எடப்பாடிக்காக ஓபிஎஸ்ஸை மொத்தமாக தூக்கி எறிந்த பாஜக.. காரணம் எல்லாம் அந்த பயணம்தான்? என்ன நடந்தது?
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பிரச்சாரப் பயணங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில், அதிமுகவுக்கும் தமிழக பாஜகவுக்கும் இடையிலான கூட்டணி பிணைப்பு நாளுக்கு நாள் வலுப்பெற்று வருவது கண்கூடாகத் தெரிய தொடங்கி உள்ளது. இந்த பயணம் காரணமாக எடப்பாடி பழனிசாமி - பாஜக இடையே நெருக்கம் ஏற்பட்டு உள்ளது.
தமிழ்நாடு சட்டசபை தேர்தலை முன்னிட்டு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுச்சிப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். மேற்கு மண்டலத்தில் இருந்து இந்த பயணம் தொடங்கி உள்ளது. இதில் விரைவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொள்ள உள்ளார் என்று கூறப்படுகிறது.

இந்த பயணம் கிட்டத்தட்ட அதிமுக + பாஜக கூட்டணியை வலுப்படுத்தும் பயணமாக அமைந்துவிட்டது. இரண்டு கட்சிகளும் நெருக்கமாகும் அளவிற்கு பயணத்தில் பல முக்கியமான சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்து வருகின்றன. முன்னதாக பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறுகையில், தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் எனது அருமை நண்பர் எடப்பாடி பழனிசாமி , மக்களை காப்போம் - தமிழகத்தை மீட்போம் என்ற முழக்கத்துடன் தொடங்கிய "புரட்சித்தமிழரின் எழுச்சிப்பயணத்தில்" மேட்டுப்பாளையத்தில் கலந்துகொண்டேன், என்று குறிப்பிட்டார்.
எடப்பாடி - பாஜக நெருக்கம்
இந்த பயணம் காரணமாக எடப்பாடி பழனிசாமி - பாஜக இடையே நெருக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ஒரு வகையில் ஓ பன்னீர்செல்வம் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறவும் காரணமாக அமைந்துவிட்டது. பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக ஓ.பன்னீர்செல்வம் அணி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். தலைமைக் கழக நிர்வாகிகளுடனான கூட்டத்திற்கு பிறகு ஓபிஎஸ் ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி அளித்துள்ளார். தற்போது எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் தமிழ்நாடு வந்தபோது, அவரைச் சந்திக்க ஓ. பன்னீர்செல்வம் அனுமதி கேட்டிருந்தார். ஆனால், பிரதமரைச் சந்திக்க அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, பல வகையான யூகங்கள் கிளம்பின. இப்படிப்பட்ட நிலையில்தான் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக ஓ.பன்னீர்செல்வம் அணி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்..
பாஜக - ஓபிஎஸ் மோதல்
தமிழ்நாடு வந்த பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) அனுமதி கோரிய நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் தரப்பில் கடைசிவரை எந்தப் பதிலும் அளிக்கப்படவில்லை. பிரதமரைச் சந்திக்க இயலாததால் அதிருப்தி அடைந்த ஓபிஎஸ் தரப்பு, பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்தது. இதன் தொடர்ச்சியாக, ஓபிஎஸ் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார். இந்தச் சந்திப்புகள் குறித்து பின்னர் நயினார் நாகேந்திரன் ஊடகங்களிடம் விளக்கமளித்தார்.
இதற்குப் பதிலளித்த ஓபிஎஸ் தரப்பு, நயினார் நாகேந்திரனை ஆறு முறை தொடர்புகொண்டபோதும் அவர் தொலைபேசியை எடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டியது. மோடியைச் சந்திக்க அனுமதி கேட்டு அழைப்பு விடுத்ததாகவும், நயினார் அழைப்பை ஏற்கவில்லை, ஓபிஎஸ் அனுப்பிய குறுஞ்செய்திகளையும் பார்க்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். இந்த முரண்பாடு குறித்து மீண்டும் நயினார் நாகேந்திரனிடம் கேள்வி கேட்கப்பட்டது.
நயினார் நாகேந்திரன், "ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரிடம் பாஜக கூட்டணி குறித்து எந்த முடிவையும் எடுக்க வேண்டாம் எனத் தொலைபேசி வாயிலாகக் கேட்டிருந்தேன். ஆனால், ஓபிஎஸ் பாஜகவிலிருந்து வெளியேறும் முடிவை எடுத்துவிட்டார். எங்களிடம் முன்கூட்டியே தெரிவித்திருந்தால், மோடியைச் சந்திக்க ஏற்பாடு செய்திருப்போம். அவர் விரும்பினால், ஆகஸ்ட் 26 அன்று தமிழகம் வரும் மோடியைச் சந்திக்க ஏற்பாடு செய்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும் "ஓபிஎஸ் அனுப்பிய கடிதம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அந்தக் கடிதம் என்னிடம் வந்து சேரவில்லை. ஒருவேளை கடிதம் வந்து சேர்ந்தால், அதை நான் கண்டிப்பாகக் காட்டுவேன். அப்போது யார் உண்மை சொல்கிறார், யார் பொய் சொல்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். அதேபோல், திடீரென முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்துப் பேசிவிட முடியாது" என்று தெரிவித்தார்.
பாஜக - எடப்பாடி நெருக்கம் - ஓபிஎஸ்ஸை தூக்கி போட முடிவு
எடப்பாடி பழனிச்சாமிக்காக ஓ பன்னீர்செல்வம் உடன் மோதுவதற்கு கூட பாஜக தயாராகிவிட்டது. இன்று இரவு எடப்பாடி பழனிசாமிக்கு விருந்து வைக்கும் நயினார் நாகேந்திரன்.. அதே நாளில் ஓ பன்னீர்செல்வம் உடன் மோதலில் ஈடுபட்டு உள்ளார்.
அந்த அளவிற்கு எடப்பாடி - பாஜக உறவு வலுவாகி உள்ளது. ஏற்கனவே தனது பயணத்தில் எடப்பாடி பழனிச்சாமியும் பாஜகவிற்கு ஏற்ற பல கருத்துக்களை கூறி வருகிறார். மக்கள் கோயில்களின் உண்டியலில் பணம் செலுத்துவது, கோயிலை மேம்படுத்தவே. ஆனால், திமுக அரசு அனைத்து கல்லூரிகளையும் அரசுப் பணத்தில் கட்டாமல், அறநிலையத் துறையின் பணத்தை எடுத்து கல்லூரிகள் கட்டுவது எந்த விதத்தில் நியாயம் என்றும் இது ஒரு சதிச்செயல் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. மக்கள் அப்படித்தான் நினைக்கிறார்கள்.
கல்விக்கு செலவு செய்ய வேண்டாம் என்று கூறவில்லை. ஆனால், அதை அரசுப் பணத்தில் செய்ய வேண்டும். கோயில் பணத்தை கல்விக்காக செலவு செய்வது ஏன் என்றும் கேள்வி எழுப்பப்படுகிறது.
அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் தற்போது பணம் இருப்பது திமுகவினரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்றும், அது அவர்களின் கண்களை உறுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர்களுக்கு கோயில்கள் மீது விருப்பம் இல்லாத காரணத்தால், கோயில் பணத்தை எடுத்து கல்லூரிகள் கட்டப்படுகிறது., என்று எடப்பாடி பழனிசாமி கிட்டத்தட்ட பாஜகவின் குரலில் பேசி உள்ளார்.
எடப்பாடி அமித் ஷா வருகை
இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிச்சாமியின் இந்த பயணத்தில் அமித் ஷா கலந்து கொள்கிறாராம். உள்துறை அமைச்சர் அமித் ஷா அடுத்த மாதம் அல்லது இந்த மாதம் இறுதியில் எடப்பாடி பழனிச்சாமியின் இந்த பயணத்தில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எடப்பாடி பழனிச்சாமி பயணம் கவனம் பெற்றுள்ள நிலையில் கூட்டணிக்கும் இது சாதகமாக மாற தொடங்கி உள்ளது. இந்த நிலையில்தான் எடப்பாடி உடன் இந்த பயணத்தில் அமித் ஷாவும் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications