ஆட்டோ ஸ்வீப் ஜாக்பாட்.. வங்கி கணக்கில் 25,000 ரூபாய்க்கு மேல் வைத்துள்ளீர்களா? உடனே கவனிக்க வேண்டிய வசதி
சென்னை: நாம் அனைவரும் கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தை மிகவும் பாதுகாப்பான இடம் என்று கருதி வங்கிகளில் சேமித்து வைக்கிறோம்... அவசர தேவைக்கு உதவும் என்ற நம்பிக்கையில்தான் சேமிக்கிறோம்.. ஆனால், உண்மையில் அந்தப் பணம் அங்கே வளர்கிறதா அல்லது அதன் மதிப்பு தேய்கிறதா என்று எப்போதாவது சிந்தித்ததுண்டா? அதை பற்றிதான் இங்கே பார்க்க போகிறோம்..
பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வு விண்ணைத் தொடும் இந்த காலத்தில், வங்கிகள் வழங்கும் 3% முதல் 4% வரையிலான வட்டி விகிதம் என்பது பணத்தின் மதிப்பை தக்கவைக்கக்கூட போதுமானதாக இல்லை என்பதே கசப்பான உண்மை.

வங்கிப் பணம் தேய்கிறதா?
உதாரணத்திற்கு, ஒரு பொருளின் விலை ஆண்டுக்கு 6% உயர்கிறது என்று வைத்துக்கொள்வோம். ஆனால் உங்கள் வங்கி உங்களுக்கு 3.5% மட்டுமே வட்டி தருகிறது என்றால், ஓராண்டு கழித்து உங்கள் கையில் இருக்கும் பணத்தைக் கொண்டு அதே பொருளை உங்களால் வாங்க முடியாது.
அதாவது உங்கள் பணம் வளர்வதற்குப் பதிலாக மறைமுகமாகத் தேய்மானத்தைச் சந்திக்கிறது. இந்த இக்கட்டான சூழலில் இருந்து தப்பிக்கவும், வங்கியில் இருக்கும் பணத்தை இரட்டிப்பு வேகத்தில் வளர்க்கவும் ஒரு எளிய வழி இருக்கிறது. அதுதான் "ஆட்டோ ஸ்வீப்" என்ற சூப்பர் வசதி..
ஆட்டோ ஸ்வீப் - பணத்தை வளர்க்கும் தானியங்கி இயந்திரம்
இப்படியொரு வசதி இருப்பதே பலருக்கும் தெரிவதில்லை.. பல வங்கிகள் கஸ்டமர்களுக்கு இதை பற்றி தெளிவாக விளக்குவதில்லை....
ஆட்டோ ஸ்வீப் என்பது உங்கள் சேமிப்பு கணக்கையும், பிக்சட் டெபாசிட்டையும் இணைக்கும் ஒரு பாலம் போன்றது. இதில் "திரெஷோல்ட் லிமிட்" எனப்படும் ஒரு குறிப்பிட்ட பண வரம்பை நீங்கள் நிர்ணயம் செய்ய வேண்டும். உதாரணமாக, உங்கள் கணக்கில் 25,000 ரூபாய்க்கு மேல் இருக்கும் தொகை தானாகவே நிலை வைப்பு நிதியாக மாற வேண்டும் என்று நீங்கள் வங்கியிடம் தெரிவிக்கலாம்..
இப்போது உங்கள் கணக்கில் 1,00,000 ரூபாய் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் நிர்ணயித்த 25,000 போக மீதமுள்ள 75,000 ரூபாய் தானாகவே "ஸ்வீப்" செய்யப்பட்டு எப்.டி-யாக மாறிவிடும். இதற்கு சேமிப்பு கணக்கை விட அதிக வட்டி (சுமார் 6% முதல் 7.5% வரை) கிடைக்கும். இதன் மூலம் எவ்வித கூடுதல் முயற்சியும் இன்றி உங்கள் பணம் வளரத் தொடங்கும்.
அவசர தேவைக்கு தடையற்ற பணம்
பலருக்கும் இருக்கும் என்ன தெரியுமா? பணத்தை எப்.டி-யாக மாற்றிவிட்டால் அவசரத்திற்கு எடுக்க முடியுமா என்பதுதான்... இங்கேதான் ஆட்டோ ஸ்வீப் வசதி உங்களுக்கு உதவுகிறது..
உங்களுக்குப் பணம் தேவைப்படும்போது, நீங்கள் எப்போதும் போல ஏடிஎம் மூலமாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ பணத்தை எடுக்கலாம். முதலில் சேமிப்பு கணக்கில் உள்ள பணம் பயன்படுத்தப்படும். ஒருவேளை நீங்கள் எடுக்கும் தொகை அதிகமாக இருந்தால், எப்.டி-யாக மாற்றப்பட்ட பணத்திலிருந்து தேவையான அளவு மட்டும் தானாகவே சேமிப்பு கணக்கிற்குத் திரும்பி வந்துவிடும்... மீதமுள்ள தொகைக்குத் தொடர்ந்து அதிக வட்டி கிடைத்துக்கொண்டே இருக்கும்.
அதுமட்டுமல்ல, நீங்கள் பேங்குக்கு போகாமலேயே மொபைல் ஆப் அல்லது நெட் பேங்கிங் மூலம் இந்த வசதியை நீங்களே ஆக்டிவேட் செய்ய முடியும். உங்கள் உழைப்பின் பலன் சும்மா இருக்காமல் உங்களுக்காக உழைக்க வேண்டும் என்றால், ஆட்டோ ஸ்வீப் பெஸ்ட் ஆப்ஷன் என்றே சொல்லலாம்..
ஆட்டோ ஸ்வீப் - பெஸ்ட் ஆப்ஷன்
முதலீடுகள் பற்றி பெரிய அளவில் தெரியாத சாதாரண மக்களுக்கும், கணக்கில் எப்போதும் உபரி பணம் வைத்திருப்பவர்களுக்கும் இது ஒரு வரப்பிரசாதம்..
இருந்தாலும், ஒரு சின்ன விஷயத்தைக் கவனிக்க வேண்டும்.. சில வங்கிகள் இந்த வசதிக்கு மிகச் சிறிய அளவில் கட்டணம் வசூலிக்கலாம் அல்லது எப்.டி முதிர்வுக்கு முன்பே எடுக்கப்படுவதால் வட்டி விகிதத்தில் லேசான மாற்றங்கள் இருக்கலாம். அதனால், இந்த வசதியைப் பயன்படுத்தும் முன்பு உங்கள் வங்கியின் விதிமுறைகளை ஒருமுறை சரிபார்ப்பது அவசியம்.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, பணத்தை சும்மா வைத்திருப்பதை விட, இது மிகப்பெரிய லாபத்தை தரக்கூடியது என்றே சொல்லலாம்..!!












Click it and Unblock the Notifications