"இதை கேளுங்க".. டெல்லியில் சீறிய அமித் ஷா! புருவத்தை உயர்த்திய எடப்பாடி! "அதான்" விரிசலுக்கு காரணம்?
சென்னை: எதிர்க்கட்சி துணை தலைவர் எடப்பாடி பழனிசாமி அமித் ஷா குறித்து பேசிய விஷயங்கள் அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரின் இந்த பேச்சுக்கு பின்பாக டெல்லியில் நடந்த மீட்டிங் ஒன்றுதான் காரணம் என்கிறார்கள்.
நேற்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம்.. சென்னை வந்த அமித் ஷாவை ஏன் சந்திக்கவில்லை என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு காட்டமாக பதில் அளித்த எடப்பாடி, அதிமுக பாஜக என்பது வேறு வேறு கட்சிகள். அதிமுகதான் தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சி. பாஜக என்பது தேசிய கட்சி. அதிமுக என்பது பிரதான மாநில கட்சி.
அப்படி இருக்கும் போது அமித் ஷா தமிழ்நாடு வரும் போதெல்லாம் அமித் ஷாவை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் ஒவ்வொருமுறை வரும்போதெல்லாம் போய் சந்திக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டு உள்ளார்.

ஏன் இப்படி பேசினார்?
அமித் ஷா சென்னை வரும் போதெல்லாம் அவரை சந்திக்க வேண்டும் என்று அவசியம் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி வெளிப்படையாக கூறி உள்ளார். அதோடு இல்லாமல், தமிழ்நாட்டில் நாங்கள்தான் பிரதான எதிர்க்கட்சி என்றும் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக சொல்லிவிட்டார்.பாஜக நிர்வாகிகள் சிலர் நாங்கள்தான் எதிர்க்கட்சி. நாங்கள்தான் எதிர்க்கட்சி போல செயல்படுகிறோம் என்று சொல்லிய நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி இப்படி சொல்லி இருக்கிறார். அவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் என்கிறார்கள்.

ஏன் சந்திக்கவில்லை
முன்னதாக அமித் ஷாவை எடப்பாடி சந்திக்க நேரம் கேட்டார். ஆனால் அதற்கு நேரம் கொடுக்கப்படவில்லை என்று கூறப்பட்டது. ஆனால் இதை எடப்பாடி பழனிசாமி மறுத்து உள்ளார். அப்படி எதுவும் நடக்கவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இந்த நிலையில் அமித் ஷாவை சந்திக்க எடப்பாடி முயலாததற்கு என்ன காரணம் என்று விசாரித்ததில், இருவருக்கும் இடையில் டெல்லியில் நடந்த மீட்டிங் ஒன்றுதான் இதற்கு காரணம் என்றார்கள் அதிமுக நிர்வாகிகள். அது என்ன மீட்டிங்?

டெல்லி மீட்டிங்
கடந்த செப்டம்பர் மாதம் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றார். அந்த மாதம் 20ம் தேதி அவர் அமித் ஷாவை டெல்லியில் சந்தித்தார். இந்த சந்திப்பு இன்று 20 நிமிடம் நடைபெற்றது. இந்த சந்திப்பில் எடப்பாடி பழனிசாமியுடன் எஸ்பி.வேலுமணி, சிவி சண்முகம் ஆகியோரும் அமித்ஷாவை சந்தித்தனர். இதில் ஆளும் கட்சியில் இருக்கும் முக்கிய அமைச்சர்கள், தலைவர்கள் மீதான புகார்கள் அடங்கிய கோப்புகளை எடப்பாடி அமித் ஷாவிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் ஆளும் கட்சிக்கு எதிராக அமலாக்கத்துறை, சிபிஐ ரெய்டு விட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, அதற்கான முக்கிய பைல்ஸ்களை பகிரும் விதமாக இந்த சந்திப்பு நடத்தப்பட்டு இருக்கலாம் என்று அதிமுக தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கோரிக்கை
இந்த சந்திப்பில் அதிமுக இணைந்து இருக்க வேண்டும் என்று அமித் ஷா கூறியதாக தெரிகிறது. அதாவது இரண்டு தலைவர்களும் இணைந்து இருங்களேன். இணைந்து இருந்தால் நன்றாக இருக்குமே. கட்சியும் வலுவாக இருக்குமே என்று கூறியதாக தெரிகிறது. கட்சி பிரச்சனை இப்போது முக்கியம் இல்லை. லோக்சபா தேர்தலில் வெற்றி முக்கியம். அதனால் தேர்தல் வெற்றி மீது கவனம் செலுத்துங்கள். உட்கட்சி பிரச்சனை காரணமாக தேர்தலில் தோல்வி அடைய கூடாது என்று அமித் ஷா கூறியதாக தெரிகிறது.

எடப்பாடி
இதை கேட்டதும் சட்டென எடப்பாடியின் புருவம் உயர்ந்ததாக கூறப்படுகிறது. இதற்கு எடப்பாடி தரப்பு.. அதிமுகவில் வேறு தலைவர்கள் யாரும் இல்லை. பெரும்பான்மை ஆதரவு எங்களுக்கே இருக்கிறது. அதனால் உட்கட்சி பிரச்சனையால் வாக்குகள் சிதறும் வாய்ப்பே இல்லை என்று உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. அதாவது அமித் ஷா சொன்ன அறிவுரையை அப்போது எடப்பாடி மறுத்து இருக்கிறார். இதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான் இப்போது ஏற்பட்டு இருக்கும் விரிசலுக்கும் காரணம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். ஆனால் எடப்பாடி தரப்பு ஆதரவு நிர்வாகிகளோ .. அதெல்லாம் இல்லை பாஸ். அவர் தனியார் நிகழ்ச்சிக்கு வந்து இருக்கிறார். எல்லா டைமும் போய் பார்க்க முடியுமா? பிரச்சனை எல்லாம் எதுவும் இல்லை என்று மறுத்து உள்ளனர்.












Click it and Unblock the Notifications