இந்தாங்கண்ணே! ஒரு நாள் பூரா வச்சிக்கோங்க! ரபேல் வாட்ச்சை செய்தியாளரிடம் கழற்றி கொடுத்த அண்ணாமலை!
சென்னை: ரபேல் வாட்ச்சில் ரெக்கார்டிங் ஆப்ஷன் இருக்கிறதா என கேட்ட செய்தியாளரிடம் வாட்ச்சை பாஜக தலைவர் அண்ணாமலை கழற்றி கொடுத்தார். அந்த வாட்ச்சை 24 மணி நேரம் வைத்திருந்து நீங்கள் கழற்றி பார்க்கலாம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
காயத்ரி ரகுராம் நேற்றைய தினம் பாஜகவிலிருந்து விலகினார். அவர் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை பிரஸ் மீட்டில் வைத்திருந்தார். அண்ணாமலையை ஒருமையில் பேசியிருந்தார்.
இந்த நிலையில் இன்றைய தினம் சென்னை திநகரில் உள்ள கமலாலயத்தில் செய்தியாளர்களை அண்ணாமலை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் பெண் காவலரிடம் அத்துமீறிய திமுகவினரை தாமதமாகவே கைது செய்தனர்.

சென்னை
சென்னையில் மாநகராட்சி பணியாளரை கைகளால் சுத்தம் செய்ய வற்புறுத்துகிறார்கள். இதற்காக திமுக எம்எல்ஏ எபினேசர் மீது நடவடிக்கை தேவைப்படுகிறது. ராகுல் காந்தி ஜோடோ யாத்திரையின் மூலம் பிரிவினையை ஏற்படுத்துகிறார் என்றார். இதையடுத்து காயத்ரி பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறியுள்ளாரே அது குறித்து உங்கள் பதில் என்ன என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

கொள்கை
என்னுடைய கொள்கை என்னவெனில் கட்சியிலிருந்து யார் விலகினாலும் அவர்களை வாழ்க என வாழ்த்துவது எனது குணம். கட்சியிலிருந்து வெளியே செல்லும் நபர்கள் என்னையோ கட்சியையோ புகழ்ந்து பேசி செல்ல வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. அவருடைய கருத்துகளை அவர் கூறியுள்ளார். பாஜகவில் நாடு முழுவதும் லட்சக்கணக்கான பெண்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

எங்கிருந்தாலும் வாழ்க காயத்ரி
ஒருவருக்கு கட்சியில் இருக்க பிடிக்கவில்லை என்றால் எதையாவது சொல்லிவிட்டுத்தான் செல்வார்கள். இதனால் எனக்கு எந்த வருத்தமும் கிடையாது. காயத்ரியின் வாழ்க்கை நன்றாக இருக்கட்டும். யார் என் மீது குற்றச்சாட்டை முன் வைத்தாலும் என் பதில் மவுனம்தான். மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் முடிவு எடுக்கட்டும் என்றார்.

ரபேல் வாட்ச்
இந்த நிலையில் செய்தியாளர் ஒருவர் உங்கள் ரபேல் வாட்ச்சில் ரெக்கார்டிங் ஆப்ஷன் இருக்கிறதாமே என கேள்வி எழுப்பினார். அதற்கு அண்ணாமலை உடனே அந்த வாட்சை கழற்றி அந்த செய்தியாளரிடம் கொடுத்தார். பின்னர் இந்த வாட்சை நீங்கள் 24 மணி நேரம் உங்களுடனே வைத்துக் கொள்ளுங்கள். அதை கழற்றி பாருங்கள். அதில் கேமரா இருக்கிறதா, ரெக்கார்டர் இருக்கிறதா என பாருங்கள். எங்கு வேண்டுமானாலும் சென்று பார்க்கலாம்.

செலவுகள்
தமிழகத்தில் எந்த இடத்திற்கும் கொண்டு போய் கழற்றி பாருங்கள். அதற்கான செலவுகளை நானே கொடுத்துவிடுகிறேன் என கூறினார். அண்ணாமலை கையில் கட்டியிருக்கும் வாட்ச் ஸ்விட்சர்லாந்து நிறுவனத்திற்கு சொந்தமானது என்றும் அதன் மதிப்பு ரூ 3.5 லட்சம் என்றும் தகவல்கள் வந்தன. இதுகுறித்து அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதில் கூறுகையில், நான் கட்டியிருக்கும் வாட்ச் ரபேல் நிறுவனத்தின் வாட்ச். இது உலகம் முழுவசும் 500 வாட்ச்கள் மட்டுமே உள்ளன. என் உயிர் இருக்கும் வரை இதை நான் கட்டியிருப்பேன். ஏனென்றால் நான் தேசியவாதி என்றார். இந்த வாட்ச்சிற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பில் கேட்டார். தமிழகம் முழுவதும் ஜனவரி மாதம் பாதயாத்திரையை தொடங்கவுள்ளதாகவும் அப்போது வாட்ச் பில், எனது சொத்து கணக்கு உள்ளிட்டவைகளையும் நான் வெளியிடுகிறேன் என தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications