அட்சய திருதியை 2026: அரிசி பானையில் தங்க காசு வைத்தால் இவ்வளவு நன்மைகளா? செல்வம் பெருகும் ரகசியம்
சென்னை: அட்சய திருதியை 2026 வருகிறது.. தங்கம் வாங்கவும் மகாலட்சுமி பூஜை செய்யவும் உகந்த சுப முகூர்த்த நேரத்தில், குபேர யோகம் மற்றும் வற்றாத செல்வம் தரும் அட்சய பானை பூஜை முறைகளை அறிந்து வழிபடலாம். அது என்னென்ன வழிமுறைகள்? இந்நன்னாளில் தானம் செய்ய கூடிய பொருட்கள் என்னென்ன? அவைகளை இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.
சித்திரை மாதத்தில் அமாவாசைக்குப் பிறகு வரும் வளர்பிறை மூன்றாம் திதியான அட்சய திருதியை, வற்றாத செல்வம் மற்றும் அழியாத நற்பலன்களைத் தரும் மிக முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது.

அட்சயம் என்ற சொல்லே குறைவில்லாதது மற்றும் பெருகிக்கொண்டே இருப்பது என்று பொருள்படுவதால், இந்த நாளில் செய்யப்படும் நற்செயல்கள் மற்றும் பூஜைகள் பல மடங்கு பலனைத் தரும் என்பது ஐதீகம். விஷ்ணுவின் அவதாரமான பரசுராமர் அவதரித்ததும், மகாலட்சுமியின் அருள் நிறைந்திருப்பதும், குபேரன் இழந்த தனது செல்வத்தைத் திரும்பப் பெற்றதும் இந்தத் திருநாளில் தான் என்பதால், இது ஆன்மீக ரீதியாக மிகுந்த சிறப்புப் பெற்றுள்ளது.
இந்த நன்னாளில் மகாலட்சுமியின் அருளைப் பெற அட்சய பானை பூஜை செய்வது சிறப்பாகக் கருதப்படுகிறது. இதற்கு ஒரு வெண்கல அல்லது பித்தளை பானையை எடுத்து, அதில் குங்குமமிட்டு பச்சரிசியால் முழுமையாக நிரப்ப வேண்டும். பானையின் கழுத்துப் பகுதியில் மஞ்சள் துணியைக் கட்டி, பூமாலை மற்றும் துளசியால் அலங்கரிக்க வேண்டும்.
வசதி இருப்பவர்கள் ஒரு தங்க நகையை அரிசியின் மேல் வைக்கலாம் அல்லது பானையின் மீது மாலையாகத் தொங்கவிடலாம். பின்னர் பானையின் முன்னே கோலமிட்டு, பூக்கள் மற்றும் அட்சதை தூவி, நெய் தீபம் அல்லது கற்பூர ஆரத்தி காட்டி வழிபட வேண்டும். சர்க்கரைப் பொங்கலை நைவேத்தியமாகப் படைத்து அதைக் குழந்தைகளுக்குப் பகிர்ந்து அளிப்பதன் மூலம் இல்லத்தில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.
அட்சய திருதியை அன்று உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்காக ஒரு விசேஷமான வழிபாடும் சொல்லப்படுகிறது. ஆலமர இலையில் மகா மிருத்யுஞ்ஜய மந்திரத்தை ஜெபித்து, அந்த இலையை நோயாளியின் தலையணையின் கீழ் வைப்பதன் மூலம் நோய்கள் விரைவில் குணமாகும் என்று நம்பப்படுகிறது.
தானம் செய்வதற்கு மிகச்சிறந்த நாளாக அட்சய திருதியை கருதப்படுகிறது. அன்றைய தினம் ஏழைகளுக்கு உணவு, குடை மற்றும் நீர்மோர் வழங்குவது மறுபிறவியில் ராஜயோக வாழ்க்கையைத் தரும். ஆடைகளைத் தானம் செய்வதன் மூலம் நோய்கள் தீரும் என்றும், பழங்களைத் தானம் செய்வதால் உயர் பதவிகள் கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது.
கல்வியில் சிறந்து விளங்க விரும்புபவர்கள் நீர்மோர் மற்றும் பானகம் தானம் செய்யலாம். தானியங்களைத் தானம் செய்வது அகால மரணத்தைத் தடுக்கும் என்பதுடன், முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்வது தீராத வறுமையை நீக்கும். மேலும், தயிர் சாதம் தானம் செய்வதன் மூலம் பாவ விமோசனமும் வாழ்க்கையில் முன்னேற்றமும் ஏற்படும். இத்தகைய புனித நாளில் புண்ணிய நதிகளில் நீராடி இறைவனை வேண்டுவதன் மூலம் குறைவில்லாத செல்வத்தையும் ஆனந்தத்தையும் பெற முடியும்.












Click it and Unblock the Notifications