பிரிவினைவாத அரசியல்.. நடிகை கஸ்தூரியின் சர்ச்சை பேச்சு.. சட்ட நடவடிக்கை எடுக்க பாஜக வலியுறுத்தல்
சென்னை: நடிகை கஸ்தூரியின் சர்ச்சை பேச்சை கண்டித்து பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ் பிரசாத் அறிக்கை வெளியிட்டுள்ளார். பிரிவினைவாத அரசியலை கையிலெடுத்து தமிழ் மக்களுக்கு இடையிலான ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையிலும், தெலுங்கு தமிழர்களின் மனதை புண்படுத்தும் வகையிலும் கருத்துக்களை தெரிவிப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
சென்னையில் நேற்று முன்தினம் இந்துமக்கள் கட்சி நடத்திய பிராமணர்களுக்கான ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறும் போது, "300 வருடங்களுக்கு முன்பு ஒரு ராஜாவுக்கு, அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்தவர்களை, தெலுங்கு பேசியவர்களை எல்லாம் தமிழர்கள் இனம் என்று சொல்லும்போது, எப்போதோ வந்த பிராமணர்களை தமிழர்கள் இல்லை என்று சொல்வதற்கு இங்கு யார் இருக்கிறார்கள்? அதனால்தான் இங்கு தமிழர்கள் முன்னேற்ற கழகம் என்று வைக்க முடியவில்லை" என்று குறிப்பிட்டார். கஸ்தூரியின் இந்த கருத்து பெரிய சர்ச்சையானது. பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் தாம் பேசிய கருத்து ஊடகங்களில் திரித்து கூறப்பட்டுள்ளதாக நடிகை கஸ்தூரி விளக்கம் அளித்தார். இதுதொடர்பாக அவர் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "நான் எதையும் புதிதாக சொல்லவில்லை. தவறாக சொல்லவில்லை. வைகோவும், காந்தாராஜூம் சொன்னதை தானே நானும் சொன்னேன். எனவே அவர்களை போய் கேளுங்கள். தெலுங்கு மக்களை நான் எதுவுமே கூறவில்லை. திராவிடம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றுபவர்களை சொன்னால், அதை தெலுங்கு மக்களை சொன்னதாக திசை திருப்பியோரை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
தமிழர்களை தமிழர்கள் இல்லை என்று சொல்லக்கூடிய திராவிட சித்தாந்தம் பேசக்கூடியவர்களை தான் நான் அப்படி குறிப்பிட்டேன். லட்டுவில் கொழுப்பை சாப்பிட்டவர்கள் தானே. இனி நீங்கள் அனைவருமே மாட்டுக்கறி சாப்பிடலாமே... என்று கேலி பேசினார்களே... தி.மு.க. ஐ.டி. பிரிவில் கிண்டல் செய்தார்களே... அப்போதெல்லாம் என்ன செய்துகொண்டிருந்தார்கள். அதெல்லாம் தெலுங்கு மக்களை பாதிக்காதா?
நான் தெலுங்கு மக்கள் அத்தனை பேரையும் சொல்லவில்லை. என் மீதே நான் காரி உமிழ்வேனா? வீரபாண்டிய கட்டபொம்மனும் தெலுங்கர் தான். ஆனால் இந்தியாவுக்காக சண்டை போட்ட புரட்சியாளர் அவர். அவரை போல, எந்த மொழி பேசினாலும், தமிழர் நலனுக்காக உழைப்போரை தமிழர்கள் என்று ஒப்புக்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்" என்று கூறினார்.
இதனிடையே நடிகை கஸ்தூரிக்கு எதிராக, மதுரை, தேனி உள்பட பல்வேறு இடங்களில் காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் நடிகை கஸ்தூரியின் சர்ச்சை பேச்சை கண்டித்து பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ் பிரசாத் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழர்களின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும், சமத்துவத்தையும், சகோதரத்தையும், அமைதியையும் சீர்குலைக்கும் வகையில், விளம்பர அரசியலுக்காக ஒரு சில இயக்கங்களும், தனி நபர்களும் வரலாற்றுக்கு புறம்பாக சித்தரித்து பேசுவது அதிகமாகி வருகிறது.
எனவே பிரிவினைவாத அரசியலை கையிலெடுத்து தமிழ் மக்களுக்கு இடையிலான ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையிலும், தெலுங்கு தமிழர்களின் மனதை புண்படுத்தும் வகையிலும் கருத்துக்களை தெரிவிப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ் பிரசாத் வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக தமிழ்நாடு பாஜக பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி நடிகை கஸ்தூரியின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருந்த வீடியோவில், கஸ்தூரியின் கருத்து தமிழக மக்களிடையேயான ஒற்றுமையான சூழலை பாதிக்கும் என்றும் ஆகவே, தான் கூறிய கருத்தை கஸ்தூரி திரும்ப பெற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications