ஸ்டாலின் பக்கம் திரும்பிய சீமான்.. "எந்த கொம்பனும் குறைசொல்ல முடியாத ஆட்சி இதுவா? சகோதரா ஆம்ஸ்ட்ராங்
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலையில், காவல்துறையை தமது நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்ன பதில் கூறப்போகிறார்? இதுதான் இந்தியாவே திரும்பிப்பார்க்கும் திராவிட மாடலா? இதுதான் முதலமைச்சர் கூறிய எந்த கொம்பனும் குறைசொல்ல முடியாத ஆட்சியா? என்று அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பியிருக்கிறார் சீமான்.
சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்மநபர்கள் வெட்டிக் கொல்லப்பட்டார்.. துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்த ஆம்ஸ்ட்ராங் வயது 52 ஆகும்.

கண்டனம்: பகுஜன் சமாஜ் கட்சியில் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, விசிக தலைவர் திருமாவளவன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அந்தவகையில், இப்படுகொலை சம்பவத்திற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கலும், தமிழக அரசுக்கு கண்டனமும் தெரிவித்துள்ளார். இது குறித்த எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:
பெரம்பூர்: "பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் சகோதரர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் சென்னை பெரம்பூரிலுள்ள அவரது வீட்டின் அருகிலேயே படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டின் தலைநகரிலேயே தேசிய கட்சியின் மாநிலத்தலைவருக்கே உயிருக்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவுகிறது என்றால் திமுக ஆட்சியில் சாதாரண பொதுமக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்க முடியும்?
ஏற்கனவே சேலம் மற்றும் கடலூரில் அதிமுக நிர்வாகிகள் படுகொலை செய்யப்பட்ட நிலையில் அடுத்தடுத்து நிகழும் படுகொலைகள் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எந்த அளவிற்கு சீரழிந்துள்ளது என்பதையே காட்டுகிறது. திமுக ஆட்சியில் நேர்மையான அரசு அதிகாரிகள் முதல் அரசியல் தலைவர்கள், அப்பாவி பொதுமக்கள் வரை நாள்தோறும் நிகழும் படுகொலைகள் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எந்த அளவிற்கு சீரழிந்துள்ளது என்பதையே காட்டுகிறது.
படுகொலைகள்: திமுக ஆட்சியில் நேர்மையான அரசு அதிகாரிகள் முதல் அரசியல் தலைவர்கள், அப்பாவி பொதுமக்கள் வரை நாள்தோறும் நிகழும் படுகொலைகள் தமிழ்நாட்டில் தற்போது சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறதா? அல்லது சமூகவிரோதிகளின் ஆட்சி நடைபெறுகிறதா? என்ற ஐயத்தை எழுப்புகிறது. கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியவில்லை.
கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. பட்டப்பகலில் நடைபெறும் படுகொலைகளை தடுக்க முடியவில்லை. மக்கள் சாலைகளில் நிம்மதியாக நடமாடக்கூட முடியவில்லை.
முதல்வர் ஸ்டாலின்: இதெற்கெல்லாம் காவல்துறையை தமது நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் என்ன பதில் கூறப்போகிறார்? இதுதான் இந்தியாவே திரும்பிப்பார்க்கும் திராவிட மாடலா? இதுதான் முதலமைச்சர் கூறிய எந்த கொம்பனும் குறைசொல்ல முடியாத ஆட்சியா? என்ற கேள்விகள் ஒவ்வொரு சாமானியன் மனதிலும் எழுகிறது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் சகோதரர் ஆம்ஸ்ட்ராங் அவர்களை படுகொலை செய்த கும்பலை விரைந்து கைது செய்து, சட்டப்படி கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்கள் முதல் அப்பாவி பொதுமக்கள் வரை படுகொலை செய்யப்படும் கொடூரங்கள் தொடராது தடுத்திட, இனியாவது காவல்துறையை முடுக்கிவிட்டு கடும் நடவடிக்கை எடுத்து, சட்டம் ஒழுங்கை விரைந்து சீர்செய்ய வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
கண்ணீர் வணக்கம்: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் சகோதரர் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் மறைவால் துயருற்றுள்ள அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், அரசியல் களுக்கும், பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரில் பங்கெடுக்கின்றேன். சகோதரர் ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்" என்று பதிவிட்டுள்ளார்.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், "ஆம்ஸ்ட்ராங் கொலையின் பின்னணியில் உள்ள குற்றவாளிகளை கண்டறிவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பொழுது சரணடைந்து இருப்பவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை. அந்த கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் அவர்களை தூண்டி விட்டவர்கள் என அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். சரண் அடைந்தவர்களை கைது செய்து விட்டோம் என்ற அடிப்படையில் புலன் விசாரணை நிறுத்தி விடக்கூடாது" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications