தமிழகத்தில் நாளை முதல் வங்கிகள் சேவை நேரம் குறைப்பு... கஸ்டமர்ஸ் போக வேண்டிய டைம் என்ன தெரியுமா?
சென்னை: கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் நாளை முதல் வங்கிகள் சேவை நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக மாநில வங்கியாளர்கள் குழுமம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை அதிவேகமாக பரவி வருகிறது. தினமும் 14,000-க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகி வருகின்றன.

கொரோனவை கட்டுப்படுத்த தமிழகத்தில் தினமும் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு போடப்பட்டுள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் போடப்பட்டுள்ளது. இது தவிர தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள், உடற்பயிற்சி கூடங்கள் மூடப்படும். கோவில்களில் மக்களுக்கு அனுமதி இல்லை.
நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் சலூன் கடைகளும் அடைக்க வேண்டும்; சிறிய கடைகள் குளிர்சாதன வசதி இல்லாமல் 50% வாடிக்கையாளருடன் இயங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் நாளை முதல் வங்கிகள் சேவை நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக மாநில வங்கியாளர்கள் குழுமம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மாநில வங்கியாளர்கள் குழுமம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:- தமிழகத்தில் நாளை முதல் வருகிற 30-ம் தேதி வரை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே வங்கியில் வாடிக்கையாளர் சேவை நடைபெறும். இந்த நேரங்களில் வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்க்ளுக்கு கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளுடன் சேவை வழங்கப்படும். உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளோர், கர்ப்பிணிகள், மாற்றுத்த்திறனாளிகள் ஆகியோர் வீட்டில் இருந்தே பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications