அண்ணாமலைக்கு இதே வழக்கமாக போச்சு.. நித்தம் நித்தம் பொய்களை கூறுகிறார்.. துரைமுருகன் அட்டாக்!
சென்னை: காமராஜருக்கு பிறகு திமுக ஆட்சியில் வெறும் 5 அணைகள் தான் கட்டப்பட்டுள்ளது என்று அண்ணாமலை பேசிய நிலையில், நித்தம் நித்தம் உண்மைக்கு மாறான செய்திகளை பேசி வம்பில் மாட்டிக் கொள்வதை அண்ணாமலை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார். அதில் ஒன்று தான் இந்த தவறான குற்றச்சாட்டு என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
"என் மண், என் மக்கள்" என்ற பெயரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டுள்ளார். அவர் நேற்று திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் பாதயாத்திரை சென்று மக்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறுகையில், "திமுக அரசு எத்தனை டாஸ்மாக் கடைகளை திறக்கலாம் என்று தான் யோசிக்கிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு 2000 டாஸ்மாக் கடைகள் இருந்தன. ஆனால் இன்று 5500 டாஸ்மாக் கடைகள் இருக்கின்றன.

பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் எத்தனை அணை கட்டலாம் என்று யோசித்து, 9 ஆண்டுகளில் 12 அணைகளை கட்டினார். காமராஜருக்குப் பின் வந்த ஆட்சியாளர்கள் விவசாயத்துக்கு எதுவும் செய்யவில்லை. திமுக இன்று ஆறாவது முறையாக ஆட்சியில் இருக்கிறது. விவசாயத்துக்கு அணை தேவை என்று நாம் நினைப்போம். ஆனால், திமுகவுக்கு அணை கட்டாமல் இருந்தால் தான் மணல் அள்ள முடியும். தமிழ்நாடு முழுவதும் ஆறுகளில் மணல் அள்ளுகிறார்கள்" என்று பேசினார்.
இந்த நிலையில், திமுக பொதுச்செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், அண்ணாமலை நித்தம் நித்தம் உண்மைக்கு மாறான செய்திகளை பேசி வம்பில் மாட்டிக் கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார் என்று விமர்சித்துள்ளார். இது தொடர்பாக துரைமுருகன் கூறியதாவது:- தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் திராவிட முன்னேற்ற கழக ஆட்சியின் மீது ஒரு குற்றச்சாட்டு வைத்திருப்பதை இன்று (23.9.2023) வெளிவந்த "இந்து தமிழ்த்திரை" நாளிதழ் ஒரு செய்தியாக வெளியிட்டிருக்கிறது.
தமிழகத்தை 9 ஆண்டுகள் ஆட்சி செய்த காமராஜர் விவசாயத்தை பாதுகாக்க 12 அணைகளை கட்டினார். ஆனால், ஆறாவது முறையாக ஆட்சி செய்யும் திராவிட முன்னேற்றக் கழகம் 5 அணைகளை மட்டுமே கட்டியுள்ளது என்று ஒரு தவறான குற்றச்சாட்டை அண்ணாமலை அவர்கள் திமுக மீது சுமத்தி இருக்கிறார். நித்தம் நித்தம் உண்மைக்கு மாறான செய்திகளை பேசி வம்பில் மாட்டிக் கொள்வதை நண்பர் அண்ணாமலை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார். அதில் ஒன்று தான் இந்த தவறான குற்றச்சாட்டு.
பெருந்தலைவர் காமராஜர், கிருஷ்ணகிரி அணை, சாத்தனூர் அணை, வைகை அணை, மணிமுத்தாறு அணை போன்ற அணைகளை கட்டினார் என்பதில் மாறுபட்ட கருத்தில்லை. ஆனால், கழக ஆட்சியில் 5 அணைகளை மட்டுமே கட்டினார்கள் என்று அண்ணாமலை அவர்கள் சொல்வது ஜமக்காலத்தில் வடிகட்டிய பொய். நம்பியாறு அணை, பொய்கையாறு அணை, கொடுமுடியாறு அணை, கடனா அணை, இராமநதி அணை, பாலாறு பொருந்தலாறு அணை,
மருதாநதி அணை, பரப்பலாறு அணை, வடக்கு பச்சையாறு அணை , பிளவுக்கல் அணை, மோர்தானா அணை, அடவிநயினார் அணை, ராஜாதோப்பு அணை, ஆண்டியப்பனூர் ஓடை அணை, சாஸ்தா கோயில் அணை, குப்பநத்தம் அணை, இருக்கன்குடி அணை, செண்பகத்தோப்பு அணை, நங்காஞ்சியார் அணை, நல்லதங்காள் ஓடை அணை, மிருகண்டாநதி அணை, வரதாமநதி அணை, வரட்டாறு வள்ளிமதுரை அணை என 40 க்கும் மேற்பட்ட அணைகளை கட்டியது கலைஞர் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி.
ஆளுங்கட்சியின் மீது எதிர்க்கட்சி குற்றம் குறைகளை சொல்வது தவறில்லை. அவ்வாறு சொல்வதற்கு முன், சொல்கிற குற்றச்சாட்டு உண்மையா என்பதை ஒரு முறை பரிசீலனை செய்து பார்த்துக் கொள்ள வேண்டும். என்னுடைய நீண்டகால அனுபவத்தில் நண்பர் அண்ணாமலைக்கு நான் சொல்கிற ஒரு யோசனையாகும். இல்லாவிட்டால், அவர் கூறும் குற்றச்சாட்டு யாவும் புஸ்வானமாகிவிடும். இவ்வாறு துரைமுருகன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications