அப்பல்லோவின் சாப்பாட்டு கணக்கு சரியா.. யாராவது விளக்கம் தருவார்களா
அப்போலோ வெளியிட்ட உணவு விலை பட்டியல் உண்மைதானா? என தெரியவில்லை.
சென்னை: நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலா தாக்கல் செய்த வாக்குமூலம் வெளியான தகவல் உடனடியாக மறுக்கப்பட்ட நிலையில் ஜெயலலிதா ரூ. 1.17 கோடி அளவுக்கு சாப்பிட்டதாக அப்பல்லோ தாக்கல் செய்துள்ள தகவல் குறித்து யாரும் விளக்கம் அளிக்க முன்வராமல் இருப்பது பொதுமக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகத்தான் விசாரணை ஆணையமே அமைக்கப்பட்டது. இதனை அமைத்தது தமிழக அரசுதான். அதாவது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு.
ஆனால் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை வளையத்துக்குள் இருப்பவர்களில் சசிகலா தரப்பை தவிர, மிக முக்கியமானவர்கள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், அமைச்சர் விஜயபாஸ்கரும். இவர்கள் மீதான விசாரணை விரைவில் நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. முன்பு சசிகலாவிடம் ஆணையம் கடந்த மார்ச் மாதம் விசாரணை நடத்தியது.

தவறான தகவல்கள்
அதாவது மரணம் தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது "சசிகலா அளித்த வாக்குமூலம் என வெளியான தகவல்கள் தவறானது என விசாரணை ஆணையம் தெரிவித்திருந்தது. அதாவது முழு விசாரணை நடந்து முடியும் முன்னரே இந்த கருத்தை கூறியது. ஆனால் , ஜெயலலிதா உணவு பட்டியல் குறித்து அப்போலோ நிர்வாகம் வெளியிட்டுள்ளதற்கு இதுவரை ஆணையம் எந்த கருத்தையும் சொல்லாமல் உள்ளது.

தொற்று நோய்
ஆணையம் மட்டுமல்ல, ஆஸ்பத்திரியில் இருந்ததாக சொல்லப்பட்டவர்கள் யாருமே இதை பற்றி எந்தவித கருத்தையும் சொல்லாமல் இருக்கின்றனர். "எங்களை உள்ளே விடவில்லை, தொற்று ஏற்படும் என்று எங்களை தடுத்துவிட்டார்கள்" என்று சொன்னவர்களும் இதை பற்றி எதுவுமே பேசவில்லை.

ஓ. பன்னீர்செல்வம்
அம்மா, இட்லி, சட்னி சாப்பிட்டாங்க என்று சொன்னவர்களும் கருத்தை சொல்லவில்லை. டாக்டர் என்ற முறையில் கூடவே இருந்த அமைச்சர் விஜயபாஸ்கரும், பொறுப்பு முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வமும் கூட இதை பற்றி எதுவும் கூறாமல் உள்ளனர்.

அனுமதிக்கவில்லை
யாரையுமே உள்ளே அனுமதிக்கவில்லை என்றால், அவரது உடல்நிலை மோசமாக உள்ளது என்றுதானே அர்த்தம்? தொற்று ஏற்பட்டு விடும் என்று டாக்டர்கள் எச்சரிக்கிறார்கள் என்றால் உடல்நலம் தேறவில்லை என்றுதானே அர்த்தம்? இறுதிவரை எந்த அமைச்சரும், பிரமுகரும், எம்எல்ஏக்களும், எம்பி.களும் யாருமே ஜெயலலிதாவை பார்க்கவில்லை என்றுதானே சொல்கிறார்கள்?

மௌனம் காப்பது ஏன்?
அப்படியென்றல் கடைசிவரை ஆபத்தான நிலையிலோ அல்லது உடல்நலம் தேறாத நிலையிலோதானே ஜெயலலிதா இருந்திருக்கிறார். அப்படி இருப்பவர் எப்படி கோடி ரூபாய்க்கு சாப்பிட்டிருப்பார் என்று ஒருத்தர் கூட இதுவரை பேசாமல் மௌனம் காப்பது ஏன் என தெரியவில்லை.

இத்தனை கோடியா?
ஜெயலலிதாவின் ஆவி கூட மன்னிக்காது என்று அதிமுக தலைவர்கள் பலர் கூறி வந்தனர். எத்தனையோ ஏழைகளின் பசியை போக்கி வாழ்வில் ஒளிஏற்றி வைத்த ஜெயலலிதா, நோயுற்ற நிலையிலும், சாகும் தருவாயிலும், இப்படி கோடிக்கணக்கில் சாப்பிட்டார் என்று அப்போலோ சொல்வதை கேட்டு அமைதியுடன் இருப்பவர்களை மட்டும் அவரது ஆவி எப்படி மன்னிக்கும்? என்ற கேள்வியை மக்கள் எழுப்புகின்றனர்.

விளக்கம் அளிப்பார்களா?
ஜெயலலிதாவின் சாப்பாட்டுக் கணக்கு மக்கள் மத்தியில் பெரும் சலசப்பை ஏற்படுத்தியிருப்பது உண்மை. எனவே இதுதொடர்பாக ஆணையமோ அல்லது அப்பல்லவோ அல்லது அரசோ அல்லது அதிமுகவோ விளக்கம் அளித்தால் நலம் என்பது மக்களின் கருத்தாகும்.












Click it and Unblock the Notifications