3 ஆண்டுகள் திமுக ஆட்சி எப்படி? மின் கட்டண உயர்வு முதல் ஊழல் புகார் வரை! அய்யநாதன் Decodes
சென்னை: திமுக ஆட்சியில் ஊழல்கள் குறையவில்லை என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் கூறியுள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. 4வது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளது.
இந்த மூன்று ஆண்டுகளில் பல துறைகளில் திமுக சாதித்துள்ளது. குறிப்பாகக் குடிசை மாற்றுவாரியம் மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

அடுத்து இந்து சமய அறநிலையத் துறை. கிட்டத்தட்ட ஆட்சிக்கு வந்த 860 நாட்களில் 1041 கோயில்களுக்குக் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. அதே மாதிரி அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம். மிகச் சிறப்பாகச் செயல்வடிவம் பெற்றுள்ளது.
இந்தத் திமுக ஆட்சியின் மாபெரும் சாதனையாகக் காலை உணவுத்திட்டம், கல்லூரி பெண்களுக்கு, குடும்பத் தலைவிகளுக்கு தலா ஆயிரம் ரூபாய் திட்டம், சாஹித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர்களுக்குக் கனவு இல்லம் வழங்கியது எனப் பலவற்றைக் கூறலாம்.
ஆனால், ஏறிய அளவுக்கு இந்த ஆட்சி சறுக்கவும் செய்துள்ளது. குறிப்பாக மின்கட்டண உயர்வு. அதிமுக ஆட்சியில் போராட்டம் எல்லாம் நடத்திய திமுக, ஆட்சிக்கு வந்ததும் விண்ணை முட்டும் அளவுக்கு மின் கட்டணத்தை உயர்த்தியது.
அடுத்து வீட்டு வரி, குடிநீர் வரி. பத்திரப்பதிவு கட்டணம் என்பது தங்கம் விலை போலத் தினம் ஒரு அப்டேட் கொடுத்து மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது.
மேலும் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார், கைது இவை எல்லாம் ஆட்சிக்கு ஒரு பக்கம் கெட்ட பெயரை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
இந்நிலையில் திமுக 3 ஆண்டு ஆட்சியின் பற்றி மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் அவரது கருத்துகளை முன்வைத்துள்ளார்.
இது குறித்து அவர், "ஒரு ஆட்சியானது ஏழை, எளிய மக்களின் வலிகளைப் புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும். அந்த வகையில் ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்புள்ள ஆட்சியாகவும் உணர்வுகளைப் புரிந்துகொள்ளக்கூடிய ஆட்சியாகவும் இருந்துள்ளது.

மகளிருக்கு 1000 ரூபாய் கொடுத்தது, பெண்களுக்கு இலவச பேருந்து சேவையை ஏற்படுத்திக் கொடுத்தது, கல்லூரி படிப்பை மேற்கொள்ளும் பெண் பிள்ளைகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கியது, பள்ளிக் குழந்தைகளுக்குக் காலை உணவு கொடுத்தது என சில நல்ல திட்டங்களைக் கொண்டுவந்துள்ளார்கள் என்பது உண்மை.
இந்தத் திட்டங்களை எல்லாம் நான் வரவேற்கிறேன். ஆதரிக்கிறேன். அதன்பொருட்டு 50 மதிப்பெண்கள் கொடுக்கிறேன். ஆனால், இந்த ஆட்சியில் அதே ஊழல்கள் தான் நடந்துகொண்டுள்ளது என்பதை நாம் யாரும் மறுக்கவே முடியாது. மணல் கொள்ளை முதல் டாஸ்மாக் வரை ஊழல் ஊறிப்போய் உள்ளது. இதனால் தான் சட்டம் ஒழுங்கு கவலை அளிக்கும் விதத்தில் உள்ளது.
விவசாயத்திற்கு இந்த ஆட்சி பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. வாழக்காய், வெங்காயம், வெள்ளைப்பூண்டு, தக்காளி, கேரட், அன்னாசிப் பழம் இவை எல்லாம் 4 மாத உழைப்பில் கிடைக்கக் கூடிய காய்கறிகள்.
இவற்றில் எல்லாம் கூட எம்.எஸ்.வி என்பது உள்ளது. மிகப்பெரிய தயாரிப்புகள் மட்டுமே இல்லை. ஆகவே இவற்றில் கூட அரசு கவனம் செலுத்த வேண்டும். ஏதோ விவசாயம் என்பது மத்திய அரசு சார்ந்தது என நினைக்கக் கூடாது" என்கிறார்.
திமுக அமைச்சரவை மாற்றம் குறித்துப் பேசி அவர், "கட்டாயம் தேவை. ஏனென்றால் பழைய ஆள்களே கட்சியைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது நல்லது அல்ல. அதில் புதிய ரத்தம் பாய வேண்டும்.

எனவே மாற்றம் என்பது செய்யப்பட வேண்டும். அதற்காக அமைச்சர்களின் வாரிசுகளுக்கே முக்கியத்துவம் அளிக்கக் கூடாது. திமுக மீதான விமர்சனத்தை வைக்க நீங்கள் யார் என நம்மை உடனே கேட்பார்கள்.
ஒரு அரசியல் கட்சி மீதான விமர்சனத்தை யார் வேண்டுமானாலும் வைக்கலாம். அதனடிப்படையில் தான் சொல்கிறோம்" என்று குறிப்பிட்ட அய்யநாதன் பாஜக தமிழ்நாட்டில் பெற்றுள்ள வளர்ச்சி பற்றிய சில கருத்துகளை முன்வைத்துள்ளார்.
"பாஜக தமிழ்நாட்டில் ஒருநாளும் வெற்றி பெற முடியாது. கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்ற பாஜக ஆட்சியால் தமிழ்நாட்டுக்கு ஒரு பலனும் இல்லை. இங்கிருந்து சென்ற ஒரு அமைச்சரால் கூட ஒரு மாற்றத்தைக் கூட தமிழ்நாட்டில் செய்ய முடியவில்லை.
அந்தக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டுக்குக் கிடைத்த திட்டம் இது என்று ஒன்றைக் கூடச் சொல்ல முடியாது.
ஆனால், தமிழக பாஜகவில் ஒரு எதிர்பாராத மாற்றம் ஒன்று நடந்துள்ளது. ஜெயலலிதா இறந்த பிறகு உயர்சாதி வாக்காளர்கள் பலர் பாஜகவுக்கு ஓட்டுப் போடத் தொடங்கி உள்ளனர்.
அதிமுகவை எப்படியாவது உருக்குலைத்து தன்பக்கம் பாஜக கொண்டு வந்துவிடலாம் என்று தப்புக் கணக்குப் போடுகிறது. அதைத்தான் அண்ணாமலை பேசி வருகிறார்.
அதிமுகவை எப்படிக் காப்பாற்ற வேண்டும் என்பது அந்தக் கட்சியின் தொண்டர்களுக்கு நன்றாகவே தெரியும். பாஜக மத்தியில் தோல்வியைச் சந்தித்து வீழ்ச்சி பெற்றவுடன் தான் உண்மையான அதிமுகவே உருவாகும். அதுவரை பாஜகவின் கட்டுப்பாட்டில் உள்ளவர்கள்தான் அதிமுக தலைமையில் இருப்பார்கள்.
இதுதான் உண்மை. ஆனால் தேர்தலுக்குப் பிறகு அதிமுக தன்னை மீண்டும் புதுப்பித்துக் கொள்வதற்காக வாய்ப்புகள் அதிகம் உள்ளன" என்கிறார்.












Click it and Unblock the Notifications