மு.க.ஸ்டாலினுக்கு எதிரான மு.க. அழகிரி பேச்சு.. தூக்கி வைத்து கொண்டாடும் அதிமுக-பாஜக
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடனான குடும்ப விவகாரங்களை பொதுமேடையில் பகிரங்கமாக மு.க. அழகிரி பேசிய பேச்சுகளை அதிமுக, பாஜகவினர் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மிக வலிமையானதாக இருக்கிறது. அதிமுக அணியில் பாஜக, தமாகா மட்டுமே கூட்டணியை உறுதி செய்துள்ளன. ஆனாலும் பாஜக தொகுதி பங்கீடு விவகாரங்களில் அடம்பிடித்து வருகிறது. தமாகாவும் தனிச்சின்னத்தில் மட்டுமே போட்டி என்பதில் உறுதியாக உள்ளது.

ரஜினியால் அதிர்ச்சியில் பாஜக
திமுக கூட்டணிக்கான வாக்குகளை சிதறடிக்க நடிகர் ரஜினிகாந்தை களமிறக்க பாஜக முயன்றது. ஆனால் ரஜினிகாந்த் தாம் அரசியலுக்கு வரவில்லை என அறிவித்துவிட்டார். இதனால் திக்கு தெரியாத காட்டில் கைவிடப்பட்ட நிலையில் பாஜக இருந்தது.

மதுரையில் அழகிரி
இந்த நிலையில் மதுரையில் தமது ஆதரவாளர்களுடன் மு.க. அழகிரி நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை விமர்சிப்பதை மட்டுமே இலக்காக வைத்துக் கொண்டு பேசினார் அழகிரி. அதேபோல் ஆதரவாளர்களுக்கும் கூட தெளிவான வழிகாட்டுதல் இல்லாமல், எப்படி இப்படி அப்படி என முடிவெடுத்தாலும் நல்ல முடிவு கெட்ட முடிவு எடுத்தாலும் என்னுடன் இருங்கள் என பேசினார் அழகிரி.

ஸ்டாலின் மீது அட்டாக்
இதில் மு.க.ஸ்டாலினுடனான குடும்ப விவகாரங்கள் தொடர்பாக பகிரங்கமாக மு.க.அழகிரி பேசியதை மட்டும் எடுத்துக் கொண்டு வழக்கம் போல அதற்கு முன்னுரை, பொழிப்புரை எழுதி சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர் அதிமுக-பாஜக கூட்டணி கட்சியினர். இவர்களைப் பொறுத்தவரை திமுக கூட்டணியை, திமுக தலைவர் ஸ்டாலினை விமர்சிக்க ஒரு துருப்பு கிடைத்துவிட்டது என்பது முக்கிய காரணம். அதுவும் அதிமுக-பாஜகவால் காலம் முழுவதும் வெறுக்கப்பட்ட கருணாநிதியின் மூத்த மகனே துருப்புச் சீட்டாக கிடைத்ததாக மகிழ்கின்றனர்.

பாஜக அதிமுகவினர் கொண்டாட்டம்
அழகிரியோ ஆடிக்கு ஒருமுறை.. அமாவாசைக்கு ஒருமுறை என பேசக் கூடியவர். அவரது மதுரை பேச்சும் அடுத்தடுத்து தொடர் நடவடிக்கைகள் இருக்கும் என்பதாகவும் வெளிப்படுத்தவும் இல்லை. ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என நம்பி திட்டமிடப்பட்டது இந்த ஆலோசனைக் கூட்டம். இப்போது ரஜினியும் அரசியல் களத்துக்கு வரவில்லை. அதனால் வேறுவழியே இல்லாமல் கூடி ஆலோசனை என்ற பெயரில் பேசிவிட்டு கலைந்து போயிருக்கின்றனர். இந்த ஒருநாள் பேச்சைத்தான் ஏதோ பயங்கர ஆயுதம் கிடைத்தது போல கொண்டாடி தீர்க்கின்றனர் அதிமுக- பாஜகவினர்.


Click it and Unblock the Notifications
