பாஜக லேபிளை உடைத்த அண்ணாமலை.. ஆட்டத்தையும் கலைத்த "சாமானியன்" அரசியல்.. இது பிளான் B-யா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜக கூடாரத்தில் இருந்து வெளியேறி "சாமானியன்" முகமூடியோடு புதிய அரசியல் பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கும் அண்ணாமலையின் இந்த அதிரடி முடிவு, தமிழக அரசியல் களத்தில் ஒரு புதிய புயலை கிளப்பியுள்ளது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், அண்ணாமலையின் தனி பயணம், பாஜகவுக்கு லாபமா? நஷ்டமா? உள்ளாட்சி தேர்தலுக்குள் சொந்த கட்சியை பலப்படுத்தி விடுவாரா அண்ணாமலை? பிம்ப அரசியலுக்கு முடிவு கட்டுவாரா? என்றெல்லாம் சந்தேகங்களும், ஆர்வமும் தமிழக அரசியல் களத்தில் கிளம்பி உள்ளன.

தேசியக் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்து, தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் அறியப்பட்ட ஒரு முகம், இன்று திடீரென அந்தப் பாதையை உதறிவிட்டுத் தன் சொந்தக் காலில் நிற்கத் துணிந்திருப்பது சாதாரண விஷயமல்ல.

Annamalai News BJP News Tamil Nadu Politics Annamalai BJP Political Strategy Delhi Politics

பாஜக லேபிள்

டெல்லி தலைமையுடனான 18 மாத கால விரிசல், கடந்த சட்டமன்றத் தேர்தல் கூட்டணி முடிவுகளில் ஏற்பட்ட அதிருப்தி, மற்றும் தன்னை ஓரம் கட்டிய பழைய அரசியல் கணக்குகள் என அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அண்ணாமலையின் இந்த விலகல் அமைந்திருக்கிறது.

மோடியின் படைவீரன் என்ற அடையாளத்திலிருந்து விடுபட்டு, "நல்ல அரசியலைத் தேடும் சாமானியன்" என்று எக்ஸ் தளத்தில் அவர் மாற்றியிருக்கும் ஒற்றை வரி, அவர் இனி திராவிடக் கட்சிகளுக்கு மட்டுமின்றி, தேசியக் கட்சிகளுக்கும் ஒரு கடுமையான சவாலாக உருவெடுக்கப் போகிறார் என்பதையே காட்டுகிறது.

பிம்ப அரசியலுக்கு முடிவு கட்டுவாரா அண்ணாமலை?

தமிழக அரசியல் வரலாறு எப்போதுமே ஒரு தனிநபர் பிம்பத்தைச் சுற்றியே சுழன்று கொண்டிருக்கிறது. எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா என்ற பிம்ப வழிபாட்டு அரசியலில் இருந்து இன்னும் இந்த மண் முழுமையாக விடுபடவில்லை. அண்ணாமலை பேசும் "நிரந்தர எம்.பி, நிரந்தர எம்.எல்.ஏ நிலையை உடைப்போம்" என்ற முழக்கம் கேட்பதற்கு மிகக் கவர்ச்சியாகவும், இளைஞர்களை ஈர்க்கக் கூடியதாகவும் இருக்கிறது.

ஆனால், எதார்த்த அரசியல் என்பது வெறும் சித்தாந்தங்களால் மட்டும் நகர்வது கிடையாது. அவரே குறிப்பிட்டது போல, ஆரம்ப காலங்களில் நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்க முயன்றபோது தன்னிடம் பேசியதை இப்போது வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார்.

ரஜினிகாந்த் போன்ற ஒரு மிகப்பெரிய மக்கள் பிம்பமே எதார்த்த அரசியல் சூழலைக் கண்டு தயங்கி பின்வாங்கிய வரலாறு நமக்குத் தெரியும். எனவே, அண்ணாமலை இந்த பிம்ப அரசியலை உடைக்க நினைப்பது பாராட்டுக்குரியது என்றாலும், அதை அடிமட்டக் கட்டமைப்பு இல்லாமல் வெறும் சமூக ஊடகப் பரப்புரைகள் மூலம் மட்டுமே சாதித்துவிட முடியுமா தெரியவில்லை.

உள்ளாட்சித் தேர்தலுக்குள் தயார்?

அண்ணாமலையின் இயக்கம் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே 1 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்திருப்பதாகவும், ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடுவதாகவும் வரும் செய்திகள், அவருக்கு இருக்கும் ஆரம்பக்கட்ட எழுச்சியைக் காட்டுகின்றன.

