"திமுக + அதிமுக + பாஜக" நிர்வாகிகளுக்கு தொடர்பு.. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் ஷாக் பின்னணி! விபரம்
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிமுக பெண் நிர்வாகி, திமுக நிர்வாகியின் மகன் ஆகியோர் அதிரடியாக நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதவிர பாஜக பெண் பிரமுகர் தலைமறைவாக உள்ள நிலையில் அவரை போலீசார் தேடி வருகின்றனர். இப்படி தமிழ்நாட்டில் பிரதான கட்சிகளை சேர்ந்த பிரமுகர்களுக்கு எப்படி இந்த கொலையில் தொடர்பு உள்ளது? என்பது பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வருமாறு:
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக செயல்பட்டு வந்தவர். ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த 5ம் தேதி சென்னை பெரம்பூரில் உள்ள தனது வீட்டின் முன்பு படுகொலை செய்யப்பட்டர். ஜோமட்டோ உணவு டெலிவரி பாய்கள் போன்று உடை அணிந்து வந்த கும்பல் அவரை வெட்டி கொலை செய்தது.
இந்த கொலை வழக்கு தமிழகத்தை உலுக்கியது. இவரது கொலைக்கு பின்னால் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு உள்ளது. இதனால் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சியினர் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் சென்னை வந்து ஆம்ஸ்ட்ராங்கிற்கு அஞ்சலி செலுத்திய பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதியும் சிபிஐ விசாரணை கோரினார்.

ஆனால் தமிழக அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவில்லை. மாறாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தான் ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கில் நேற்று முன்தினம் வரை மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்டு இருந்தனர். ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பியான பொன்னை பாலு , ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், கோகுல், சக்தி, சந்தோஷ், அருள், சிவசக்தி உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதில் ரவுடி ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்துள்ளதும் தெரியவந்துள்ளது. இதில் திருவேங்கடம் என்பவர் போலீஸ் என்கவுண்ட்டரில் இறந்தார். மேலும் அருள் என்பவர் திமுகவை சேர்ந்தவர் ஆவார். இதையடுத்து நேற்று 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதனால் கைது எண்ணிக்கை 14 ஆக அதிகரித்தது.
3 கட்சிகளுக்கு தொடர்பு: நேற்று கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் அதிமுக பெண் நிர்வாகி. இன்னொருவர் திமுக நிர்வாகியின் மகன் ஆவார். மேலும் பாஜக பெண் நிர்வாகி ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் தான் ஆம்ஸ்ட்ராங்கின் கொலையில் இந்த 3 கட்சியை சேர்ந்தவர்களுக்கும் எப்படி தொடர்பு உள்ளது? என்பது பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.
அதிமுக நிர்வாகி: நேற்றைய தினம் மாலையில் முதலில் வழக்கறிஞர் மலர்க்கொடி, ஹரிஹரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் மலர்க்கொடி என்பவர் அதிமுக நிர்வாகி. அவர் அவர் திருவல்லிக்கேணி மேற்கு பகுதி துணை செயலாளராக உள்ளார். மலர்கொடி ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி உள்ள அருள் என்பவருடன் பேசிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கொலை வழக்கில் பணப்பரிமாற்றம் தொடர்பான விவகாரத்திலும் தொடர்பு உள்ளதாக கூறப்படும் நிலையில் அவரிடம் போலீசார் விசாரணை தொடங்கி உள்ளனர்.
திமுக நிர்வாகியின் மகன்: இதற்கு அடுத்தப்படியாக ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திமுக நிர்வாகியின் மகன் சதீஷ் என்பவர் நேற்று இரவு அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். கைதான சதீஷின் தந்தை குமரேசன் திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக இலக்கிய அணி துணை அமைப்பாளராக இருக்கிறார். இவருக்கும் கொலையாளிகளுக்கும் தொடர்பு உள்ளதாக கூறப்பட்ட நிலையில் சதீஷை போலீசார் கைது செய்துள்ளனர்.
பாஜக பெண் பிரமுகர்: இதற்கிடையே தான் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பாஜக நிர்வாகியான புளியந்தோப்பு அஞ்சலை என்பவருக்கு தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. இவருக்கு ரவுடி ஆற்காடு சுரேசுடன் நெருக்கமான தொடர்பு உள்ளது. இவரை 2019ம் ஆண்டு 'ரகசியமாக' சந்திக்க வந்தபோதுதான் ஆற்காடு சுரேஷ் போலீசில் சிக்கி ஜாமீனில் விடுதலையானார். அஞ்சலை வடசென்னை மாவட்ட பாஜக மகளிர் அணி தலைவரானபோதும் கடும் விமர்சனம் எழுந்தது. இத்தகைய சூழலில் ஆம்ஸ்ட்ராங் கொலையில் அஞ்சலைக்கும் தொடர்பு உள்ளதாக கூறப்படும் நிலையில் அவர் தலைமறைவாகி உள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications