"வேலி தாண்டுமா வெள்ளாடு".. திமுக கூட்டணியில் இந்த கட்சி சேருமா.. அப்ப "அவங்க.. அனலடிக்கும் அறிவாலயம்
திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம்பெற போகின்றன என ஆலோசனை நடக்கிறதாம்
சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று, மாவட்ட செயலாளர்கள் கூட்டம், அண்ணா அறிவாலயத்தில் நடந்து வருகிறது.. கூட்டணி முடிவுகள் தொடர்பாக பல்வேறு விஷயங்கள் இன்றையதினம் ஆலோசிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
எம்பி தேர்தலுக்கு தமிழக கட்சிகள் வேகம் எடுத்துள்ளன.. அதற்கான அறிகுறிகள் களத்தில் தென்பட துவங்கி விட்டது.. கடந்த 6 மாத காலமாகவே இதற்கான அடித்தளத்தை தமிழக பாஜக முன்னெடுத்து வரும்நிலையில், அதிமுகவும் கோதாவில் குதித்துவிட்டது.
ஒருங்கிணைந்த அதிமுகவை பாஜக மேலிடம் விரும்புவதால், அதற்கான அறிவுரைகளும் சிக்னல்களும் கடந்த 4 மாத காலமாகவே, தொடர்ந்து எடப்பாடிக்கு தரப்பட்டு வந்ததாக கூறப்பட்ட நிலையில், அதை எடப்பாடி கண்டுகொள்ளாமலேயே உள்ளார்..

திருமா
பாஜக எதிர்ப்பு என்ற விஷயத்தில் எடப்பாடி பழனிசாமி எந்த அளவுக்கு மேலிடத்தை சமாளிப்பார் என்பதுதான் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக எழுந்துள்ளது. ஒருவேளை பாஜகவை எதிர்க்க நேர்ந்தால், எடப்பாடியை கழட்டிவிட்டு, 3வது அணி அமைக்கவும் பாஜக, தயாராகிவிடும் என்கிறார்கள்.. எடப்பாடி பழனிசாமி நாமக்கல் கூட்டத்தில் மெகா கூட்டணி பற்றிய அறிவிப்பை வெளியிட்டார்.. ஆனால், அதில் பாஜக இடம்பெறாது என்று எடப்பாடி சொல்லவேயில்லை.. அந்தவகையில், பாஜகவும் அவர் தலைமையிலான கூட்டணியில் இடம்பெறும் என்பதாகவே பொருள்பட பேசினார்.

பச்சமுத்து
அதன்படி பார்த்தால் பாஜக + அதிமுக + பாமக + தேமுதிக + அமமுக + புதிய தமிழகம், ஐஜேகே, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய 7 கட்சிகளும் ஒரே அணியில் நின்று திமுகவை எதிர்க்கக்கூடம், இதைதவிர மேலும் பல அமைப்புகளும் அதிமுக + பாஜக கூட்டணிக்கு ஆதரவு அளிக்க தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. இதையெல்லாம் மனதில் வைத்தே எடப்பாடி பழனிசாமி மெகா கூட்டணி என்ற வியூகத்தை வகுத்துள்ளார் என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள்.. இன்னொரு யூகமும் பரபரத்தது.. திமுக கூட்டணியில், காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள் சலசலப்புடன் உள்ளதால், அவர்களும் அதிமுக பக்கம் வரக்கூடும் என்ற தகவலும் கசியவிடப்பட்டது.

திருமாவளவன்
இது திமுக கூட்டணியையே அசைக்க பார்த்தது.. இப்படி தகவலை பரப்பியது எடப்பாடி பழனிசாமியின் ஐடி விங் தரப்பு என்றே இன்னொரு தகவலும் கிளம்பியது.. ஆனால், சரியான நேரத்தில் திருமாவளவன் என்ட்ரி தந்தார்.. இப்படி ஒரு யூகம் கிளம்பி வரும்நிலையில், "அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு இல்லை.. செல்வாக்கும் இல்லை, அதிமுக கரைந்து போய்விட்டது.. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி பலவீனப்பட்டு போய்விட்டார்" என்று திருமாவளவனே ஓபனாக சொல்லிவிட்டார்.. அதேசமயம், திமுகவுடன்தான் நாங்கள் இருக்கிறோம் என்பதையும் அந்த பேச்சில் அழுத்தமாக வலியுறுத்திவிட்டார். இதே கருத்தை காங்கிரஸ் அழகிரியும் தெளிவுபடுத்தியிருந்தார்.

லட்டு சீட்டுகள்
இருந்தபோதிலும், திமுக கூட்டணியில் யார் இடம்பெற போகிறார்கள் என்ற லேசான சந்தேகம் இன்னமும் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது.. இதற்கு காரணம், சீட் எண்ணிக்கையை அதிகமாக கேட்போம் என்று அழகிரி இப்போதே ஆரம்பித்துவிட்டார்.. கடந்த முறை 10 சீட்டுகளை திமுக லட்டுபோல தூக்கி காங்கிரசுக்கு தந்திருந்தது.. ஆனால், இந்த முறை டபுள் டிஜிட்டுக்கு வாய்ப்பு இல்லை என்கிறார்கள்.. அதனால்தான், அழகிரி தன் கூட்டணி கணக்கை இப்போதே போட ஆரம்பித்துள்ளதாக தெரிகிறது. விசிகவை பொறுத்தவரை, பாமக கூட்டணிக்குள் வராதவரைக்கும் எந்த பிரச்சனையும் இல்லை.. ஒருவேளை பாமக உள்ளே வந்தால் விசிக நிலைப்பாடு என்னாகும் என தெரியவில்லை..

DR ராமதாஸ்
ஆனால், பாமகவை திமுக இதுவரை வெளிப்படையாக ஆதரிக்கவில்லை என்பதையும் நாம் குறிப்பிட்டாக வேண்டும்.. காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், விசிக போன்ற கட்சிகளுக்கு திமுக தலைமையுடன் முரண்பாடுகளும், அதிருப்திகளும், கருத்து வேறுபாடுகளும் இருக்கின்றன என்பதை மறுக்க முடியாது என்றாலும், பாஜகவை எதிர்க்க வேண்டும் என்ற புள்ளியில் இந்த அத்தனை கட்சிகளும் ஒன்றுபட்டு முடிவெடுத்துள்ளதையும் நாம் குறிப்பிட வேண்டி உள்ளது..

முறியுமா கூட்டணி
இப்படிப்பட்ட குழப்பமான சூழலில்தான், இன்றைய தினம் முதல்வர் ஸ்டாலின் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்துகிறார்.. திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், சென்னை அறிவாலயத்தில் இன்று காலை 10:00 மணிக்கு நடக்கிறது.. முதல்வர் தலைமையில்தான் இந்த கூட்டம் நடக்கிறது.. எம்பி தேர்தல் தொடர்பாகவும், அதற்கான கூட்டணி திட்டம் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. திமுக கூட்டணியில், எந்த கட்சியை கூடுதலாக சேர்க்கலாம் என்பது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசித்து முடிவு செய்யப்பட உள்ளதாக தெரிகிறது.

அண்ணா அறிவாலயம்
இதைதவிர, மாவட்டங்களில், எம்எல்ஏக்களுக்கும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது.. அதேபோல், அமைச்சர்களுக்கும், மாவட்ட செயலர்களுக்கு இடையேயும் அரசு பணி கான்ட்ராக்ட் தொடர்பாக சைலண்ட் பஞ்சாயத்து ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது.. இதை பற்றியெல்லாம் இன்றைய கூட்டத்தில் பேசி முடிவெடுப்பார்கள் என தெரிகிறது. எனினும், திமுக கூட்டணியில் யார் யார் இடம்பெற போகிறார்கள்? என்பதை கூட்டணி கட்சிகள் மட்டுமல்லாமல், எதிர்க்கட்சிகளும் ஆர்வத்துடன் அண்ணா அறிவாலயத்தை எதிர்நோக்கி உள்ளன..!!

டீப் ஆலோசனை
அந்தவகையில் காலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஆரம்பமானது.. திமுகவில் புதிய நிர்வாகிகள் நியமனத்திற்குபிறகு முதல் முறையாக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடக்கிறது.. இந்த கூட்டத்தில் திமுகவின் மாவட்ட செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் என சுமார் 100 பேர் பங்கேற்றுள்ளனர். மேலும், பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு பிறந்தநாள் நிறைவு விழா கொண்டாட்டம் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. 2024ம் ஆண்டில் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் பணிகள் குறித்தும் ஆலோசனை நடைபெறுகின்றன..












Click it and Unblock the Notifications