கடைசி நேரத்தில் காலை வாரிட்டாங்க! எம்பி கனவில் மிதந்த பாஜக தலைகள்! செக் வைத்த எடப்பாடி! ஒரே புலம்பல்
சென்னை : அதிமுகவோடு கூட்டணி சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலில் எம்பி ஆகி விடலாம் என நினைத்திருந்த டெல்டா மாவட்டம் மற்றும் கடலோர மாவட்ட பாஜக தலைவர்கள் தற்போது சைலன்ட் மோடுக்கு சென்றுள்ளனர். அதிமுக கூட்டணியில் சவாரி செய்து எம்பி கனவில் இருந்தவர்கள் எடப்பாடி பழனிச்சாமியின் பேச்சுகளால் தற்போது புலம்பித் தள்ளி வருகிறார்களாம்.
எடப்பாடி பழனிச்சாமி திடீரென இப்படி செய்வார் என அவர் தரப்பு முன்னாள் அமைச்சர்களே எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். தொடர்ந்து தன்னை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது போல உணர்ந்ததால் பாஜக தலைமை மீது எதிர்ப்பை காட்டத் தொடங்கி இருக்கிறார்.
பல விவகாரங்களின் போது பாஜக தலைமைக்கு கட்டுப்பட்டு செயல்பட்டு வந்த ஓ.பன்னீர்செல்வத்தின் மீது சாஃப்ட் கார்னர் வைத்திருக்கிறது பாஜக. இதனால் அவரை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.

எடப்பாடி பழனிச்சாமி
ஆனால் எடப்பாடி பழனிச்சாமியோ வேறு விஷயங்கள் இருந்தால் பேசுங்கள் என்ற ரீதியில் இருக்கிறார். குறிப்பாக பிரதமர் அமித் ஷாவை வரும்போதெல்லாம் பார்க்க வேண்டுமா என அவர் பேசியது பாஜக தலைவர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. எடப்பாடி இப்படி பேசுவார் என அவர்கள் எதிர்பார்க்கவில்லை. நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான கூட்டணி பேச்சுகள் தற்போதே ஆரம்பித்திருக்கும் நிலையில் பாஜகவில் இருந்து விலகி இருக்கவே எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக விரும்புகிறது. அதனை தொண்டர்களும் முன்னாள் அமைச்சர்களும் தங்கள் பேச்சுக்களின் வழியாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

எம்பி கனவு
இந்த நிலையில் பாஜக தலைமையை விட எம்பி கனவில் மிதந்த பல முக்கிய பாஜக தலைவர்கள் தற்போது அதிர்ச்சியில் இருக்கின்றனர். அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தால் ஓரளவு வெற்றி வாய்ப்பு இருக்கும் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பாஜக தலைவர்களில் சிலர் எம்பி தேர்தலில் போட்டியிட திட்டமிட்டிருந்தனர். இதற்காக 13 தொகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அதில் 10 தொகுதிகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் எட்டு தொகுதிகளில் நேரடியாகவே பாஜக போட்டியிடும் எனக் கூறப்பட்டது. குறிப்பாக கன்னியாகுமரி, கோவை, வேலூர், தஞ்சை உள்ளிட்ட சில டெல்டா மாவட்ட பாஜக தலைவர்கள் தீவிரம் காட்டி வந்தனர்.

கடும் மன உளைச்சல்
பாஜக ஆர்ப்பாட்டங்கள் பொதுக்கூட்டங்களை பிரமாண்டமாக நடத்துவது, கட்சித் தலைவர்கள் வரும்போதெல்லாம் பிரம்மாண்ட வரவேற்பளிப்பது என மாஸ் காட்டி வந்தனர். இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் பேச்சுகளால் அவர்களும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். அந்தப் பட்டியலில் அதிரடி பேச்சுகளுக்கு சொந்தக்காரரான முன்னாள் நிர்வாகி ஒருவரும், ஏற்கனவே மத்திய அமைச்சராக இருந்த நிர்வாகி ஒருவரும் டெல்டா மாவட்டத்தை சேர்ந்த இரு நிர்வாகிகளும் கடும் மன உளைச்சலில் இருக்கின்றனர். இதுகுறித்து வெளிப்படையாகவே புலம்பி வருகின்றனர்.

வெற்றி பெற முடியாது
பாஜக தனித்துப் போட்டியிட்டால் எப்படியும் வெற்றி பெற முடியாது. மேலும் பாஜக இல்லாமல் அதிமுக போட்டியிடும் போது வெகுவாக அவர்களுக்கு ஆதரவு கிடைக்கும். குறிப்பாக சிறுபான்மை மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் வாக்குகள் ஓரளவு கிடைக்கும் என்பதால் திமுக - அதிமுக நேரடி போட்டியாக இருக்கும். இதில் பாஜக நான்காவது ஐந்தாவது இடத்திற்கு தள்ளி விடப்படும் என்பதை உணர்ந்துள்ளனர். மூன்று ஆண்டுகளாக எம்பி கனவில் இருந்தவர்கள் கடைசி நேரத்தில் இப்படி மாறிவிட்டதால் தங்களது ஆதரவாளர்களிடம் புலம்பி தள்ளி வருகின்றனர்.

அமைதியோ அமைதி
குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பாஜக தலைவர்கள் கடும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து சீட்டு வாங்கலாம் என நினைத்திருந்த நிர்வாகி ஒருவர் அதற்காக கடந்த சில மாத இடைவெளியில் பெரிய அளவில் செலவு செய்திருக்கிறார். தற்போது பாஜக மேலிடம் சசிகலா, ஓ.பன்னீர்செல்வத்துடன் கூட்டு சேர தயாராகி வருவதால் அவர்கள் தத்தளித்து வருகின்றனர். இதே நிலைமை தான் பல மாவட்டங்களில் இருக்கிறது. இத்தனை நாட்களாய் எம்பி சீட் கேட்டு போராடி வந்தவர்கள் கூட அமைதியாய் இருக்கிறார்கள் என்கின்றனர் பாஜக நிர்வாகிகள்.












Click it and Unblock the Notifications