ஆனால், அடுத்தடுத்து வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் என்பது முற்றிலும் வேறுபட்ட ஒரு போர்க்களம். உள்ளாட்சித் தேர்தல் என்பது மாநில அளவிலான தலைவர்களைப் பார்த்து மக்கள் வாக்களிக்கும் களம் அல்ல; அது வார்டு வார்டாக, கிராமம் கிராமமாக இருக்கும் உள்ளூர் முகங்களையும், அவர்களின் செல்வாக்கையும் பொறுத்தது.

அண்ணாமலைக்கு உள்ள சிக்கல்கள்

பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலையோடு வரும் நிர்வாகிகளை மட்டுமே நம்பி ஒட்டுமொத்த தமிழக உள்ளாட்சித் தேர்தலையும் எதிர்கொள்வது மிகக் கடினமான காரியம்.

குறுகிய காலத்திற்குள் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பூத் கமிட்டிகளையும், வலுவான உள்ளூர் கட்டமைப்பையும் உருவாக்குவது அண்ணாமலைக்கு இருக்கும் மிகப்பெரிய சவாலாகும். இதனால், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் என்பது அவருக்கு ஒரு முழுமையான வெற்றியைத் தராவிட்டாலும், அவரது புதிய கட்சியின் உண்மையான பலம் என்ன என்பதைப் பரிசோதித்துப் பார்க்கும் ஒரு முக்கியமான பரீட்சைக் களமாக நிச்சயம் இருக்கும்.

பாஜகவுக்கு லாபமா? நஷ்டமா?

தமிழகத்தில் பாஜகவுக்கென்று ஒரு பிரம்மாண்டமான இளைஞர் பட்டாளத்தையும், தீவிரமான ஆதரவாளர் வட்டத்தையும் மிகக் குறுகிய காலத்தில் உருவாக்கியவர் அண்ணாமலை என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இதை டெல்லி மேலிடமும் நன்றாகவே உணர்ந்திருந்தது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் அண்ணாமலை முற்றிலும் பா.ஜ.க-வை விட்டு வெளியேறியிருப்பது, கடந்த சில ஆண்டுகளாகத் தமிழகத்தில் பாஜக பெற்ற ஒட்டுமொத்த வளர்ச்சியையும் பல ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிவிடும் என்ற அச்சத்தை தேசியத் தலைமைக்கு ஏற்படுத்தியுள்ளது.

அண்ணாமலையைத் தக்கவைக்க, தேசிய அளவில் ஒரு மிக முக்கிய, அதிகாரமிக்கப் பொறுப்பை வழங்க அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் முயன்றதாகக் கூறப்பட்டாலும், அண்ணாமலை தன் தனிப்பாதையிலேயே உறுதியாக நின்றுவிட்டார். அவர் விலகித் தனிப்பாதை அமைத்திருப்பதால், தமிழகத்தில் பா.ஜ.க-வின் வாக்கு வங்கி பெருமளவில் சரியக்கூடும் என்பதால் இது பாஜகவுக்கு நஷ்டத்தையே ஏற்படுத்தும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

அண்ணாமலைக்கு பாதை சரியா?

அண்ணாமலைக்கு இந்தத் தனிப்பாதை ஒரு மிகப்பெரிய ரிஸ்க் & சவால் நிறைந்த ஒன்றுதான். பாஜக போன்ற ஒரு தேசியக் கட்சியின் பின்னணி, நிதி பலம் மற்றும் டெல்லி மேலிடத்தின் ஆதரவு இல்லாமல், திராவிடக் கட்சிகளும், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் களத்தில் இருக்கும்போது, புதிய கட்சியைத் தொடங்கி நடத்துவது சாதாரண விஷயமல்ல.

ஆனாலும், தமிழகத்தில் பாஜக என்ற லேபிளோடு பயணிப்பதை விட, ஒரு தனித்துவமான "தமிழ்நாட்டுத் தலைவராக" தன்னை முன்னிறுத்திக்கொள்ள அண்ணாமலை விரும்புகிறார். அரசியல் என்பது ஒரு நீண்ட தூர ஓட்டப்பந்தயம்.

இதில் சண்டை போடுவது நோக்கமல்ல, மாற்றம் ஒன்றே இலக்கு என்று அண்ணாமலை கூறியிருப்பது ஒரு முதிர்ச்சியான அரசியல் நகர்வு. என்றாலும் தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழலில், அண்ணாமலையின் இந்த "சாமானியன் அரசியல்" எந்த அளவுக்குத் தேர்தல் வெற்றியாக மாறும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்...!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+