"கிச்சன் கத்தி! சந்தேகம் வராமல் இருக்க.." மருத்துவமனையில் இன்று இதுதான் நடந்தது! சுப்ரியா சாஹு தகவல்
சென்னை: கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதல் நடத்திய இளைஞர், கிட்சன் கத்தி மூலம் மருத்துவரைத் தாக்கியதாகவும் அவர் வழக்கமாக மருத்துவமனைக்கு வருபவர் என்பதாலேயே யாரும் அவர் மீது சந்தேகப்படவில்லை என்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் செயலாளர் சுப்ரியா சாஹு தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று காலை மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்டார். அவரை இளைஞர் ஒருவர் கத்தியால் சரமாரியாகக் குத்தினார்.

இதில் அவருக்குக் கழுத்து மற்றும் தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு உடனடியாக சிகிச்சை தரப்பட்ட நிலையில், அவரது உடல்நிலை இப்போது சீராக இருக்கிறது.
தாக்குதல்: இந்தச் சம்பவம் குறித்து இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அந்த இளைஞரின் தாயார் கடந்த 6 மாதங்களாக அங்கு சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் செயலாளர் சுப்ரியா சாஹு இது தொடர்பாக சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசுகையில், "தாக்குதல் நடத்திய நபரின் தாய் இந்த மருத்துவமனையில் தான் கேன்சர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவர் இன்று வழக்கம் போலவே மருத்துவமனைக்கு வந்துள்ளார். சாதாரணமாக மருத்துவமனைக்குள் நுழைந்த அவரது கையில் கிட்சன் கத்தி ஒன்று இருந்துள்ளது. அதை வைத்துக் கொண்டே அவர் மூத்த மருத்துவர் பாலாஜி மீது தாக்குதல் நடத்தியுள்ளார். டாக்டர் பாலாஜிக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அவர் குணமடைந்து வருகிறார்..
பாதுகாப்பு ஏற்பாடுகள்: தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் ஏற்கனவே தேவையான பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் போலீசார் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் இணைந்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகளில் போதிய பாதுகாப்பு இருக்கிறதா என்பதை ஆய்வு செய்துள்ளோம். மருத்துவமனைகளில் உள்ள சிசிடிவி கேமரா, பாதுகாவலர்கள் என அனைத்தையும் உறுதி செய்துள்ளோம்.
கிட்சன் கத்தி: இந்த ஒரு சம்பவத்தில் அவர் கிட்சன் கத்தியை மறைத்து எடுத்துச் சென்றுள்ளார். அவரது தாய் ஏற்கனவே இங்குச் சிகிச்சை பெற்று வந்தார். அவருடன் இந்த நபரும் உடன் வருவார் என்பதால் யாருக்கும் சந்தேகம் வரவில்லை. இதுவே இன்று நடந்தது.
நாட்டின் பிற பகுதிகளில் மருத்துவர்கள் மீது பல முறை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. அதைக் கருத்தில் கொண்டு நாங்கள் ஏற்கனவே மருத்துவமனைகளில் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தோம். தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுத்து இருந்தோம். அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவுக்குப் பலர் வருவார்கள். பொதுவாக அரசு மருத்துவமனைக்கு அதிக பேர் வருவார்கள் என்பதால் விசிட்டர் பாஸ் நடைமுறை இருக்காது. ஆனால், நாங்கள் பல மருத்துவமனைகளில் விசிட்டர் பாஸ் முறையையும் செயல்படுத்தி இருக்கிறோம்.
நடவடிக்கை: அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பை அதிகரித்துள்ளோம். எனவே, அது குறித்து யாரும் கவலைப்படத் தேவையில்லை. தேவைப்பட்டால் பாதுகாப்பை மேலும் அதிகரிக்கவும் நடவடிக்கை எடுப்போம். நான் முன்பே குறிப்பிட்டது போல அந்த நபர் வழக்கமாக அட்டன்டராக மருத்துவமனைக்கு வருவார் என்பதாலேயே யாரும் அவரை சந்தேகப்படவில்லை" என்றார்.












Click it and Unblock the Notifications