சபாநாயகரானார் அப்பாவு... துணை சபாநாயகரானார் கு.பிச்சாண்டி.. முறைப்படி இருவரும் பதவியேற்றனர்..!
சென்னை: தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகராக இன்று முறைப்படி பதவியேற்றுக் கொண்டார் திமுகவின் அப்பாவு. இவர் நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்றவர்.
Recommended Video
இதேபோல் தமிழக சட்டப்பேரவையின் துணை சபாநாயகராக திமுகவின் கு.பிச்சாண்டி இன்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றவர்.

இவர்கள் இருவருமே போட்டியின்றி சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பதவிகளுக்கு தேர்வானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சட்டப்பேரவை நிகழ்வுகளில் நீண்ட கால அனுபவம் உடையவர் அப்பாவு. கடந்த 1996-ம் ஆண்டு தமிழ்மாநில காங்கிரஸ் சார்பில் முதல்முறையாக எம்.எல்.ஏ.வாக வெற்றிபெற்று சட்டமன்றத்திற்குள் நுழைந்தார். இதற்கு பிறகு கடந்த 2001-ம் ஆண்டு சுயேச்சையாகவும், 2006-ம் ஆண்டு திமுக சார்பிலும் ராதாபுரம் தொகுதியில் அப்பாவு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வானார்.
15 ஆண்டுகாலம் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் என்பதால் அவையை திறமையாக வழிநடத்திச் செல்வார் என்ற நம்பிக்கையில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இந்த வாய்ப்பை அவருக்கு வழங்கியுள்ளார்.
இதேபோல் துணை சபாநாயகராக பதவியேற்கும் கு.பிச்சாண்டி இதுவரை 8 முறை தேர்தலில் போட்டியிட்டு 6 முறை வென்றவர். அதன்படி பார்த்தால் 30 ஆண்டுகாலம் சட்டமன்ற அனுபவம் உடையவர். தற்காலிக சபாநாயகராக இருந்து நேற்று எம்.எல்.ஏ.க்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்த இவர், கடந்த 1996-2001 திமுக ஆட்சியில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கு.பிச்சாண்டியை பொறுத்தவரை அதிர்ந்து பேசாதவர், எல்லோரிடத்திலும் கனிவுடன் நடந்துக் கொள்ளக் கூடியவர் என்பது அவரது கூடுதல் சிறப்பு.
இதனிடையே அவை முன்னவராக துரைமுருகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அவை முன்னவர் துரைமுருகனும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் சபாநாயகர் அப்பாவுவை அவரது இருக்கைக்கு அழைத்துச் சென்று அமர வைத்தனர்.
வேகமாக செயல்படும் சபாநாயகரும், நிதானமாக செயல்படும் துணை சபாநாயகரும் பேரவையை திறம்பட வழிநடத்துவார்கள் என துரைமுருகன் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications