இப்படி செய்ய எங்கிருந்து வந்தது திமிர்? அமைச்சர் மகனை உடனே கைது பண்ணுங்க.. பாஜக நாராயணன் ஆவேசம்!
சென்னை : தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசரின் மகன் ஆசிம்ராஜா உள்ளிட்ட திமுகவினரை உடனே கைது செய்ய வேண்டும் என பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்த குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் மோடியின் படங்களை அமைச்சர் நாசரின் மகன் உள்ளிட்டோர் அகற்றியதாக பாஜக நாராயணன் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், அவர்கள் மீது போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார் நாராயணன் திருப்பதி.

ஆசிம் ராஜா
தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி எஸ்.எம். நாசரின் மகன் ஆசிம் ராஜா திருவள்ளூர் மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட திமுக ஆவடி மாநகரச் செயலாளராக உள்ளார். ஆசிம் ராஜா, ஆவடி மாநகராட்சி கவுன்சிலராகவும் பொறுப்பு வகிக்கிறார். இவர் மீது தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

பிரதமர் படம் அகற்றம்
இதுதொடர்பாக நாராயணன் திருப்பதி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்த குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் மோடியின் படங்களை திமுகவை சேர்ந்த கும்பல் ஒன்று அமைச்சர் நாசர் மகன் தலைமையில் சென்று அகற்றியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

நடவடிக்கை இல்லை
இதுகுறித்து பாஜக திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் அஸ்வின் காவல்துறையில் புகார் அளித்தும் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படாதது வன்மையாக கண்டிக்கத்தக்கது. சார்பதிவாளர் அலுவலகத்தில் இதுகுறித்து விசாரித்த போது திமுக குண்டர்களால் அந்த அலுவலக பணியாளர்கள் மிரட்டப்படுவதாக சொல்லப்படுகிறது.

ஆணவம் - திமிர்
பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் படங்களை அகற்றும் அகம்பாவம், ஆணவம், திமிர் எங்கிருந்து வந்தது? இந்த குண்டர்களை தமிழக காவல்துறை உடனே கைது செய்ய மு.க.ஸ்டாலின் உத்தரவிட வேண்டும்" என்று வலியுறுத்தி உள்ளார் நாராயணன் திருப்பதி. இது திருவள்ளூர் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications