மத பிரச்சனையாக மாற்ற திட்டமிட்டு பொய்.. காரில் கொல்ல வந்ததாக "உருட்டிய" மதுரை ஆதீனம்.. பொய் அம்பலம்
சென்னை: உளுந்தூர்பேட்டை அருகே நடந்த விபத்தை அடுத்து, தன்னை திட்டமிட்டு கொல்ல சதி நடப்பதாக மதுரை ஆதீனம் குற்றஞ்சாட்டி இருந்தார். இந்த நிலையில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அவர் சொன்னது அத்தனையும் பொய் என்பது உறுதியாகி உள்ளது. இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் மத கலவரத்தை உருவாக்கும் வகையில் அவர் பேசி இருந்ததும்.. கடைசியில் பார்த்தால் அவர் சொன்னது எதுவுமே உண்மையில் நடக்கவில்லை என்பதும் சிசிடிவி காட்சிகள் மூலம் அம்பலம் ஆகி உள்ளது
உளுந்தூர்பேட்டை அருகே நடந்த விபத்தை அடுத்து, தன்னை திட்டமிட்டு கொல்ல சதி நடப்பதாகவும், இதன் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாகவும் மதுரை ஆதீனம் குற்றம் சாட்டிய நிலையில், சிசிடிவி காட்சியை போலீசார் வெளியிட்டுள்ளனர்.

சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள கல்வி நிறுவன வளாகத்தில், திருக்கயிலாய பரம்பரை தர்மபுரம் ஆதீனத்தின் சர்வதேச சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் SRM அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் இணைந்து நடத்திய அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா, ஆளுநர் ஆர்.என்.ரவி தருமபுரம் ஆதீனம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆதீனம் சொன்ன பொய் என்ன?
இதில் அவர் கலந்து கொண்டு சென்ற போதுதான் உளுந்தூர்பேட்டை அருகே தன்னை கொலை செய்ய சதி நடந்ததாக கூறி இருந்தார். மதுரை ஆதீனத்தின் 293-வது பீடாதிபதியான ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞான சம்பந்ததேசிக பரமாச்சார்யா இது தொடர்பாக பேசுகையில், வேண்டுமென்றே மதம் ஒன்றை பற்றி மறைமுகமாக குறிப்பிட்டு பேசினார். பேரிகார்டை உடைத்துக்கொண்டு வந்தனர். விபத்துக்குப் பிறகு நிறுத்தாமல் சென்றுவிட்டனர். இதில் நான் மயக்கமடைந்துவிட்டேன்.
ஆனால் என் கார் டிரைவர், தொப்பி அணிந்து தாடி வைத்த ஒருநபர் காரில் நம்பர் பிளேட் இல்லாமல் ஓட்டி வந்து மோதியதாக தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் தரவில்லை. ஆண்டவன் சிவபெருமானிடம் புகார் தந்துவிட்டேன். இந்த நாட்டில் சிறுபான்மையினருக்கே சலுகைகள் அதிகம். என் புகாரை எடுக்கமாட்டார்கள் என மதுரை ஆதீனம் பகிரங்கமாக குற்றம்சாட்டி இருந்தார்.
ஆதீனம் சொன்ன பொய்களின் லிஸ்ட்
சிசிடிவி காட்சியில், ஆதீனம் பயணித்த கார் அதிவேகமாக சென்று சாலையைக் கடந்தபோது விபத்து நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அவர் சொன்னது எல்லாம் பொய் என்று நிரூபணம் ஆகிறது. இது போக சிசிடிவி அடிப்படையில் பார்த்தால்
1. பேரிகார்டை உடைத்துக்கொண்டு வந்தனர் என்று கூறியது பொய். அப்படி ஒன்று அங்கே நடக்கவே இல்லை.
2. விபத்துக்குப் பிறகு நிறுத்தாமல் சென்றுவிட்டனர். இதில் நான் மயக்கமடைந்துவிட்டேன், என்று கூறியது பொய். விபத்தில் சிக்கிய இரண்டு காரும் அங்கேயே நிற்கிறது.
3. என் கார் டிரைவர், தொப்பி அணிந்து தாடி வைத்த ஒருநபர் காரில் நம்பர் பிளேட் இல்லாமல் ஓட்டி வந்து மோதினார், என்று கூறியது பொய். காரில் நம்பர் பிளேட் இருக்கிறது. அது பொய்.. அதோடு கார் இடித்த வேகத்தை பார்க்கையில் அவர் சொன்ன அடையாளங்களை ஆதீனமே கவனித்திருக்க முடியாது. அதுவும் பொய்.
4. இப்படி மத ரீதியாக இதை மடைமாற்றிவிட்டு.. இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் தரவில்லை. ஆண்டவன் சிவபெருமானிடம் புகார் தந்துவிட்டேன். இந்த நாட்டில் சிறுபான்மையினருக்கே சலுகைகள் அதிகம். என் புகாரை எடுக்கமாட்டார்கள் என மதத்தை உள்ளே இழுத்து மதுரை ஆதீனம் பகிரங்கமாக குற்றம்சாட்டி இருந்தார். பொய் சொன்னதோடு சிறுபான்மையினர்.. சிவபெருமான் என்றெல்லாம் ரைமிங்காக வேறு உருட்டி இருக்கிறார்.
திட்டமிட்டு கொல்ல நடந்த சம்பவம் என குற்றம் சாட்டிய மதுரை ஆதீனம் - சிசிடிவி காட்சியில் அம்பலமான உண்மை#MaduraiAadhenam pic.twitter.com/RBpYSfsPqV
— எம். சின்னத்தம்பி (@cinnattampi) May 4, 2025
யார் மீது தவறு?
சிசிடிவி அடிப்படையில் மதுரை ஆதீனம் பயணித்த வாகனத்தின் ஓட்டுநரின் கவனக்குறைவே முழுக்க முழுக்க விபத்துக்கு காரணம் என்றும் போலீசார் தெரிவித்தனர். விபத்து தொடர்பாக இதுவரை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புகார்கள் கொடுக்கப்படவில்லை என்றும் பொய்யான தகவல்களை சமூகவலைதளங்களில் பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மதுரை ஆதீனமாக 292-வது குருமகா சன்னிதானம் அருணகிரிநாதர் இருந்த போது அவர் மத நல்லிணக்கத்தை பறைசாற்றியவர். இஸ்லாமிய பாடல்களை பாடக்கூடியவர்.. இஸ்லாமிய தொழுகையை கூட பிழையின்றி சொல்ல கூடியவர். கடைசி மூச்சு வரை.. மத நல்லிணக்கம் பேசியவர். அதனால்தான் அவர் மதம் கடந்தும்.. அரசியல் கடந்தும் மக்களிடம் இடம் பிடித்தார்.
பல முற்போக்கு விஷயங்களை பேசி இருக்கிறார். ஒரு மகா சன்னிதானம் எப்படி இருக்க வேண்டும்.. அந்த பொறுப்பில் இருப்பவர் எப்படி நடக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருந்தார். அவரின் இடத்தை நிரப்பி இருக்கும் பீடாதிபதியான ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞான சம்பந்ததேசிக பரமாச்சார்யா அவரை போல மதநல்லிணக்கம் எல்லாம் கூட பேச தேவையில்லை.. மத கலவரம் ஏற்படுத்தாமல் இருந்தாலே போதும்.. முக்கண் கொண்ட சிவனை வணங்கும் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞான சம்பந்ததேசிக பரமாச்சார்யரே.. சாலையில் உள்ள மூன்றாவது கண் சிசிடிவிவை மறந்துட்டீங்களே பாஸ்!












Click it and Unblock the Notifications