குடியரசுத் தலைவர் தேர்தல்.. சென்னை வரும் திரெளபதி முர்மு.. யாருடன் சந்திப்பு?
சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலில் பல்வேறு கட்சித் தலைவர்களின் ஆதரவை பெறுவதற்காக பாஜக கூட்டணி வேட்பாளர் திரெளபதி முர்மு, ஜூலை முதல் வாரத்தில் சென்னைக்கு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் நிறைவடைகிறது. இதனால் வரும் ஜூலை 18 ஆம் தேதி குடியரசுத் தலைவருக்கான தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனைத்தொடர்ந்து கடந்த 15ம் தேதி முதல் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் தொடங்கிய நிலையில், பாஜக மற்றும் எதிர்க்கட்சிகள் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக இறங்கினர்.

வேட்பாளர்கள் தேர்வு
குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட எதிர்க்கட்சிகள் சார்பில் பொதுவான வேட்பாளரை நிறுத்த ஆலோசிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து சரத் பவார், ஃபரூக் அப்துல்லா மற்றும் கோபாலகிருஷ்ண காந்தி உள்ளிட்டோருடன் எதிர்க்கட்சிகள் குழு பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், அவைவரும் தேர்தலில் போட்டியிட மறுப்பு தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து பாஜக கூட்டணியின் வேட்பாளராக ஒடிசா மாநிலத்தின் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த திரெளபதி முர்மு அறிவிக்கப்பட்டார்.
Recommended Video

பாஜகவுக்கு எவ்வளவு வாக்குகள்?
நாட்டின் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றம் என அனைத்து எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்களின் வாக்குகளில் 48.9 சதவீத வாக்குகளை பாஜக கூட்டணி பெற்றுள்ளது. எதிர்க்கட்சிகள் மற்றும் பிற கட்சிகள் 51.1 சதவீதம் பெற்றுள்ளன. அதாவது மொத்த வாக்குகளின் மதிப்பான 10,86,431ல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள மக்கள் பிரதிநிதிகளின் வாக்கு மதிப்பு 5,25,706 ஆகும். குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற 50க்கும் அதிகமான சதவிகித வாக்குகளைப் பெற வேண்டும். பா.ஜ.க கூட்டணி பெரும்பான்மை பலத்தோடு வெற்றி பெறுவதற்கு 20,000 வாக்குகள் குறைவாக உள்ளது. பாஜக நிறுத்தும் வேட்பாளரை குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்க அக்கட்சிக்கு மற்ற கட்சிகள் சிலவற்றின் ஆதரவு தேவைப்படும்.

வேட்பு மனுத்தாக்கல்
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி வெளிநாடு பயணம் மேற்கொள்வதால், குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் திரெபதி முர்மு இன்று வேட்புமனுத்தாக்கல் செய்யவுள்ளார். இதனால் வேட்பு மனுத்தாக்கலின் போது பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பாஜக முக்கியத் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது.

சென்னை வருகை
இதனைத்தொடர்ந்து பாஜக வேட்பாளர் திரெளபதி முர்மு, கூட்டணி கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்க முடிவு செய்துள்ளார். அதில், ஜூலை வாரத்தில் சென்னை வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை வரும் திரெளபதி முர்மு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோரை சந்திப்பார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே பாமக சார்பாக திரெளபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications