"சார் உங்க ஆசிர்வாதம் வேணும்".. அமைச்சர் கையை பிடித்த ஆவடி கமிஷ்னர்.. சர்ச்சை.. என்ன நடந்தது?
சென்னை: ஆவடி காவல் ஆணையரகத்திற்கு ஆணையராக நியமிக்கப்பட்டு இருக்கும் சந்தீப் ராய் ரத்தோர் சமீபத்தில் அமைச்சர் ஒருவரை சந்தித்தது பெரிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த பட்ஜெட் சட்டசபை கூட்டத் தொடரில் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை மானிய கோரிக்கையில் சென்னை காவல்துறை 3ஆக பிரிக்கப்படும் என்று அறிவிப்பு முதல்வர் ஸ்டாலின் மூலம் வெளியிடப்பட்டது. நிர்வாக வசதிக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டது.
சென்னை காவல்துறையை பிரிக்க வேண்டும் என்பது திமுகவின் பல வருட திட்டம். 2008லேயே சென்னை காவல்துறை இரண்டாக பிரிக்கப்பட்டது. அதன்பின் ஜெ ஆட்சியில் இந்த முடிவு கைவிடப்பட்டு பின்னர் இப்போது மீண்டும் மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகங்கள் என்று மொத்தம் மூன்று காவல் ஆணையரகங்கள் உருவாக்கப்பட்டது.

ஆணையர்
புதிதாக உருவாக்கப்பட்ட காவல் ஆணையரகங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டனர். தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகத்திற்கு சிறப்பு அதிகாரிகளாக ரவி, சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் இவர்களை ஆணையர்களாக நியமித்து தமிழ்நாடு அரசு சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது.

ஆவடி ஆணையர்
இந்த நிலையில்தான் ஆவடி ஆணையராக நியமிக்கப்பட்டு இருக்கும் சந்தீப் ராய் ரத்தோர் சர்ச்சையில் சிக்கி இருப்பதாக போலீஸ் வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபடுகின்றன. அமலாக்கப் பிரிவு ஏடிஜிபியாகப் பதவி வகித்து வந்த சந்தீப் ராய் ரத்தோர் ஆவடி சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு தற்போது ஆவடி ஆணையராக பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.

சந்தீப் ராய் ரத்தோர்
முன்பு திமுக ஆட்சியில் 2006 -2011 இடைப்பட்ட காலத்தில் சில வருடம் சென்னையில் ஜாயிண்ட் கமிஷ்னர் பொறுப்பில் இருந்தவர். அதன்பின் அதிமுக ஆட்சியில் பெரிய அளவில் இவருக்கு பெரிய போஸ்டுகள் கிடைக்கவில்லை. அதன்பின் திமுக ஆட்சிக்கு வந்ததும் சென்னை காவல் ஆணையர், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி போன்ற பதவிகள் இவருக்கு கிடைக்கும் என்று எதிர்பார்ப்புகள் நிலவி வந்தன.

ஆவடி ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர்
ஆனால் அந்த பதவிகள் வழங்கப்படவில்லை. இந்த நிலையில்தான் கடைசியில் ஒருவழியாக தற்போது சந்தீப் ராய் ரத்தோர் ஆவடி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆட்சி தலைமைக்கு நெருக்கமான சிலர் கொடுத்த சிபாரிசும் இதற்கு காரணமாக இருக்கலாம் என்று போலீஸ் வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபடுகின்றன. கட்சி நிர்வாகிகள், திமுக அமைச்சர்கள் சிலருக்கு இவர் நெருக்கமாக இருந்த நிலையில் இவர் குறித்து குட் பீட்பேக் ஆட்சி தலைமைக்கு சென்றதாக கூறப்படுகிறது.

எப்படி பதவி?
இதற்கு பின்பே இந்த உயரிய பதவி இவருக்கு வழங்கப்பட்டதாகவும் பேச்சுக்கள் அடிபடுகின்றன. ஆனால் போலீஸ் தரப்பில் வேறு சிலரிடம் விசாரித்ததில், அதெல்லாம் ஒரு சிபாரிசும் இல்லை. எல்லாம் ரேங்கிங் அடிப்படையில் வழங்கப்பட்ட பதவிகள்தான். அவர் இந்த பதவிக்கு தகுதியானவர். இந்த பதவி உருவாக்கப்படவில்லை என்றாலும் வேறு உயரிய பதவி கண்டிப்பாக வந்து இருக்கும்.. ரேங்க் அடிப்படையில் மட்டுமே பதவி வழங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் சந்தீப் ராய் ரத்தோர்
இப்படிப்பட்ட நிலையில்தான் சமீபத்தில் திமுக அமைச்சர் ஒருவரை சந்தித்து இவர் வாழ்த்து பெற்றதாக போலீஸ் வட்டாரத்தில் பேச்சுக்கள் எழுந்துள்ளன. இவர்கள் சந்திப்பு தொடர்பான புகைப்படங்களும், வீடியோவும் இணையத்தில் வெளியாகின பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளது. சந்தீப் ராய் ரத்தோர் திமுக அமைச்சர் ஒருவரை சந்தித்து.. "சார் உங்கள் ஆசிர்வாதம் வேண்டும் சார்" என்று கூறியது வீடியோவாக வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

விமர்சனம்
கமிஷ்னர் ஒருவர்.. இப்படி அமைச்சரை சந்தித்து.. அவரின் கையை பிடித்து சார் உங்களின் ஆசிர்வாதம் வேண்டும் சார் என்று கேட்பது எல்லாம் சரியா என்று இணையத்தில் சிலர் இந்த வீடியோவை பகிர்ந்து கேள்வி எழுப்பி உள்ளனர். ஒரு போலீஸ் அதிகாரி இப்படி செய்யலாமா. இது சரியான நடைமுறை கிடையாது. இதற்கு முன்பெல்லாம் இப்படி நடந்தது கிடையாதே என்று சிலர் விமர்சனங்களை வைத்து வருகிறார்கள்.

போஸ்ட்
இதேபோல் இன்னொரு பக்கம் புத்தாண்டின் போது சென்னையை சேர்ந்த திமுக மாவட்ட செயலாளர் ஒருவரை போலீசார் சிலர் சந்தித்து ஆசி பெற்றுள்ளனர். இதுவும் பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்துள்ளது. சென்னையை சேர்ந்த மூத்த அதிகாரிகள் சிலர் அந்த மாவட்ட செயலாளர் ஒருவரை சந்தித்து புத்தாண்டின் போது வாழ்த்து பெற்றுள்ளனர்.. அவரும் அதை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து இருக்கிறார். இதுதான் போலீசார் வட்டாரத்தில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications