சம்பவ இடத்திலேயே நான் இல்லை.. நாட்டுக்காக உழைக்கிறேன்.. கோர்ட்டில் பரபரப்பை கிளப்பிய அமர் பிரசாத்!
சென்னை: பாஜக கொடிக் கம்பம் அகற்றப்பட்ட விவகாரத்தில், பாஜக மாநில நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்டோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், கோர்ட்டுக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அமர் பிரசாத் ரெட்டி பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பு பாஜக கொடிக் கம்பம் நிறுவப்பட்டது. அனுமதியின்றி கொடிக் கம்பம் வைக்கப்பட்டதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து,காவல் துறையினரும் மாநகராட்சி ஊழியர்களும் சென்று அந்த கொடிக் கம்பத்தை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டனர். அதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கொடிக் கம்பத்தை அகற்றுவதற்காக கொண்டு வரப்பட்ட ஜேசிபி வாகனத்தை பாஜகவினர் சேதப்படுத்தினர். இது தொடர்பாக கானாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, பாஜக மாநில நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர். பின்னர், அனைவரும் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தொடர்ந்து, அமர் பிரசாத் ரெட்டியை மேலும் இரண்டு வழக்குகளில் போலீசார் கைது செய்தனர். செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவின்போது வைக்கப்பட்டிருந்த விளம்பரத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் படத்தின் மீது பிரதமர் மோடியின் படத்தை ஒட்டியதாக அமர் பிரசாத் ரெட்டி மீது புகார் எழுந்திருந்தது. அந்தப் புகாரின் பேரில் சிறையில் உள்ள அமர் பிரசாத் ரெட்டியை கோட்டூர்புரம் போலீசார் கைது செய்தனர்.
அதேபோல, வள்ளுவர் கோட்டம் முன்பு பாஜக நடத்திய போராட்டத்தின்போது போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளரிடம் தகராறு செய்ததாக பதியப்பட்ட வழக்கில் நுங்கம்பாக்கம் போலீசாரும் அமர் பிரசாத் ரெட்டியை கைது செய்தனர். இதில் ஒரு வழக்கில் நவம்பர் 10ஆம் தேதி வரை அமர் பிரசாத்துக்கு நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
ஒரு நாள்: இந்நிலையில் பாஜக கொடிக் கம்பம் அகற்றப்பட்டபோது ஜேசிபி சேதப்படுத்தப்பட்டு, அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்த வழக்கு ஆலந்தூர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்டோரை ஐந்து நாட்கள் விசாரிக்க அனுமதியளிக்க வேண்டும் என தமிழக காவல் துறை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக தரப்பு வழக்கறிஞர், அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்டோர் மீது பொய் வழக்கு தொடரப்பட்டுள்ளது என வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களுக்குப் பின், அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்டோரை ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க தமிழக காவல் துறைக்கு அனுமதியளித்து ஆலந்தூர் மாஜிஸ்திரேட் சந்திரபிரபா உத்தரவிட்டார். அமர் பிரசாத் ரெட்டிக்கு மூச்சு திணறல் பிரச்சினையும், ரத்த கொதிப்பும் இருப்பதால் அவருக்கு சரியான நேரத்தில் மாத்திரைகளும், உடைகள் மாற்ற அனுமதியும் வழங்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. கோரிக்கையை ஏற்று, அதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
அமர் பிரசாத் பரபர பேட்டி: பின்னர், ஆலந்தூர் நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த அமர் பிரசாத் ரெட்டியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய அமர் பிரசாத் ரெட்டி, "தேசத்துக்காக உழைக்கிறோம். எல்லாமே பொய் வழக்குகள். ஒன்றிலும் ஆதாரம் கிடையாது. என் மீதான காழ்ப்புணர்ச்சியால் திட்டமிட்டு பொய் வழக்குகளை போட்டுள்ளனர்.
அமர் பிரசாத்தை தடுக்கணும், பாதயாத்திரை தடுக்கணும், பாஜக வளர்ச்சியை தடுக்கணும் என்பதுதான் திமுக அரசின் நோக்கம். சம்பவம் நடந்த இடத்திலேயே நான் இல்லை. நான் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீட்டிற்குள் இருந்தேன். என் மீது வழக்கு போட்டிருக்கிறார்கள். சிசிடிவி வீடியோ ஆதாரத்தைக் காட்டச் சொல்லுங்கள்" என ஆவேசமாகப் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications