“சுந்தர் பிச்சை.. சீக்கிரம் ரெஸ்யூமை அப்டேட் பண்ணுங்க”.. அமைச்சர் பேசிய வீடியோ.. அண்ணாமலை கிண்டல்!
சென்னை: அமைச்சர் ராஜகண்ணப்பன், கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை பற்றி பேசிய வீடியோவை பகிர்ந்து கிண்டல் செய்துள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. இவர்தான் ஒருகாலத்தில் உயர்கல்வித்துறை அமைச்சராகவும் இருந்தார் என விமர்சித்துள்ளார் அண்ணாமலை.
மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை, தமிழ்நாட்டில் பரவலான எதிர்ப்புகளைச் சந்தித்து வருகிறது. திமுக, மும்மொழிக் கொள்கைக்கு எதிராக தொடர்ந்து களமாடி வருகிறது. மும்மொழிக் கொள்கை தொடர்பாக திமுக - பாஜக இடையே தொடர்ந்து கருத்து மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன.

திமுக சார்பில் இந்தி திணிப்பை கண்டித்து பல்வேறு மாவட்டங்களிலும் பொதுக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டார். அப்போது அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசுகையில், "தமிழ்நாட்டில் யாரை இந்தி படிக்க வேண்டாம் என்று சொன்னார்கள். தாராளமாக படியுங்கள்.
ஏன் தமிழும், ஆங்கிலமும் படித்துவிட்டு யாரும் வேலை பார்க்கவில்லையா என்ன? இருமொழிக் கொள்கையில் படித்த தமிழர்கள் தான் உலகம் முழுக்க கோலோச்சி வருகிறார்கள். சுந்தர் பிச்சை யாரு..? பெரிய சிஇஓ-வாக இருக்கான்.. Chief Educational officer.. அவன் ஆங்கிலம்தான் படித்துள்ளான். நமக்கு தொடர்பு மொழி ஆங்கிலமே போதும்." எனக் கூறி இருந்தார்.

இந்நிலையில் தான், அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசிய இந்த வீடியோவை பகிர்ந்து, அவரை கிண்டலாக விமர்சித்துள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.
அண்ணாமலை தமது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "திமுக அமைச்சர் ராஜ கண்ணப்பன் கருத்துப்படி, சி.இ.ஓ என்பவர் தலைமை கல்வி அதிகாரி. சுந்தர் பிச்சை.. உங்கள் பயோ டேட்டாவை அப்டேட் பண்ணுங்க.. இதுவே லேட் தான்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "இதில் உச்ச வினோதம் என்னவென்றால், இந்த திமுக அமைச்சர் ஒரு காலத்தில் உயர்கல்வி அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார்" என அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications