நேரில் வாங்க அண்ணாமலை.. பாஜக மேலிடம் போட்ட திடீர் உத்தரவு.. சென்னையில் மோடியுடன் முக்கிய மீட்டிங்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் இன்று வெளியாகி உள்ளது. இதில் அண்ணாமலைக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில் தான் 2 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி நாளை சென்னையில் முக்கிய மீட்டிங் நடத்துகிறார். இந்த மீட்டிங்கில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று அண்ணாமலைக்கு பாஜக மேலிடம் உத்தரவிட்டுள்ளது. இதனால் அண்ணாமலை கேரளாவில் இருந்து சென்னைக்கு விரைகிறார்.
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக உள்ளது. பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால் வேட்பாளர் அறிவிப்பில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. இந்நிலையில் தான் ஒருவழியாக பாஜகவின் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. மொத்தமுள்ள 27 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை பாஜக மேலிடம் அறிவித்துள்ளது.

அதன்படி குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அவிநாசியில் மத்திய இணையமைச்சர் எல் முருகன், கோவை வடக்கில் வானதி சீனிவாசன், சென்னை மயிலாப்பூரில் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டவர்கள் போட்டியிடுகின்றனர்.
அண்ணாமலை போட்டியில்லை
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அண்ணாமலை கோவை மாவட்டத்தில் உள்ள ஏதாவது ஒரு சட்டசபை தொகுதியில் வாய்ப்பு கோரினார். ஆனால் கோவை மாவட்டத்தில் கோவை வடக்கு தொகுதியை மட்டுமே பாஜகவுக்கு, அதிமுக வழங்கியது.
அந்த தொகுதியிலும் வானதி சீனிவாசன் போட்டியிட ஆர்வம் காட்டியதால் அண்ணாமலை தேர்தல் போட்டியில் இருந்து விலகினார். வேறு தொகுதியில் அண்ணாமலையை களமிறக்க பாஜக மேலிடம் முயன்றும் அது பலனளிக்கவில்லை.
அண்ணாமலைக்கு பறந்த உத்தரவு
இந்நிலையில் தான் 2 நாள் பயணமாக பிரதமர் மோடி தமிழகம் வந்துள்ளார். இன்றும், நாளையும் அவர் தமிழகத்தில் இருக்க உள்ளார். நாளை பிரதமர் மோடி தலைமயைில் பாஜக மையக்குழு நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் சென்னை தனியார் ஹோட்டலில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஸ் கோயல், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணையமைச்சர் எல் முருகன், வானதி சீனிவாசன் உள்பட முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்த கூட்டத்தில் பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலைக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று கட்சி மேலிடம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கேரளாவில் இருந்து விரையும் அண்ணாமலை
தற்போது அண்ணாமலை கேரளாவில் இருக்கிறார். கேரளாவில் வரும் 9 ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அவர் கேரளாவில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இப்படியான சூழலில் தான் நாளை பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் பாஜக மையக்குழு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கும்படி அண்ணாமலைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அண்ணாமலை இன்று இரவு கேரளாவில் இருந்து சென்னை புறப்பட உள்ளார்.
மோடியின் பிளான் என்ன?
முன்னதாக பிரதமர் மோடி 2 நாள் பயணமாக இன்று பிற்பகல் சுமார் 3 மணியளவில் சென்னைக்கு தனி விமானத்தில் வந்தார். அங்கிருந்து பிரதமர் மோடி புதுச்சேரிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டுள்ளார். புதுச்சேரி சட்டசபை தேர்தலையொட்டி மதியம் 3 மணியளவில் அஙகுள்ள அஜந்தா சிக்னல் சந்திப்பு முதல் அண்ணா சதுக்கம் வரை 2 கிலோமீட்டர் தொலைவுக்கு பிரதமர் மோடி ரோடு ரோடுஷோ நடத்துகிறார். அதன்பிறகு அவர் பாஜக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார்.
பிறகு சென்னை வரும் மோடி தனியார் ஹோட்டலில் தங்க இருக்கிறார். பிறகு நாளை தமிழக பாஜக தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்த கூட்டத்தில் தமிழக தேர்தல் பணி உள்பட பல்வேறு விஷயங்கள் பற்றி விவாதிக்க உள்ளார். இந்த கூட்டத்தில் பங்கேற்க தான் அண்ணாமலைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக பாஜகவில் வேட்பாளர் பட்டியல் தாமதம் காரணமாக சென்னையில் திட்டமிடப்பட்ட பிரதமர் மோடியின் ரோடுஷோ - பிரசாரம் ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications