தினமும் ஒரு குரூப் வருது.. சி.வி.சண்முகமா ஜெயக்குமாரானு சண்டை.. ரவுண்டு கட்டிய அமைச்சர் பொன்முடி!
சென்னை : அதிமுகவில் 3 அல்லது 4 குரூப்புகள் இருக்கின்றன. தினம் ஒரு அணி வந்து கொண்டிருக்கிறது. ஈபிஎஸ்ஸா ஓபிஎஸ்ஸா என்பது மட்டுமல்லாமல் சிவி சண்முகமா அல்லது ஜெயக்குமாரா என்று பேசி வருகின்றனர் என அமைச்சர் பொன்முடி விமர்சித்துள்ளார். மேலும், பாஜகவின் கீழ் அதிமுக செல்வதா அல்லது அதிமுகவின் கீழ் பாஜக செல்வதா என்று அவர்களுக்குள் சண்டையிட்டு வருகிறார்கள் என்றும் அமைச்சர் பொன்முடி விமர்சித்துள்ளார்.
மேலும், மத வெறியைத் தூண்டிவிட்டு அதில் நீச்சல் அடிக்கலாம் என்று நினைப்பவர்கள் பாஜகவினர் என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி விமர்சித்துள்ளார்.
பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் மற்றும் 2000 ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஓஎம்ஆர் சாலை மேட்டுக்குப்பத்தில் நடைபெற்றது.
இதில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

வரலாற்றைத் திரிக்கும் பாஜக
இந்தப் பொதுக்கூட்டத்தில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, "பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் வரலாற்றைத் திரித்து மாற்றிச் சொல்லி வருகிறார்கள். தமிழகத்தை அவர்கள் மாற்றி அமைக்கிறார்கள். அங்கே சென்றால் இந்தி என்று சொல்கிறார்கள். இங்கே வந்தால் தமிழ் என்று சொல்லி வருகிறார்கள். பாஜகவிற்கு தமிழைப் பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை. மதவெறியை தூண்டிவிட்டு அதில் நீச்சல் அடிக்கலாம் என்று நினைப்பவர்கள் பாஜகவினர்." என கடுமையாக விமர்சித்தார்.

தமிழ் வழிக்கல்வி
மேலும் பேசிய அவர், "பெண்கள் படிக்க முடியாமல் இருந்த காலம் உண்டு. ஆனால் இன்றைக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், பெண் கல்வி உயர வேண்டும் என்று பல்வேறு திட்டங்களை கொடுத்து படிக்க வைத்துக்கொண்டு இருக்கிறார். ஒரு காலத்தில் தமிழ் கல்லூரிகளில் இல்லை. நான் படிக்கும்போது ஆங்கிலம் மட்டுமே இருந்தது. கல்லூரிகளிலும் தமிழ்வழிக் கல்வி கிடையாது. அந்த கல்லூரிகளிலும் தமிழ்வழிக் கல்வியை கொண்டு வந்தது திமுக தான்.

அப்போதே கொண்டுவந்து விட்டோம்
பொறியியல் கல்லூரிகளில் தமிழ்வழிக் கல்வியை கொண்டு வரப் போகிறோம் என்று வாட்ச் புகழ் பாஜகவினர் பேசுகின்றனர். நான் கடந்த முறை 2006 திமுக ஆட்சி காலத்தில் உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்தபோதே பொறியியல் கல்லூரிகளில் தமிழ்வழிக் கல்வியை கொண்டு வந்து விட்டோம். பொறியியல் கல்லூரிகளில் தமிழ் பொழிப்பாடம் கிடையாது. இந்த வருடம் முதல் செமஸ்டரில் தமிழர் பண்பாடு, இரண்டாம் செமஸ்டரில் தமிழர் மற்றும் தொழில் நுட்பம் என 2 பாடங்களை கொண்டு வந்துள்ளோம்.

திணிக்க முயற்சி
தாய்மொழி தமிழ் என்பது நமக்கு கட்டாயம். தமிழ் மற்றும் ஆங்கிலம் படித்தால் போதும் என்று இருமொழிக் கொள்கையை கொண்டு வந்தவர் பேரறிஞர் அண்ணா. தாய்மொழியில் படிக்க வேண்டும், வெளிநாட்டில் உள்ளவர்களிடத்தில் பழகுவதற்கு ஆங்கிலம் வேண்டும். இந்த 2 மொழிகள் இருந்தால் போதும். கல்லூரிகளில் உள்ள மாணவர்களிடம் கேட்டால் இருமொழிக் கொள்கையே போதும் என்று சொல்வார்கள். ஆனால் பாஜக நம்முடைய மாநிலத்தில் புதிய கல்விக் கொள்கை என்று சொல்லி மொழியைத் திணிக்க முயற்சி செய்து வருகின்றனர். புதிய கல்விக் கொள்கை மூலம் 3, 5, 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வு என்று சொல்லி வருகின்றனர். கல்விக் கொள்கையில் ஒரு பித்தலாட்டதை செய்து வருகின்றனர் பாஜகவினர்." எனத் தெரிவித்தார்.

அதிமுகவில் 4 குரூப்
மேலும் பேசிய அமைச்சர் பொன்முடி, "இன்றைக்கு அதிமுகவில் 3 அல்லது 4 அணிகளாக உள்ளனர். தினம் ஒரு குரூப் வந்து கொண்டிருக்கிறது. சி.வி.சண்முகம் மேடை ஒன்றில் பேசும்போது உதயநிதி என் கால் தூசிக்கு சமம் என்று பேசினார். என்னை பேசியிருந்தால் கூட பரவாயில்லை ஒரே மாவட்டத்தை சார்ந்தவர் என்று விட்டு இருப்பேன். ஆனால் உதயநிதியை பற்றி பேசும்போது கடும் கோபம் வந்தது. அதை சொல்வதற்கு சி.வி.சண்முகத்துக்கு என்ன தகுதி இருக்கிறது?

பெரிய சண்டை
விழுப்புரம் மாவட்டத்தில் சி.வி.சண்முகத்தின் அலுவலகத்தில் உள்ள பேனரில் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படத்தை கிழித்துள்ளனர். இன்றைக்கு டிவியை பார்த்தால் ஈபிஎஸ் அல்லது ஓபிஎஸ்ஸா அல்லது சிவிஎஸ் அல்லது ஜெயக்குமாரா என்று பேசி வருகின்றனர். ஜெயக்குமார் ஒரு பெரிய அறிவாளி போல் பேசி வருகிறார். யார் தலைமையில் யார் வருவது என்று அவர்களுக்குள்ளேயே பிரச்சனை நிலவி வருகிறது. பாஜகவின் கீழ் இவர்கள் செல்வதா அல்லது இவர்களின் கீழ் பாஜக செல்வதா என்று தற்போது அவர்களுக்குள் சண்டையிட்டு வருகிறார்கள்" என விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications