சென்னை தி.நகர் ஆட்டோ டிரைவருக்கு வந்த பேராசை.. 40 லட்சத்தை சுருட்டியவருக்கு கடைசியில் நடந்த சம்பவம்
சென்னை: சென்னை தியாகராயநகரில் ஆட்டோ ஓட்டி வரும் கிருஷ்ணகுமார் என்பவர் ஏலச்சீட்டு நடத்துவதாக கூறி தன்னுடன் ஆட்டோ ஓட்டியவர்களிடம் பணத்தை வசூல் செய்து மொத்தமாக ரூ.40 லட்சம் வரை மோசடி செய்துள்ளார். முதிர்வு தொகை முடிந்ததும் பணத்தை கொடுக்காமல் தலைமறைவு ஆனதோடு, தேடி சென்ற போது கொலை மிரட்டலும் விடுத்து இருக்கிறார். இதையடுத்து போலீசார் அவரை தற்போது கைது செய்துள்ளனர்.
உழைத்து கஷ்டப்பட்டு பணம் சம்பாதித்து வாழ்க்கையில் முன்னேறுவதை விட குறுக்கு வழியில் ஏமாற்றி பணம் சம்பாதிக்கலாம் என நினைக்கும் சில மோசடி பேர்வழிகள் இறுதியில் சிறையில் கம்பி எண்ணும் நிலைதான் வரும் என்பதை நினைக்க மறுக்கிறார்கள். எத்தனையோ சம்பவங்கள் நடைபெற்றாலும் கூட இன்னும் அப்பாவி மக்களிடம் ஏமாற்றி மோசடி செய்யும் செயல்கள் தினமும் எங்காவது நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.

சென்னை தி நகரில் மோசடி
மக்களும் அதிக வட்டி, உடனடி கடன் கிடைக்கும் என்பதால் நம்பிக்கையில் பணத்தை போட்டு ஏமாறும் நிலை உள்ளது. குறிப்பாக ஏலச்சீட்டு நடத்தி மொத்த பணத்தையும் சுருட்டிக் கொண்டு எஸ்கேப் ஆகும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதை பார்க்க முடிகிறது. அப்படியான ஒரு சம்பவம் தான் சென்னை தி.நகரில் நடைபெற்றுள்ளது. ஆட்டோ டிரைவர் ஒருவர் 40 லட்சம் பணத்தை மோசடி செய்துள்ளார். இது குறித்த விவரங்களை இங்கே பார்க்கலாம்.
சென்னை தியாகராயநகர் ஆர்.கே.புரம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 42). ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வரும் இவருக்கு தனது ஸ்டேண்டில் ஆட்டோ ஓட்டும் ராஜபிள்ளை தோட்டம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவரின் அறிமுகம் கிடைத்துள்ளது. கிருஷ்ணகுமார் ஏலச்சீட்டு நடத்தி வருவதாக கூறியுள்ளார். மேலும் நீங்களும் இந்த சீட்டில் சேருங்கள், நல்ல தொகை உங்களுக்கு கிடைக்கும் என்று கூறியிருக்கிறார்.
இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டல்
இதையடுத்து கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவருக்கு தெரிந்தவர்கள் பலரும் அந்த சீட்டில் சேர்ந்துள்ளனர். இதேபோல் தனக்கு தெரிந்த ஆட்டோ டிரைவர்களையும், அப்பகுதியில் வியாபாரம் செய்த சிலரையும் அந்த சீட்டில் சேர்த்துள்ளார். சீட்டு முடிவடையும் வரை இவர்கள் பணத்தை கட்டியுள்ளனர். ஆனால் சீட்டு முடிந்த பின்னரும் பணத்தை கிருஷ்ணமூர்த்தி இவர்களிடம் கொடுக்கவில்லை. பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில் திடீரென கிருஷ்ணமூர்த்தி தலைமறைவாகிவிட்டார். கிருஷ்ணகுமார் மற்றும் ஆட்டோ டிரைவர்கள் வியாபாரிகள் அவரை தேடி வந்தனர். செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் உறவினர் ஒருவர் வீட்டில் கிருஷ்ணகுமார் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கிருஷ்ணமூர்த்தி, அவரது நண்பர்கள் கிருஷ்ணகுமார் இருக்கும் இடத்துக்கு சென்று பணத்தை கேட்டுள்ளார். அப்போது அவர் பணத்தை திருப்பி கொடுக்காமல் அவரது நண்பர்கள் சிலரோடு கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
40 லட்சம் பணம் மோசடி
இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தி மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் பாண்டிபஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி கிருஷ்ணகுமாரை கைது செய்தனர். மேலும், அவருடைய ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் கிருஷ்ணகுமார் ஏலச்சீட்டு மூலம் 20 பேரிடம் ரூ.40 லட்சம் வரை பணத்தை ஏமாற்றி இருப்பது தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
முன்பின் தெரியாதவர்களிடம் ஏலச்சீட்டு என்ற பெயரில் பணத்தை போட்டு ஏமாற்றப்படும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்துள்ள சூழலில், மக்கள் இதுபோன்ற மோசடிகளில் சிக்காமல் இருக்க வேண்டும். வங்கி, போஸ்ட் ஆபிஸ் சிறு சேமிப்பு போன்ற திட்டங்களில் சேர்ந்து கூட பயன் பெறலாம் எனவும் சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications