கணக்கு சரியா வரும்! உறுதியாய் நிற்கும் ’தாமரை’! மீண்டும் சேரும் ‘3’ ர.ர.கள்! கடுப்பான எடப்பாடி!
சென்னை : நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக தற்போது அதிமுகவில் பல்வேறு யூகங்கள் பரவி வரும் நிலையில் அதிமுகவில் 'அந்த' மூன்று பேரை மீண்டும் இணைக்க வேண்டும் என்பதில் தொடங்கி, தொகுதி பங்கீடு வரை பாஜக தற்போதே முடிவு செய்து வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி எப்படியாவது நிரந்தர பொது செயலாளராக பதவி ஏற்று விட வேண்டும் என முட்டி மோதி வருகிறார். அதற்கான 50 சதவீத பணிகள் நிறைவடைந்து விட்டது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகு பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தி வெற்றி பெற தீவிரம் காட்டி வருகிறார் ஆனால் அது அவ்வளவு எளிதாக கைகூட கூடிய காரியம் இல்லை. இதற்காக அவர் இன்னும் பல கட்ட போராட்டங்களையும் சிக்கல்களையும் எதிர்கொள்ள வேண்டும்.

அதிமுக மோதல்
எடப்பாடி நடத்திய பொதுக்குழுவே செல்லாது என ஓ.பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்து இருக்கும் நிலையில் அதன் தீர்ப்பை பொறுத்து அடுத்த கட்ட நிகழ்வுகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தீர்ப்பு வர இன்னும் குறைந்த கால இடைவெளி இருக்கும் நிலையில் பாஜக வடிவில் எடப்பாடிக்கு புது சிக்கல் முளைத்திருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வந்து சென்ற பிறகு பாஜக நிர்வாகிகளின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. பல பாஜக தலைவர்கள் தேர்தல், கூட்டணி, ஓபிஎஸ், சசிகலா குறித்து பேசி வருகின்றனர்.

பாஜக திட்டம்
அது போல அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற டிடிவி தினகரன், விலக்கி வைக்கப்பட்டுள்ள ஓ,பன்னீர்செல்வம் ஆகியோர் மீண்டும் அதிமுகவில் இணைவது குறித்து அதிரடி கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். நேரடியாக அதிமுகவில் இணையாவிட்டாலும் கூட்டணியில் இணைய டிடிவி தினகரன் சம்மதம் தெரிவித்து இருக்கிறார். இது மிகப்பெரிய நகர்வாக பார்க்கப்படுகிறது. இதனால் பாஜக தரப்பும், ஓபிஎஸ் தரப்பும் வெகுவாக உற்சாகத்தில் ஆழ்ந்திருக்கிறது. இதன் மூலம் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றி கிட்டும் என்பதும் அவர்கள் நம்பிக்கையாக இருக்கிறது.

வலுவான கூட்டணி
டெல்டா மாவட்டங்களில் சசிகலா டிடிவி தினகரனுக்கு இருக்கும் ஆதரவு, தென் மாவட்டங்களில் ஓபிஎஸ்க்கு இருக்கும் ஆதரவு, கொங்கு மண்டலத்தில் இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு, வடமாவட்டங்களில் இருக்கும் பாமக ஆதரவு ஆகியவற்றை வைத்து வலுவான கூட்டணி மூலம் தமிழகத்தில் குறிப்பிடத் தகுந்த வெற்றியை பெற முடியும் என பாஜக விரும்புகிறது. ஆனால் இதனால் தனக்கான முக்கியத்துவம் வெகுவாகக் குறையும் என்பதால் அதற்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆதரவு இல்லாமல் மெகா கூட்டணியை அமைத்து எம்ஜிஆர் ஜெயலலிதாவுக்கு பிறகு அதிமுகவின் முகமாக வரவேண்டும் என அவர் நினைக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி
ஆனால் பாஜக தலைமை அதனை விரும்பவில்லை சட்டமன்றத் தேர்தலில் இருந்தது போல கூட்டணி அமைக்கும் போது கூடவே டிடிவி தினகரன் வந்தால் பெரு வெற்றி பெறலாம் என பாஜக தலைமை விரும்புகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் நிறைய கால இடைவெளி இருந்தாலும் தற்போது தேர்தல் வேலைகளை ஆரம்பிக்க வேண்டும் எனவும் இதற்காக தொகுதி பங்கீடு பட்டியலும் தயாராக இருக்கிறது .அந்த வகையில் 13 தொகுதிகளை பாஜக தலைமை தேர்ந்தெடுத்து அதில் பத்தில் போட்டியிட முடிவு செய்திருக்கிறது. அதே நேரத்தில் இதற்கெல்லாம் பிடி கொடுக்காமல் எடப்பாடி பழனிச்சாமி பேசி வருகிறார்.

சலசலப்பு
டிடிவி தினகரன் கூட்டணியில் சேர்க்க முடியாது, சசிகலா ஓ.பன்னீர் செல்வத்தை அதிமுகவில் இணைக்க முடியாது என உறுதியாக இருக்கிறார். இதனால் பாஜக தலைமை அதிருப்தியில் இருக்கும் நிலையில் அடுத்து என்ன நடக்கும் என்பதை எதிர்பார்ப்பாக இருக்கிறது. கூடுதல் தகவலாக பாஜகவை கூட்டணியில் இருந்தே விலகும் முடிவில் அவர் இருக்கிறார் எனவும், திமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகளோடு கூட்டணி அமைக்கலாம் என சிலர் கூறி வருகின்றனர். இதனால் அதிமுகவில் மட்டுமல்லாது, அதிமுக கூட்டணியிலும் சலசலப்பு உருவாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications