10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம்
சென்னை: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி மணியின் உடலுக்கு பெசன்ட் நகர் மின்மயானத்தில் இன்று இறுதிச் சடங்கு நடைபெறுகிறது. அப்போது தனது தாயின் உடலை அஜித்குமார் சுமந்து கொண்டு வந்தார்.
நடிகர் அஜித்தின் தாய் மோகினி, சென்னை பாலவாக்கத்தில் தனது மகனுடன் வசித்து வந்தார். அவருக்கு வயது மூப்பு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் நேற்று காலை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி மோகினி காலமானார். அவருக்கு வயது 84. இதையடுத்து அவரது உடல் பாலவாக்கத்தில் உள்ள அஜித்தின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அஜித்தின் தாயாரின் மறைவுக்கு திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள், பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
இதுகுறித்து முதல்வர் விஜய் தனது இரங்கல் கடிதத்தில் கூறியிருப்பதாவது: இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: அருமை நண்பர் திரு. அஜித் குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி அம்மையார் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.
வாழ்வில் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்த தாயாரை இழந்து வாடும் நண்பர் திரு. அஜித் குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு விஜய் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து அஜித்தின் தாயாரின் உடலுக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர் ராஜ்மோகன் அஞ்சலி செலுத்தினார். மோகினிக்கு அஜித் உள்பட அனில்குமார், அனுப்குமார் ஆகிய 3 மகன்கள் உள்ளனர்.
இதில் அஜித்குமார் கார் ரேஸிங்கிற்காக துபாயில் இருந்தார். தாய் இறப்பு குறித்து தகவலறிந்த அஜித் நேற்று இரவு துபாயில் இருந்து சென்னை வந்தார். அவர் சென்னை வந்ததும், முதல்வர் விஜய் , அஜித்தின் தாயாருக்கு அஞ்சலி செலுத்த மாலையுடன் சென்றார்.
வீட்டு வாசலில் அஜித்தை ஆரத்தழுவி ஆறுதல் தெரிவித்தார். விஜய்யுடன் நடிகை திரிஷாவும் வந்திருந்தார். இந்த நிலையில் 20 நிமிடங்கள் அஜித் வீட்டில் இருந்த விஜய் பின்னர் புறப்பட்டு நீலாங்கரை சென்றார். அப்போது அஜித்தும் ஷாலினியும் வாசல் வரை வந்து விஜய்யை வழியனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் அஜித் வருகைக்காக, தாயார் மோகினியின் இறுதி சடங்கு ஒத்தி வைக்கப்பட்டது. இன்று அவரது வீட்டில் இருந்து மோகினியின் உடல் ஊர்வலமாக பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு கொண்டு வரப்பட்டது. அப்போது அஜித் தனது தாயின் உடலை சுமந்து கொண்டு சென்றார். முகம் முழுக்க சோகத்துடனே இருந்தார்.
முன்னதாக தனது தாயார் இறப்பு குறித்து அஜித் குடும்பத்தினர் தங்களது அறிவிப்பில், "எங்களின் அன்புத் தாயார் திருமதி மோகினி மணி அவர்கள் இன்று தனது 85வது வயதில் அமைதியாக காலமானார் என்பதை மிகுந்த துயரத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவர் எங்கள் குடும்பத்தின் இதயமாக விளங்கியவர். எல்லையற்ற அன்பு, அமைதியான மனவலிமை, ஞானம் மற்றும் கண்ணியம் ஆகியவற்றின் உருவமாக இருந்தார். அவரது இருப்பும் அவர் எங்களுக்குக் கற்றுக் கொடுத்த வாழ்க்கை மதிப்புகளும் எங்கள் வாழ்வை வடிவமைத்தவை. அவை என்றும் எங்களுக்கு வழிகாட்டியாக இருக்கும்.
அவரது பிரிவு ஈடு செய்ய முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தியிருந்தாலும், அவருடன் பகிர்ந்து கொண்ட எண்ணற்ற இனிய நினைவுகள், அவர் எங்கள்மீது பொழிந்த அளவற்ற பாசம் மற்றும் அவரது அன்பாலும் கருணையாலும் அவர் தொட்டுச் சென்ற பலரின் வாழ்வுகள் எங்களுக்கு ஆறுதலாக உள்ளன.
இந்த கடினமான நேரத்தில் தங்களது பிரார்த்தனைகள், இரங்கல் செய்திகள் மற்றும் ஆறுதல் வார்த்தைகள் மூலம் எங்களுடன் நிற்கும் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். உங்கள் அன்பும் ஆதரவும் எங்கள் குடும்பத்திற்கு பெரும் ஆறுதலாக இருக்கிறது.
இந்த பேரிழப்பை ஏற்றுக்கொள்ள முயற்சித்து வரும் இந்நேரத்தில், எங்கள் குடும்பத்தின் தனியுரிமையையும் மனநிலையையும் மதித்து புரிந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். தொலைபேசி அழைப்புகள் மற்றும் செய்திகளுக்கு உடனடியாக பதிலளிக்க இயலாத நிலை இருக்கலாம்.
இறுதிச் சடங்குகள் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களின் முன்னிலையில் நடைபெறும். எங்கள் தாயாரின் ஆன்மா சாந்தியடைய தங்களது பிரார்த்தனைகளில் நினைவுகூருமாறு கேட்டுக் கொள்கிறோம். அவரது அன்பும் அரவணைப்பும் எங்களுடன் என்றும் நிலைத்திருக்கும். அனுப் குமார் • அஜித் குமார் • அனில் குமார்" என குறிப்பிட்டிருந்தனர்.












Click it and Unblock the Notifications