மணிக்கணக்கில் ஓடும் வட்டி.. 11 லட்சம் கோடி கடன் பொறி.. தமிழக நிதி நெருக்கடியில் விஜய் என்ன செய்வார்
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக வெற்றி பெற்றுள்ள நிலையில், முதல்வராகப் பொறுப்பேற்கும் விஜய்க்கு வாழ்த்துகள் ஒருபுறம் குவிந்தாலும், அவர் முன்பிருக்கும் நிர்வாக சவால்கள் மலைப்போல வந்து நிற்கின்றன. 11 லட்சம் கோடி கடன் சுமை, ஒரு சவரன் தங்கம் போன்ற அதிரடி வாக்குறுதிகள் என நிதி நெருக்கடி ஒருபுறம் அழுத்த, அனுபவம் வாய்ந்த அதிகாரிகளையும் எதிர்க்கட்சிகளையும் விஜய் எப்படிக் கையாளப் போகிறார் என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் இப்போதே எழுந்துவிட்டது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று அரியணையில் அமரப்போகிறார் விஜய். சினிமாவில் ஒரு நடிகராகப் பெரிய உயரங்களைத் தொட்ட அவருக்கு, நிஜ அரசியல் களம் இப்போதுதான் சேலஞ்ச் நிறைந்ததாக அமைந்துள்ளது.

வெறும் ரசிகர்கள் பலத்தை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு மாநிலத்தை நிர்வகிப்பது என்பது சாதாரண விஷயமல்ல. அதுவும் தமிழகம் போன்ற ஒரு சிக்கலான அரசியல் சூழலில், விஜய் முகம் கொடுக்க வேண்டிய சவால்கள் பலமுனைத் தாக்குதலாக இருக்கப்போகிறது.
பிராமிஸஸ் & அரசின் நிதி நெருக்கடி
தேர்தல் பிரசாரத்தில் விஜய் அள்ளிவிட்ட வாக்குறுதிகள் சாதாரணமானவை கிடையாது.. ஒரு சவரன் தங்கம், பெண்களுக்கு மாதம் 2,500 ரூபாய், 6 இலவச சிலிண்டர் என்று லிஸ்ட் பெரிதாக போகிறது.. இதையெல்லாம் நிறைவேற்ற எப்படியும் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் கூடுதல் நிதி தேவைப்படும்.
ஆனால் தமிழகத்தின் கடன் சுமையோ 11 லட்சம் கோடியைத் தொடப் போகிறது. சிவப்பிரியன் போன்ற அரசியல் ஆய்வாளர்கள் சொல்வது போல, இந்த திட்டங்களை செயல்படுத்தப் பணத்தை எங்கே பிடிக்கப்போகிறார்கள் என்பதுதான் பெரிய தலைவலி. அதுமட்டுமல்ல, சொன்னதை செய்யாவிட்டால் மக்கள் மத்தியில் இருக்கும் அந்த "மாற்றம்" என்ற பிம்பம் உடைந்துவிடும்.
நிதி நிலைமையை சீர்குலைக்காமல் எப்படி இந்த வாக்குறுதிகளைத் தள்ளிப்போடாமல் நிறைவேற்றப் போகிறார் என்பதே பெரிய கேள்விக்குறி.
அரசு இயந்திரமும், ஆபீசர்களும்
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்றவர்கள் அரசியலில் பல வருஷங்களாகவே ஊறிப் போய்தான் முதல்வர் நாற்காலிக்கு வந்தார்கள். ஆனால் விஜய்க்கு அந்தப் பின்புலம் கிடையாது. அமிகக் குறுகிய காலத்தில் விஜய் இந்த இடத்தை எட்டியிருக்கிறார். இதனால் அரசு அதிகாரிகளை ஒருங்கிணைப்பதிலும், கோப்புக் கோப்புகளாக நகரும் அந்த அரசு இயந்திரத்தைப் புரிந்துகொள்வதிலும் ஆரம்பத்தில் திணறல் இருக்க வாய்ப்பு உண்டு.
சினிமா செட்டில் டைரக்டர்களை சமாளிப்பது போல அதிகாரிகளை சமாளிக்க முடியாது. தகுதியான அதிகாரிகளைச் சரியாகத் தேர்ந்தெடுத்து வேலை வாங்குவதுதான் ஒரு முதல்வராக விஜய்க்கு இருக்கும் மிகப்பெரிய வேலை.
அதிகாரிகள் தேர்வு சிக்கலான விஷயம்
ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் சொல்லும்போது, "தற்போதுள்ள ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் ஏற்கனவே திமுக அல்லது அதிமுக ஆட்சியில் பணியாற்றியவர்களாக இருப்பார்கள். எடப்பாடி அல்லது ஸ்டாலின் ஆட்சியில் பணியாற்றியவர்களாக இருப்பார்கள். அவர்களைத் தவிர்த்துவிட்டு ஒரு மூன்றாவது செட் அதிகாரிகளைத்தான் தேர்ந்தெடுக்க முடியும்.
ஆனால் அவர்களுக்குத் துறை சார்ந்த அனுபவம் குறைவாக இருக்க வாய்ப்புள்ளது. இதனால் அமைச்சர்களுக்கும் அனுபவம் இருக்காது, அதிகாரிகளுக்கும் போதிய அனுபவம் இருக்காது என்ற சூழல் உருவாகலாம் அதனால் அதிகாரிகளை எப்படி சமாளிப்பது? த.வெ.க-விற்கு விசுவாசமான அல்லது அனுபவமிக்க புதிய அதிகாரிகளைக் கண்டறிந்து நிர்வாகத்தைச் சீரமைப்பது எளிதான காரியமல்ல" என்பதை சுட்டிக்காட்டுகிறார்.
கட்சிக்குள் எழும் அதிகாரப் போட்டி
வெளியில் இருக்கும் சவால்களை விட, கட்சிக்கு உள்ளே எழும் அழுத்தங்கள்தான் விஜய்க்குப் பெரும் தலைவலியாக இருக்கப்போகிறது. கட்சியின் வெற்றிக்காக உழைத்த நிர்வாகிகள், பதவிக்காகக் காத்திருக்கும் ஆதரவாளர்கள் என எல்லோருடைய எதிர்பார்ப்பையும் ஒரே நேரத்தில் பூர்த்தி செய்வது சாத்தியமில்லை.
"தனக்கு என்ன கிடைக்கும்?" என்ற கேள்வி கட்சிக்குள் எழும்போது, அதை விஜய் எப்படிக் கையாளப் போகிறார் என்பது அவரது தலைமைப் பண்புக்கான சோதனை. உள்கட்சி மோதல்களைச் ஆரம்பத்திலேயே கிள்ளி எறியாவிட்டால், அது ஆட்சியின் செயல்பாட்டைப் பாதிக்கும்.
மத்திய அரசு சமாளிப்பு
சட்டமன்றத்தில் ஸ்டாலின், எடப்பாடி போன்ற அனுபவம் வாய்ந்த தலைவர்களைச் சமாளிப்பது விஜய்க்குப் புதிய அனுபவம். அவர்கள் வைக்கும் அரசியல் நெருக்கடிகளுக்கு விஜய் எப்படி ரியாக்ட் செய்யப்போகிறார் என்பதைப் பொறுத்தே அவரது அரசியல் எதிர்காலம் அமையும்.
இதுபோக, மத்திய அரசுடனான உறவு. மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்காமல், அதே சமயம் மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய நிதியைப் பெறுவதில் விஜய் எந்த அளவுக்கு வேகம் காட்டுவார் என்பதைப் பார்க்க வேண்டும். எனவே ஒரு முதல்வராக விஜய்க்கு இது வெறும் ஆரம்பம்தான். சினிமாவில் காட்டும் 'மாஸ்' அரசியலில் எடுபடுமா என்பது போகப்போகத் தெரிந்துவிடும்.. பொறுத்திருந்து பார்ப்போம்!!












Click it and Unblock the Notifications