நீதிமன்றத்துக்கும் வீட்டுக்கும் எடப்பாடி பழனிசாமி அலைவார்! ஆருடம் கூறும் பெங்களூர் புகழேந்தி!
சென்னை: எடப்பாடி பழனிசாமியும் அவரது தரப்பும் நீதிமன்றத்துக்கும் வீட்டுக்குமாக அலையப் போகிறார்கள் எனக் கூறியிருக்கிறார் பெங்களூரு புகழேந்தி.
கலவரத்தை தூண்டியது யார் என்ற உண்மைகள் எல்லாம் விரைவில் வெளியில் வரும் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோ பதிவில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுக்குழு
ஜூலை பதினொன்றாம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற போது ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்தார். அப்போது கலவரம் ஏற்பட்டது. இதில் ஓபிஎஸ் தரப்பினர் கடுமையாக தாக்கப்பட்டதாக கூறி, இதற்கு காரணமான ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையில் துணை ஒருங்கிணைப்பாளர் ஜேசிடி பிரபாகரன் புகார் அளித்தார்.

நீதிமன்றம் கேள்வி
இது குறித்து எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளாத நிலையில் இன்று உயர்நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கு விசாரணைக்கு வந்த போது, ஓபிஎஸ் தரப்பினர் தாக்கப்பட்டது குறித்து ஏன் விசாரிக்கவில்லை என நீதிபதி இளந்திரையன் கேள்வி எழுப்பியதுடன் இதுகுறித்து விளக்கம் அளிக்க அரசு தரப்புக்கு உத்தரவிட்டு வழக்கை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்தி வைத்துள்ளார்.

பெங்களூர் புகழேந்தி
இந்நிலையில் பெங்களூர் புகழேந்தி வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது; ''ஜூலை 11 ஆம் தேதிக்கு முன்பே சுமார் 500 பேர் அதிமுக தலைமை அலுவலகத்தில் குவிக்கப்பட்டு ஏழு மாவட்ட செயலாளர்கள் தலைமையில் ரவுடிகள் அங்கே தங்கி திட்டமிட்டு ஓபிஎஸ் அலுவலகம் வரும் போது அவரது ஆதரவாளர்களை கடுமையாக தாக்கியுள்ளனர்.''

எடப்பாடி தான் காரணம்
''ஏழு மாவட்ட செயலாளர்கள் பொதுக் குழு கூட்டத்தில் கலந்து கொண்டதாக கூறப்படும் நிலையில் தலைமை அலுவலகத்தின் அருகே இருந்து கொண்டு ரவுடிகளுக்கு தோள் கொடுத்து எப்படி கலவரத்தை தூண்டியுள்ளனர் என்ற உண்மை வெளியில் வரும். இந்த கலவரத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி தான் காரணம். அவரால் ஏவப்பட்டவர்கள் தான் ஏழு மாவட்ட செயலாளர் தலைமையில் தாக்கிய ரவுடிகள் என்பது உண்மை. இது குறித்த உண்மைகள் எல்லாம் விரைவில் வெளியில் வரும். தொடர்ந்து இபிஎஸ் தரப்பினர் குற்றவியல் நீதிமன்றங்களுக்கு அலைய வேண்டிய சூழல் உருவாகியுள்ளது''. இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications