குட்டீசுக்கு குட் நியூஸ்..வாட்ச், சைக்கிள்,கார் ரிப்பேரா? ரிப்பேர் கஃபே வாங்க! காசு இல்ல..free
சென்னை: ரிப்பேர் கஃபே என்ற அமைப்பு குழந்தைகளுக்கு இலவசமாக சைக்கிள், வாட்ச், எலெக்ட்ரானிக் கார், ரேடியோ ஆகியவற்றை பழுது நீக்குவது எப்படி என்பதை இலவசமாக கற்றுக் கொடுத்து வருகிறது.
உங்கள் வீட்டில் குட்டீஸ் இருக்காங்களா? அப்படி என்றால் எப்படியும் 2 குட்டி சைக்கிள் பழுதாகி பயன்படுத்தபடாமல் கிடக்குமே? அடுத்து 'புது சைக்கிள் உடனே வாங்கி தா’ என்று அழுது அடம்பிடிப்பதை பொறுக்க முடியாமல் நீங்கள் ஒரு பக்கம் புலம்பிக் கொண்டிருப்பீர்களே? வீட்டுக்கு வீடு இதுதான் பிரச்சினை.

வீட்டுக்கு வீடு பொம்மை கார்கள் 4, பழுதாகி அதை எப்படி ரிப்பேர் செய்வது என்று தெரியாமல் வீட்டு மூலையில் முடங்கிக் கிடக்கும் சைக்கிள் 2, ஆசை ஆசையாக வாங்கிய பேட்டரி கார்கள் வேலை செய்யாமல் போனதால் அதை எடைக்குப் போடுவதா? அல்லது தூக்கி எறிவதா? என்று தெரியாமல் அல்லாடும் பெற்றோர்களை அசர வைக்கும் படி செம ஐடியாவுடன் களம் இறங்கி இருக்கிறது ரிப்பேர் கஃபே.
அது என்ன ரிப்பேர் கஃபே? இவர்கள் என்ன செய்வார்கள்? என்று யோசிக்கிறீர்களா? இந்த கஃபே ஒரு தன்னார்வல தொண்டு நிறுவனம். அடிப்படையில் பெங்களூருவை மையமாக வைத்து செயல்படுகிறார்கள். இந்த அமைப்பு என்ன செய்கிறது என்றால், வீட்டில் இதைப்போல வீணாகிப் போய் முடங்கிக் கிடக்கும் சைக்கிள், கேமிரா, பொம்மை கார், வாட்ச் இவற்றை எல்லாம் எப்படி பழுது நீக்கி மீண்டும் பயன்படுத்தலாம் என்பதை குழந்தைகளுக்கே சொல்லிக் கொடுக்கிறது.
இந்த அமைப்பைப் பற்றி தெரிய வேண்டும் என்றாலோ அல்லது தொடர்பு கொள்ள வேண்டும் என்றாலோ நீங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போய் repaircafe.bengaluru என்று தேடினால் கண்டுபிடித்துவிடலாம். கடந்த சில நாட்கள் முன்னதாக இந்த அமைப்பு சார்பாக ஒரு பயிற்சிப் பட்டறை சென்னையில் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. அந்தப் பட்டறைக்கு பல குழந்தைகள் தங்களின் பொம்மை கார், கியர் போன சைக்கிள், ஓடாமல் நின்று போன வாட்ச், ரேடியோ, டேப்ரெக்கார்டர் என அனைத்தையும் அள்ளிக் கொண்டு வந்திருந்தனர்.
அவர்களுக்கு அந்தச் சாமன்களை எப்படிப் பழுது நீக்கி பயன்படுத்துவது என்பதை பெங்களூருவில் இருந்து வந்திருந்த 3 தன்னார்வலர்கள் தரமாக கற்றுக் கொடுத்தனர். ரிப்பேர் ஆன பொருட்களை சரி செய்து மீண்டும் வீட்டுக்கு கொண்டு போகும் போது அந்தக் குழந்தைகளின் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்ப் எரிவதைப் பார்த்த அந்தப் பெற்றோர்களுக்குள் எத்தனை சந்தோசம் தெரியுமா?

இந்தப் பட்டறையின் ஒருங்கிணைப்பாளர் பூர்ணா, “இந்த மாதிரியான ஐடியா முதன்முதலாக நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த மெர்டினி போஸ்ட்மா என்பவர் மனதில்தான் உருவானது. அவர்தான் 2009இல் அந்த நாட்டில் இதை தொடங்கினார். அவரைப் பார்த்துவிட்டு 2015இல் நாங்கள் பெங்களூருவில் தொடங்கினோம். குழுவாக சேர்ந்து அதில் ஈடுபட்டோம்.
இதற்காக அப்பார்ட்மெண்ட், குடியிருப்போர் சங்கங்கள், பெற்றோர் சங்கங்கள் என அனைவரையும் போய் பார்த்தோம். குழந்தைகளை குறி வைத்து பயிற்சி அளித்தோம். மேலும் புதியதாக அவர்கள் பகுதியில் இதை செய்ய விரும்புகின்றவர்களுடன் இணைந்து விரிவாக்கம் செய்து வருகிறோம்” என்று கூறுகிறார்.
இந்த அமைப்பு குறிப்பாக பள்ளிக் குழந்தைகளுக்கு கோடை விடுமுறை விடும்போது அதை நல்ல விதமாக பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இந்தப் பட்டறையை அந்தக் காலகட்டங்களில் ஒருங்கிணைத்து வருகிறது. கூடவே வார இறுதி நாட்களிலும் இதைக் கற்று தந்து வருகிறார்கள்.
சென்னையை சேர்ந்த மீனலோச்சனி என்பவரின் வீட்டு வராண்டாவில்தான் இந்தப் பயிற்சி பட்டறை நடந்தது. அங்கே பழுது பார்க்கும் உபகரணங்களுடன் பலரும் காத்திருந்தனர். அதற்கான சின்ன சின்ன ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்தன. அதில் கலந்து கொண்ட 10 வயது சிறுமி மெல்வி பெர்லிட்டா தனது 3 பழைய கேமிராக்கள் , ஒரு வாட்ச் உடன் வந்திருந்தார். அதில் ஒரு கேமிரா ஃபிலிம் ரோல் மூலம் இயக்கப்படுவது. அதை அவர் பழுது நீக்கிக் கொண்டார். வாட்சில் சின்ன பேட்டரிதான் பிரச்சினை. அதை மாற்றி அதற்கு மீண்டு உயிர் கொடுத்தார். அதில் அவருக்கு அவ்வளவு சந்தோஷம்.
இவரைப் போலவே 10 குழந்தைகள் மற்றும் 10க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் வந்திருந்தனர். ஒருநாள் பயிற்சி என்பதால் அதற்கு மேல் ஆட்கள் வந்தால் கால அவகாசம் போதாது என்பதால் கூட்டத்தைக் குறைத்து வந்த குழந்தைகளுக்கு முறையாக கற்று தந்தனர். ஒரு பக்கம் சைக்கிள் ரிப்பேரிங், இன்னொரு பக்கம் பேட்டரி கார் ரிப்பேரிங், மற்றொரு பக்கம் ரிமோட் கார், கேம்ஸ் ஆடும் விளையாட்டு சாமான்கள் ரிப்பேரிங் என்று அனைவரும் பிசியாக உட்கார்ந்து கற்றுக் கொண்டனர்.
“ஒரு பொருள் பழுதானால் உடனே அதனை தூக்கிப் போட்டுவிட்டு புதிய பொருளை வாங்கும் நுகர்வு கலாச்சாரம் அதிகமாகி வருகிறது. இன்றைய காலத்து குழந்தைகளுக்கு பழுதான பொருளை சரி செய்து பயன்படுத்தலாம் எனபதே தெரியவில்லை. அந்த மனநிலையை மாற்றதான் இந்த முயற்சி” என்கிறார் ஒருங்கிணைப்பாளர்.
சைக்கிளுக்கு பஞ்சர் போடுவது, வால் டியூப் மாற்றுவது, பிரேக் சரி செய்வது, துருப்பிடித்த செயினை சரி செய்வது என பல வேலைகளை பிள்ளைகள் கற்றுக் கொண்டார்கள். அதைப் பார்க்கும்போது அவர்கள் எவ்வளவு ஆர்வமாக இருந்துள்ளனர் என்பது புரிந்தது.
“ஏராளமான கருவிகள் உள்ளன. குழந்தைகள் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது” என்கிறார் அசோக் என்பவர். "பொம்மைகள் செயல்படாமல் போனால் உடனே வெளியே எறிந்து விடுகிறோம். பழுது பார்ப்பது எப்படி? அதைப் பராமரிப்பது எப்படி? எனக் குழந்தைகள் கற்றுக் கொண்டால், அவர்கள் தங்களது உடைமைகளை நன்றாக பராமரிப்பார்கள். அதற்கு இது ஒரு சிறந்த வழி”என்கிறார் ராஜரத்தினம் என்பவர்.
விஞ்ஞானிகளை வெறும் புத்தக படிப்பு என்பது உருவாக்காது. இதைப் போன்று வேலைகளை கற்றுக் கொண்டால்தான் கண்டுபிடிப்பு என்பது அதிகரிக்கும். அதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.












Click it and Unblock the Notifications