மினி ஏர்போர்ட் மாதிரி இருக்கே.. அடிச்சுத் தூக்கப் போகுது அம்பத்தூர்! ஓபனாக போகும் புது பஸ் ஸ்டாண்ட்!
சென்னை: அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த மாத இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு வருமென தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னை சிஎம்டிஏ தலைவருமான சேகர்பாபு கூறியுள்ளார்.
இன்று சிஎம்டிஏ சார்பில் கட்டப்பட்டு வரும் சென்னை, அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையத்தின் இறுதி கட்ட பணிகள் குறித்தும், அம்பத்தூர், பானு நகரில் மேம்படுத்தப்பட்டு வரும் விளையாட்டு மைதானத்தின் முன்னேற்றப் பணிகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான சேகர்பாபு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு," தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் நிலுவையில் இருந்த கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு, இன்று சர்வதேச தரத்தில் அனைவரும் பாரட்டும் வகையில், மிகப்பெரிய பயணவியலின் பொக்கிஷமாக திகழ்கிறது.

அம்பத்தூர் பேருந்து நிலையம்
அதைத் தொடர்ந்து, கடந்த ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு, நின்றிருந்த குத்தம்பாக்கம் பேருந்து நிலையப் பணிகள், முதல்வர் வழிகாட்டுதலின்படி முழுமையாக முன்னேற்றம் அடைந்து, சிறப்பு வாய்ந்த பேருந்து நிலையமாக உருவெடுத்து வருகிறது. இந்த ஆண்டு 2026 தை மாதத்துக்குள் குத்தம்பாக்கம் பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நமது கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில், திருவிக நகரில் ஒரு பேருந்து நிலையமும், பெரியார் நகரில் இன்னொரு பேருந்து நிலையமும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
சென்னை சிஎம்டிஏ
இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, மகாபலிபுரத்தில் பிரம்மாண்டமான பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. செங்கல்பட்டிலும் அதேபோல் ஒரு மிகப்பெரிய பேருந்து நிலையம் உருவாக்கப்பட்டு வருகிறது. ஆவடியில் ரூ.32 கோடி செலவில் நவீன பேருந்து நிலையம் உருவாக்கப்படுகிறது. ஆலந்தூர் தொகுதியில், அந்த மாவட்டத்தின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பரிந்துரையின் அடிப்படையில் மேலும் ஒரு பிரம்மாண்ட பேருந்து நிலையம் அமைக்கப்படுகிறது.
தொழிற்பேட்டை பேருந்து நிலையம்
இவ்வாறு, சென்னை நகரத்தில் மட்டும் 11 பேருந்து நிலையங்கள் சுமார் ரூ.200 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒரு பகுதியாக, கலைஞர் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் 1967 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பேருந்து நிலையம் கிட்டத்தட்ட 58 ஆண்டுகளுக்குப் பிறகு, முதல்வர் ஆட்சிப் பொறுப்பேற்ற பின் முழுமையாக புதுப்பிக்கப்பட்டு வருகிறது.பயணிகளுக்கான வசதிகளை கருத்தில் கொண்டு, 11 கடைகள், தாய்மார்கள் பாலூட்டும் அறை, கழிப்பறை வசதிகள், உணவருந்தும் கூடம், போக்குவரத்து தொழிலாளர் ஓய்வறைகள் ஆகிய அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன.
நவீன பேருந்து நிலையம்
ஒரு நாளுக்கு 140 பேருந்துகள், சுமார் 1400க்கும் மேற்பட்ட நடவைகள் இந்த பேருந்து நிலையத்தை வந்துச் செல்ல உள்ளன. ஆகையால், இந்த அம்பத்தூர் பேருந்து நிலையத்தை இந்த மாத இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைக்க உள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். எங்கெல்லாம் மக்களுக்கு தேவைகள் உள்ளனவோ, எங்கெல்லாம் வாய்ப்புகள் ஏற்படுகின்றனவோ, அங்கெல்லாம் நவீனப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள முதல்வர் முழு ஈடுபாட்டுடன் நம்மை வழிநடத்தி வருகிறார். 58 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த பேருந்து நிலையம் புதுப்பிக்கப்பட்டிருப்பது இதற்கே ஒரு வரலாற்றுச் சான்றாகும்" என்றார்.












Click it and Unblock the Notifications