2019 டூ 2024.. அதே ”29 தொகுதிகள்”.. எந்த மாற்றமும் இல்லையே.. தெற்கில் பாஜக வளர்ந்திருக்கிறதா?
சென்னை : 2019 லோக் சபா தேர்தலில் தென்னிந்தியாவில் பாஜக வென்ற 29 தொகுதிகளை தான் மீண்டும் 2024 லோக் சபா தேர்தலிலும் கைப்பற்றியுள்ளது தெரிய வந்துள்ளது.
2024 லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்துள்ள நிலையில் எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக கூட்டணியாக 292 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி 242 தொகுதிகளிலும் வென்றுள்ளன. இதன் காரணமாக தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளது.

வழக்கமாக வட இந்தியாவில் அதிக இடங்களை கைப்பற்றும் பாஜகவுக்கு இம்முறை மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் அதிர்ச்சி கொடுத்துள்ளன. தேர்தலுக்கு முன்பாக சில இடங்களை பறி கொடுக்க வேண்டியது இருக்கும் என்று கணித்திருந்த பாஜகவினர், தெற்கில் எங்களின் வெற்றியை அதிகரிப்போம் என்று கூறி வந்தனர்.
பாஜக கூறியதை போலவே ஆந்திர பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் குறிப்பிடத்தகுந்த வெற்றியை பெற்றுள்ளது. கர்நாடகாவில் கடந்த லோக்சபா தேர்தல் 25 தொகுதிகளை கைப்பற்றியிருந்த நிலையில், இந்த லோக்சபா தேர்தலில் 17 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியுள்ளது. அதேபோல் 2019ல் தெலங்கானாவில் 4 தொகுதிகளை பாஜக கைப்பற்றியிருந்தது.
இம்முறை 8 தொகுதிகளை பாஜக வென்று எழுச்சி பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஆந்திர பிரதேசத்தில் பாஜக கடந்த முறை ஒரு தொகுதியில் கூட வெல்லாத நிலையில், இம்முறை தெலுங்கு தேசம் கட்சியின் அபார எழுச்சியால் 3 தொகுதிகளில் வென்றுள்ளது. அதேபோல் முதல்முறையாக கேரளாவில் ஒரு தொகுதியில் பாஜக வென்றுள்ளது.
2019 லோக்சபா தேர்தலில் தென் மாநிலங்களில் இருந்து பாஜக 29 தொகுதிகளில் கைப்பற்றிய நிலையில், 2024 லோக்சபா தேர்தலிலும் 29 தொகுதிகளையே கைப்பற்றி இருக்கிறது. கர்நாடகாவில் நேர்ந்த இழப்பை தெலங்கானா மற்றும் ஆந்திராவில் சமன் செய்துள்ளது. ஆனால் பாஜகவின் வளர்ச்சி என்பது வாக்கு சதவிகிதத்தில் உயர்ந்துள்ளது. கேரளாவில் 16 சதவிகிதம் வாக்குகளும், தமிழ்நாட்டில் 11 சதவிகித வாக்குகளும் பெற்றுள்ளதே பாஜகவின் வளர்ச்சியாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications