எடப்பாடி பழனிசாமி
சென்னை: அதிமுகவில் 'பன்னெடுங்காலமாக' அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட கலகக் குரல்தான் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் போர்க்கொடி. அதுவும் எடப்பாடி பழனிசாமி 'முதல்வராக்கப்பட்ட' நாள் முதலே எப்போது வேண்டுமானாலும் செங்கோட்டையன் கலகம் செய்வார் என்பது எதிர்பார்ப்பாகவே இருந்தது.. இப்போது வெளிப்படையாகவே எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கலகக் குரல் எழுப்பிவிட்டார் செங்கோட்டையன்.
அதிமுகவில் மிச்சம் சொச்சம் இருக்கிற எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதிகளில் ஒருவர் கே.ஏ. செங்கோட்டையன். மேற்கு மண்டல அதிமுக தலைவர்களில் ஒருவராக ஈரோடு முத்துசாமிக்கு (இன்று திமுகவில் அமைச்சர்) சமமான சக்தியாக வலம் வந்தவர் கே.ஏ.செங்கோட்டையன். எம்ஜிஆர் மறைவுக்குப் பிந்தைய அதிமுகவில் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய தளபதிகளில் ஒருவராகவும் சசிகலா குடும்பத்தின் அதீத விசுவாசியாகவும் இருந்தவர்.

மேற்கு மண்டல அதிமுகவின் சீனியரான செங்கோட்டையனுக்கும் அரசியலில் பல்வேறு புகார்கள் மூலம் இறங்கு முகம் ஏற்பட்டது. செங்கோட்டையனின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான புகார்கள் அவரது குடும்பத்தினராலேயே ஜெயலலிதாவிடம் கொண்டு சேர்க்கப்பட அவரது அரசியல் அத்தியாயத்துக்கு முடிவுரை எழுதி வைத்திருந்தார் ஜெயலலிதா.
இந்த காலகட்டத்தில் அதிமுகவில் கிடுகிடுவென ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக, ஜெயலலிதாவின் ஐவர் குழுவின் தளபதிகளில் ஒருவராக விஸ்வரூபம் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் அதிமுக கிளைச் செயலாளராக பதவியைப் பெற்ற காலம் முதலே கே.ஏ. செங்கோட்டையன்தான் எடப்பாடி பழனிசாமிக்கு அரசியல் குருநாதர். செங்கோட்டையன் தயவில்தான் எத்தனையோ தேர்தல் தோல்விகள் சந்தித்த போதும் அதிமுக தலைமை எடப்பாடி பழனிசாமிக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பு கொடுத்தது.
அதே கே.ஏ. செங்கோட்டையனை ஓரம் கட்டி ஒதுக்கி வைத்த ஜெயலலிதாவால் சசிகலா குடும்பத்தினர் ஆதரவால் எடப்பாடி பழனிசாமி ஏற்றம் பெற்றார். இதன் உச்சம்தான் கூவத்தூரில் தமிழ்நாடு முதல்வராக்கப்பட்டார் எடப்பாடி பழனிசாமி. அப்போது கூட, சசிகலா குடும்பத்தின் முதல் சாய்ஸ் கே.ஏ.செங்கோட்டையன்தான். ஆனால் முதல்வர் பதவியை 'ஏலம்' எடுக்கிற அளவுக்கு சசிகலா குடும்பம் முன்வைத்த 'பிணைத் தொகை'யை செலுத்துகிற வல்லமை செங்கோட்டையனிடம் இல்லாமல் போனதால் எளிதாக எடப்பாடியால் முதல்வர் பதவியைப் பெற முடிந்தது என்பது அதிமுக உள்விவகாரங்களை அறிந்த அனைவருக்கும் நன்கு தெரிந்த ஒன்றுதான்.
தமிழகத்தின் முதல்வராக சசிகலா ஆதரவில் எடப்பாடி பழனிசாமி பதவியேற்ற பின்னர் அதிமுகவில் கே.ஏ.செங்கோட்டையனின் 2-வது இன்னிங்ஸ் தொடங்கியது. சசிகலா குடும்பத்தின் ஆதரவால் சிஷ்யர் எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் இடம் பிடிக்க தமக்கு இருந்த அத்தனை நெருக்கடிகளையும் 4 ஆண்டுகளில் தீர்த்துக் கொண்டார் செங்ஸ்.
இதனால்தான் இன்றளவும் சசிகலா குடும்பத்துக்கு உச்ச விசுவாசிகளில் ஒருவராக முன் நிற்பவராக இருக்கிறார் செங்கோட்டையன். இப்போது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கே.ஏ. செங்கோட்டையன் கலகக் குரல் எழுப்பி இருப்பது கூட சசிகலா குடும்பத்தின் குரல்தான் என்பதை எடப்பாடி பழனிசாமியும் எஸ்பி வேலுமணி உள்ளிட்டவர்களும் நன்கு அறிவர்.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி காலத்தில் அதிருப்தி குரல்கள் பலராலும் எழுப்பப்பட்ட போது எல்லாம் எல்லோரது பார்வையும் கே.ஏ.செங்கோட்டையன் பக்கம்தான் திரும்பும். ஏனெனில் செங்கோட்டையனால் அரசியலுக்கு கொண்டுவரப்பட்டு அதிமுகவையே தன்வசமாக்கிக் கொண்ட எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக நிச்சயம் செங்கோட்டையன் பொங்கி எழுவார் என்பதுதான். அந்த எதிர்பார்ப்பை கச்சிதமாக நிறைவேற்றி இப்போது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பகிரங்கமாக போர்க்கொடி தூக்கிவிட்டார் செங்கோட்டையன். 2026 சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் எதற்கும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசாத சீனியர் செங்கோட்டையன் இப்போது பிரளயமாக கிளம்பி இருக்கிறார் எனில் அதிமுகவில் இனி ஆட்டம் அதகளமாக இருக்கப் போகிறது என்றுதான் அர்த்தம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications