ஆம்ஸ்ட்ராங் கொலை.. இன்று அதிகாலை அருளை பெரம்பூர், புழலுக்கு தனியாக அழைத்து சென்று விசாரித்த போலீஸ்!
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் அருளை இன்று அதிகாலை தனியாக அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். 2வது முறையாக போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ள அருளை இன்று அதிகாலை பெரம்பூர், புழல் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ஆம் தேதி பெரம்பூரில் கட்டப்பட்டு வந்த அவரது புதிய வீட்டு முன்பாக மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பட்ட நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர். அப்போது ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்கு பழி வாங்க ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக தகவல் வெளியானது.

இதனையடுத்து, 11 பேரையும் காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வண்டனர். இந்நிலையில், மாதவரம் பகுதிக்கு ஆயுதங்களை கைப்பற்றுவதற்காக அழைத்துச் செல்லப்பட்ட திருவேங்கடம், தப்ப முயன்றதால் என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த கொலையாளிகள் ஆம்ஸ்ட்ராங் கொலையில் பின்னணியில் யார் இருப்பது போன்ற தகவலை கூற தொடங்கினர். அடுத்தடுத்து அதிமுக, பாஜக, தமாக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். அதிமுகவை சேர்ந்த ஹரிதரனிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் கொலையாளிகள் பயன்படுத்திய செல்போன்கள் கொசஸ்தலை ஆற்றில் மீட்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து, பூந்தமல்லி சிறையில் இருந்த பொன்னை பாலு, ராமு, அருள், ஹரிஹரன் ஆகிய நான்கு பேரையும் போலீஸ் பாதுகாப்புடன் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஹரிஹரனை நான்கு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கவும், பொன்னை பாலு, ராமு, அருள் ஆகிய மூன்று பேரை மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கவும் நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது. இந்த நான்கு பேரையும் பரங்கிமலை பகுதியில் உள்ள ஆயுதப்படை அலுவலகத்தில் வைத்து செம்பியம் போலீசார் தனித் தனியாக விசாரணை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கொலைக்கு சதி திட்டம் தீட்டிய பல்வேறு இடங்களுக்கும் அருளை அழைத்துச் சென்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதன்படி வழக்கறிஞர் அருளை பெரம்பூர், புழல் உள்ளிட்ட இடங்களுக்கும் தனியாக அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 2வது முறையாக போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ள அருளை இன்று அதிகாலை பெரம்பூர், புழல் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு முன்பாக, கூட்டாளிகளுடன் சேர்ந்து திட்டமிட்ட இடங்களையும், ஆயுதங்களை பதுக்கி வைத்த இடங்களையும் அருள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலிம், ஆம்ஸ்ட்ராங் கொலையில் கொலையாளிகளுக்கு எவ்வளவு பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது, யார் யார் பணம் கொடுத்தார்கள், எப்படி பணம் கைமாற்றப்பட்டது உள்ளிட்டவை குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் பின்புலமாக இருக்கும் பெரும் புள்ளிகள் குறித்தும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதேபோல், போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ள பொன்னை பாலு, ராமு, ஹரிஹரன் ஆகியோரிடமும் தனிப்படை போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications