தமிழகம் வரும் அமித்ஷா.. முக்கிய தலைவர்களுடன் பாஜக பேச்சுவார்த்தை.. இறுதிவடிவம் பெறும் என்டிஏ?
சென்னை: இன்னும் சில வாரங்களில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வரவிருக்கும் நிலையில், அதிமுக - பாஜக கூட்டணி இறுதி வடிவம் பெறவுள்ளது. சென்னை வரும் அமித்ஷா, அன்புமணி, பிரேமலதா விஜயகாந்த், ஜான் பாண்டியன் மற்றும் ஏசி சண்முகம் உள்ளிட்டோரை சந்தித்து கூட்டணியை உறுதி செய்ய உள்ளதாக பேச்சுகள் எழுந்துள்ளன.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் தேர்தல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இன்னும் சில வாரங்களில் வாக்காளர் வரைவு பட்டியல் வெளியாக இருக்கும் சூழலில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் SIR பணிகளில் தீவிரம்காட்டி வருகின்றனர். அதேபோல் அதிமுக தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.

ஏப்ரல் மாதமே அதிமுக - பாஜக கூட்டணி இறுதி செய்யப்பட்டது. அதன்பின் அமித்ஷா தொடர்ச்சியாக தமிழ்நாடு வந்த நிலையில், பீகார் தேர்தலில் கவனம் செலுத்த தொடங்கினார். ஆனால் பீகார் தேர்தல் முடிவடைந்த பின், பாஜகவின் பார்வை தமிழ்நாடு நோக்கி திரும்பியது. கோவை வந்த பிரதமர் மோடி, பீகார் காற்று தமிழ்நாட்டிலும் வீசுகிறதோ என்ற எண்ணம் தோன்றியதாக கூறினார்.
இந்த நிலையில் அமித்ஷா அடுத்தடுத்து பல்வேறு சந்திப்புகளை நடத்தி வருகிறார். ஏற்கனவே முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸை சந்தித்த அமித்ஷா, நேற்று இரவு அண்ணாமலையை அழைத்து சந்திப்பு நடத்தினார். இதனால் தமிழக அரசியல் சூழல் குறித்து பல்வேறு ஆலோசனைகள் நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.
இந்த சூழலில் அமித்ஷா இன்னும் சில வாரங்களில் தமிழ்நாடு வரவுள்ளதாக கூறப்படுகிறது. சென்னை வரும் அமித்ஷா, அதிமுக - பாஜக கூட்டணியில் இறுதி வடிவம் கொடுப்பார் என்று கூறி வருகின்றனர். ஏற்கனவே பாஜக தரப்பில் அன்புமணி, பிரேமலதா விஜயகாந்த், கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன், ஏசி சண்முகம் உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன.
தற்போது ஓபிஎஸ் உடனும் பேச்சுவார்த்தையை முடித்திருப்பதால், விரைவில் டிடிவி தினகரனும் டெல்லி செல்வார் என்று கூறப்படுகிறது. இதையடுத்து அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணி இறுதி வடிவம் பெறும் என்று பார்க்கப்படுகிறது. ஏற்கனவே நயினார் நாகேந்திரன், என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறி சென்றவர்கள் மீண்டும் இணையலாம் என்று கூறி இருந்தார். இதனால் அமித்ஷாவின் வருகை கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications