மிரட்ட தொடங்கும் கொரோனா.. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் பறந்த முக்கிய உத்தரவு! இம்முறை பலன் தருமா
சென்னை: தமிழகத்தில் வைரஸ் பாதிப்பு மெல்ல அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் மருத்துவத்துறைச் செயலர் செந்தில்குமார் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்தே வந்தது. ஜனவரி மாதம் ஓமிக்ரான் அலை ஏற்பட்ட நிலையில், அதன் பின்னர் வைரஸ் பாதிப்பு குறைந்தது.
மாநிலத்தில் ஒரு கட்டத்தில் வைரஸ் பாதிப்பு 50க்கும் கீழாகக் கூட குறைந்தது. இதையடுத்து கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, மக்கள் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்கினர்.

கொரோனா
இதனிடையே நாட்டில் வைரஸ் பாதிப்பு மீண்டும் மெல்ல அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. பல வாரங்களுக்குப் பின்னர், நாட்டில் தினசரி வைரஸ் பாதிப்பு 12 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது. பாசிட்டிவ் விகிதம் அச்சமூட்டும் அளவுக்கு அதிகரிக்கவில்லை என்றாலும் கூட சில வாரங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டிலும் கூட கிட்டதட்ட அதேநிலை தான் என்று கூறலாம்.

தமிழ்நாடு
மாநிலத்தில் பல வாரங்களுக்குப் பின்னர், வைரஸ் பாதிப்பு 500ஐ தாண்டி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 596 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 3073ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாகச் சென்னையில் 295 பேருக்கும் செங்கல்பட்டில் 122 பேருக்கும் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், மாநிலத்தில் உயிரிழப்புகள் கட்டுக்குள் உள்ளது.

உத்தரவு
வைரஸ் பாதிப்பு அதிகரிப்பதால் அனைவரும் மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது போன்ற வழிகாட்டுதல்களைக் கட்டாயம் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மக்கள் விதிகளைப் பின்பற்றுவதை உறுதி செய்யவும் டெஸ்டிக் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தவும் அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் மக்கள் நல்வாழ்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.

பறந்த உத்தரவு
கொரோனா பாதிப்பு மெல்ல அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா சிகிச்சைக்காக 50 முதல் 100 படுக்கைகளைத் தயார் நிலையில் வைத்திருக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் மருத்துவத்துறைச் செயலர் செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார். இது மட்டுமின்றி வீட்டுத் தனிமையில் உள்ளவர்களைத் தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு தினசரி உடல்நிலை குறித்துக் கேட்டறியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அமைச்சர் மா.சு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மெல்ல அதிகரிக்கத் தொடங்கும் நிலையில், மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா என்று அஞ்சப்படுகிறது. இது தொடர்பாக விளக்கம் அளித்த மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "கொரோனா பாசிட்டிவ் விகிதம் 10 சதவீதத்தைத் தாண்டும் போது அல்லது 40% மருத்துவமனைகள் நிரம்பும் போது புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்பது விதிமுறை. இப்போது மாநிலத்தில் பாசிட்டிவ் விகிதம் 2, 3 சதவீதத்திலேயே உள்ளதால் கட்டுப்பாடுகள் இப்போது விதிக்கப்படாது" என்றார்.












Click it and Unblock the Notifications