பத்திரப்பதிவு கலக்குதே.. அப்ரூவல் இல்லாத மனைகள், போலி நில ஆவணம்.. பதிவுத்துறை கிடுக்கிப்பிடி.. சபாஷ்
சென்னை: கடந்த நிதியாண்டை ஒப்பிடும் போது பதிவுத்துறை வருவாய் இந்த ஆண்டு ரூ.821 கோடி அதிகரித்துள்ளதாக பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.
பதிவுத்துறையில் எத்தனையோ அதிரடிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.. 4 நாளைக்கு முன்புகூட பதிவுத்துறை தலைவர், , பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முக்கிய அறிவிப்பு ஒன்றினை விடுத்திருந்தார்.

வருவாய்த்துறை: அதில், "பதிவுக்கு வரும் சொத்துக்கு பட்டா உள்ளிட்ட வருவாய் துறை ஆவணங்கள் முறையாக உள்ளதா என்று பார்க்க வேண்டும். ஆவணங்களின் உண்மை தன்மையை சரிபார்க்க வேண்டும் என்று கூறி, பத்திரத்தை நிராகரிக்க கூடாது.
வருவாய் ஆவணங்களான பட்டா உள்ளிட்ட விஷயங்களை சரிபார்க்க வேண்டும்; பொதுமக்களை அலைகழிக்கக் கூடாது. விவசாய நிலங்களை மனைப்பிரிவாக பதிவு செய்யக்கூடாது. இந்த விஷயங்களில், சார்-பதிவாளர்கள் முறையாக செயல்படுவதை, மாவட்ட பதிவாளர்கள், டிஐஜிக்கள் உறுதி செய்ய வேண்டும்" என்றெல்லாம் அறிவுறுத்தியிருந்தார்.
வசதிகள்: அதேபோல, பத்திரப்பதிவு கட்டணத்தின் வருவாயை பெருக்கும் வகையிலும், பதிவுத்துறை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.. கடந்த 12ம் தேதியன்று ஒரே ஒருநாள் மட்டும், சார் - பதிவாளர் அலுவலகத்திற்கு, 150 டோக்கன்களாக உயர்த்தி வழங்கப்பட்டது. அதனால், பொது மக்கள் எந்த சிரமமும் இல்லாமல், ஆவணப்பதிவு மேற்கொள்ள வசதி செய்யப்பட்டது...
இறுதியில் அன்றைய ஒரே நாளில் மட்டும், 20,310 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு, இதுவரை இல்லாத அளவாக, ஒரே நாளில், 224.26 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டிருந்தது.
வருவாய்: இந்நிலையில், "பதிவுத்துறையில் இந்த நிதியாண்டில் ஜூலை 17-ம் தேதி வரை ரூ.5,920 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக, அமைச்சர் மூர்த்தி தெரிவித்திருக்கிறார்.
பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் துணைத்தலைவர்கள், மாவட்டப் பதிவாளர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்டோர் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பதிவுத்துறை பணியின் போது மறைந்த 2 பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை அமைச்சர் மூர்த்தி வழங்கினார்.
அதிக வருவாய்: தொடர்ந்து, அமைச்சர் பேசும்போது, "பதிவுத்துறையில் இந்த நிதியாண்டில் ஜூலை 17-ம் தேதி வரை ரூ.5,920 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டில் இதே நாளின் வருவாயுடன் ஒப்பிடும்போது ரூ.821 கோடி அதிகமாகும்.
அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் அங்கீகாரமற்ற மனைப்பிரிவை பதிவு செய்த அலுவலர்கள் கண்டறியப்பட்டு, அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அங்கீகாரமற்ற மனைப்பிரிவை பதிவு செய்யும் அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பதிவுத்துறை: அனைத்து துணை பதிவுத்துறை தலைவர்களும் தங்கள் எல்லைக்குட்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு திடீர் ஆய்வு செய்து பதிவுக்கு வரும் பொதுமக்களுக்கு எந்தவிதமான இடையூறும் இல்லாமல் ஆவணப்பதிவு செய்தல், ஆவணங்களை உரிய நேரத்தில் ஒப்படைத்தல், போலி மற்றும் அங்கீகாரமற்ற மனைப்பிரிவு பதிவுகளை தடுத்தல் போன்ற பணிகளை தொடர்ந்து கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications