அசானி புயல் வலுவிழந்தது...காக்கிநாடா-விசாகப்பட்டினம் இடையே கரையை கடக்கும் - ஏற்பாடுகள் தயார்
வங்கக் கடலில் தீவிர புயலாக நிலைகொண்டிருந்த அசானி புயல் வலுவிழந்து நிலைகொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: வங்கக் கடலில் தீவிர புயலாக நிலைகொண்டிருந்த அசானி புயல் வலுவிழந்து நிலைகொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திராவின் மச்சிலிப்பட்டினத்திலிருந்து சுமார் 60 கிமீ தென்-தென்கிழக்கே காக்கிநாடாவிலிருந்து 180 கிமீ தென்-தென்மேற்கே மையம் கொண்டுள்ள புயல் இன்று பிற்பகலுக்குள் காக்கிநாடா-விசாகப்பட்டினம் இடையே கரையை கடந்து, ஒடிசா நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Recommended Video
தென்கிழக்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 8ஆம் தேதி புயலாக உருவெடுத்தது. அசானி என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் வடகிழக்கு திசையை நோக்கியே நகர்ந்து வந்தது. இருப்பினும், கடந்த 6 மணி நேரத்தில் இந்த புயல் திடீரென வடக்கு- வடமேற்கு திசையை நோக்கி பயணித்தது. இதன் காரணமாக ஆந்திரப் பிரதேச கடலோரத்திற்கு மிக நெருங்கிய தொலைவில் அசானி புயல் இருந்தது. இதன் காரணமாக ஆந்திராவின் வட கடலோர மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் மிகக் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் மொத்தம் 27 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இந்த புயல் எப்போது கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தற்போது அறிவித்துள்ளது.

அசானி ஆட்டம் ஆரம்பம்
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், மேற்கு மத்திய வங்காள விரிகுடாவில் கடந்த 06 மணி நேரத்தில் மணிக்கு 12 கிமீ வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்த தீவிர சூறாவளி புயல் அசானி கடந்த 06 மணி நேரத்தில் சூறாவளி புயலாக வலுவிழந்து மே 11 ஆம் தேதி காலை மையம் கொண்டிருந்தது.

அசானி மையம் கொண்டது எங்கே
ஆந்திராவின் மச்சிலிப்பட்டினத்திலிருந்து சுமார் 60 கிமீ தென்-தென்கிழக்கே காக்கிநாடாவிலிருந்து 180 கிமீ தென்-தென்மேற்கே, விசாகப்பட்டினத்திலிருந்து 310 கிமீ தென்மேற்கில், 550 கிமீ தெற்கு -கோபால்பூரின் தென்மேற்கு மற்றும் பூரிக்கு தென்மேற்கே 660 கி.மீ.தொலைவில் அசானி வலுவிழந்த புயலாக நிலவுகிறது.

மெல்ல நகரும் அசானி
இது அடுத்த சில மணி நேரங்களில் வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திரா கடற்கரைக்கு அருகில் மேற்கு மத்திய வங்கக்கடலை அடைய வாய்ப்பு உள்ளது. அதன்பிறகு, இது வடக்கு-வடகிழக்கு திசையில் மெதுவாக மீண்டும் நகர்ந்து, மச்சிலிப்பட்டினம், நர்சாபூர், ஏனாம், காக்கிநாடா, துனி மற்றும் விசாகப்பட்டினம் கடற்கரைகளில் நகர்ந்து, இன்று மாலையில் வடக்கு ஆந்திரா கடற்கரையில் மேற்கு மத்திய வங்கக் கடலில் வெளிவர வாய்ப்புள்ளது. பின்னர் அது வடகிழக்கு திசையில் வடமேற்கு வங்கக்கடலை நோக்கி நகர வாய்ப்புள்ளது.

பலத்த காற்று வீசும்
இந்த புயல் வலுவிழந்த நிலையில் ஒடிசா நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, ஆந்திர கடலோர பகுதியில் மணிக்கு 95 கி.மீ. வேகம் வரையிலும், ஒடிசா கடலோர பகுதியில் மணிக்கு 65 கி.மீ. வேகம் வரையிலும் பலத்த காற்று வீசும் என்று தெரிகிறது. அத்துடன் மேற்கண்ட மாநிலங்களிலும், மேற்கு வங்காளத்தின் தென்பகுதியிலும் கனமழை கொட்டி தீர்க்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது படிப்படியாக வலுவிழந்து நாளைய தினம் மே 12ம் தேதி காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னேற்பாடுகள் தயார்
இந்த நிலையில், அசானி புயலை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் குறித்து மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா நேற்று ஆய்வு செய்தார். மத்திய அமைச்சகங்களும், மத்திய மீட்பு படைகளும் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்துவர வேண்டும் என்றும், ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநில அரசுகளுக்கு தேவையான உதவியை அளிக்க வேண்டும் என்றும் அஜய் பல்லா உத்தரவிட்டார். மீட்பு பணிகளை மேற்கொள்ள ஆந்திராவில் தேசிய பேரிடர் மீட்புப்படையின் 9 குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. மேலும் 7 குழுக்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. ஒடிசாவில் 17 குழுக்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. மேற்கு வங்காளத்தில் 17 குழுக்கள் தயார் நிலையில் உள்ளன.












Click it and Unblock the Notifications