பெரம்பூர் ஆம்ஸ்ட்ராங்கை "குறி" வைக்க இதுதான் காரணமா? சென்னையில் போஸ்ட் மார்ட்டம்.. போலீஸ் குவிப்பு
சென்னை: படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடல், இன்று ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. இதையொட்டி, மருத்துவமனையை சுற்றிலும் பலத்த போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், நேற்றிரவு 7.30 மணிக்கு சென்னை பெரம்பூரில் புதிதாக கட்டப்படும் அவரது வீட்டுக்கு பக்கத்திலேயே மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். 3 பைக்கில் 6 பேர் வந்திருக்கிறார்கள்..

உணவு ஊழியர்கள்: ஜொமோட்டோ உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களை போலவே உடை அணிந்து வந்துள்ளனர்.. 2 ஆதரவாளர்களுடன் ஆம்ஸ்ட்ராங் பேசிக் கொண்டிருந்தபோதே அவரை சுற்றி வளைத்து அரிவாளால் கழுத்து, தலை ஆகிய இடங்களில் சரமாரியாக வெட்டி கொன்றுவிட்டு தப்பியோடி விட்டனர்..
அவர் கொலை செய்யப்பட்டது ஏன் என்பது போலீஸ் தரப்பில் சொல்வதாவது: "ஆம்ஸ்ட்ராங் தினமும் இரவு தூங்கச்செல்வதற்கு முன்பு தன்னுடைய நண்பர்கள் மற்றும் கட்சியை சேர்ந்தவர்களோடு தனது வீடு அருகே நின்று ஜாலியாக பேசிக்கொண்டிருப்பார்... குறிப்பாக அரசியல் நிலவரங்கள் குறித்துதான் அதிகம் பேசுவார். அப்படித்தான் நேற்றும் பேசிக்கொண்டிருந்தார். அப்போதுதான் மர்மநபர்களால் வெட்டிக்கொல்லப்பட்டார்.
ஆயிரம் விளக்கு: கொலையாளிகளை பிடிக்க அங்கிருந்த அவர்களது நண்பர்களும், கட்சியினரும் விரட்டி சென்றனர். ஆனால் கொலையாளிகள் அவர்களது கையில் சிக்காமல் தப்பி ஓடிவிட்டனர். ஆம்ஸ்ட்ராங்கை உடனடியாக ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக சொல்லிவிட்டனர்.
இதையடுத்து, ஆம்ஸ்ட்ராங் உடல் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் வக்கீலுக்கு படித்தவர். அவர் எப்போதும் வெள்ளை நிற பேண்ட், சட்டைதான் அணிந்திருப்பார்.
சட்டப்போராட்டம்: பல்வேறு வழக்குகளில் சிக்கிய அவர் கடும் சட்டப்போராட்டம் நடத்திபிறகே வழக்குகளிலிருந்து விடுதலையானார். இதனால், அவருக்கு எப்போதும் கொலை மிரட்டல்கள் வந்தவண்ணம் இருந்திருக்கின்றன.. இப்போது, முன்விரோதம் காரணமாகவே அவர் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும்.. கடந்த 2023-ம் ஆண்டு நடந்த ஒரு சம்பவத்திற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என்று கருதுகிறோம்.
உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதியை வைத்து சென்னை அமைந்தகரையில் மாபெரும் பேரணி மற்றுமற்றும் பொதுக்கூட்டத்தை நடத்தியிருந்தார்.. அதன் பிறகுதான் அவர் புகழ்பெற்றார்... அப்போது முதல்தான் அவருக்கு எதிரிகளும் அதிகமானார்கள்" என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங் உடல் இன்று போஸ்ட் மார்ட்டம் செய்யப்படுகிறது.. காலை 9 மணிக்கு மேல் இந்த பிரேத பரிசோதனை நடக்கக்கூடும் என தெரிகிறது.
கொந்தளிப்பு: ஆனால், ஆம்ஸ்ட்ராங் உடல் நேற்றிரவு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதே, அவரது ஆதரவாளர்கள் மருத்துவமனை வாயிலில் குவிய துவங்கிவிட்டார்கள்.. இப்போதும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அவரது ஆதரவாளர்கள் வந்தவண்ணம் உள்ளனர்.
"ஒரு மாநில அரசியல் கட்சி தலைவருக்கு என்ன மிரட்டல் இருக்க போகிறது? திமுக ஆட்சியில் எப்பவுமே இப்படித்தான்.. தலித் தலைவர்களுக்கு இப்படிதான் நடக்கிறது.. தேசிய கட்சியின் மாநில தலைவர்.. அண்ணாமலைக்கு இருக்கும் அத்தனை உரிமையும், ஆம்ஸ்ட்ராங்கிற்கும் உண்டு.. ஆனால், முறையான பாதுகாப்பு தரப்பட்டுள்ளதா?" என்று கதற அழுது கேள்வி எழுப்புகிறார்கள்.
பலத்த போலீஸ்: தொடர்ந்து ஆதரவாளர்கள் குவிந்து வருவதால், மருத்துவமனை வளாகத்தை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.. அதுபோலவே, பெரம்பூரிலுள்ள ஆம்ஸ்ட்ராங் வீடு அமைந்துள்ள பகுதியிலும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.. அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில், அனைத்து ஏற்பாடுகளையும் சென்னை போலீசார் முன்னெடுத்து வருகிறார்கள். எனினும், ஒரு கட்சி தலைவரையே கொலை செய்த கொந்தளிப்பில் தலைநகர் கொதித்து கிடக்கிறது.
கடந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷ் என்பவரின் சகோதரர் பாலு என்பவரும் சரணடைந்துள்ளதால், இந்த கொலை பழிக்கு பழியாக நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. மேலும் அவருடன் சேர்ந்து ராமு, திருமலை, செல்வராஜ், அருள் என 8 பேர் சரணடைந்துள்ளனர். இதனால் இந்த வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டு நடந்த ஒரு சம்பவத்திற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்ல, உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதியை வைத்து சென்னை அமைந்தகரையில் மாபெரும் பேரணி மற்றுமற்றும் பொதுக்கூட்டத்தை நடத்தியிருந்தார்.. அதன் பிறகுதான் அவர் புகழ்பெற்றார்... அப்போது முதல்தான் அவருக்கு எதிரிகளும் அதிகமானதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications