பெட்ரோல் குண்டு வீச்சு: அமைதி பூங்கா தமிழகத்தை கலவரக் காடாக மாற்றும் சக்திகள்..சொல்வது பாஜக நாராயணன்
சென்னை: பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் மூலம் அமைதிப் பூங்காவான தமிழகத்தை கலவரக் காடாக மாற்றும் சக்திகளை ஒடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நாராயணன் கூறியதாவது: தமிழகம் முழுவதும் உள்ளாட்சி நிர்வாகங்களில் நடைபெறும் சீர்கேடுகளை சுட்டிக்காட்டி தட்டிக்கேட்க அறப் போராட்டங்களின் மூலம் மக்கள் பிரச்சினைகளை தீர்க்க குரல் கொடுக்கும் பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை கைது செய்து சிறையிலடைக்கும் திராவிட முன்னேற்ற கழக அரசு ஒரு புறம், பாஜகவின் வளர்ச்சியை கண்டு பொறுக்க முடியாமல், கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் இல்லங்களின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி, கட்சி நிர்வாகிகளின் வர்த்தக நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தி, இரு சக்கர வாகனங்கள், கார்களுக்கு தீ வைப்பது போன்ற பல்வேறு சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் சமூக விரோத தீய சக்திகள் மறுபுறம் என இரு முனை தாக்குதலை எதிர்கொண்டு வருகிறது தமிழக பாஜக.

பாஜகவுக்கு ஆதரவு அதிகம்
ஜனநாயக வழியில் மக்கள் பிரச்சினைகளுக்காக போராடும் பாஜகவினரை காவல்துறையின் மூலம் அடக்க நினைக்கும் திராவிட முன்னேற்ற கழக ஃ பாசிஸ அரசின் அடக்குமுறை வன்மையாக கண்டிக்கத்தக்கது. அரசின் அடக்குமுறையை பாஜகவினர் மீது ஏவி வரும் அதே நேரத்தில், பாஜகவிற்கு மக்களின் ஆதரவு பெருகி வருகிறது என்பதை, ஆட்சி அதிகாரம் கைகளில் உள்ளது என்ற மமதை கொண்ட திராவிட முன்னேற்ற கழகம் உணர வேண்டும்.

கண்டனம்
அனைத்து கிராமங்களிலும் செயலிழந்திருக்கிற அரசுக்கு எதிரான பாஜகவின் போராட்டங்களுக்கு மக்கள் பெரும் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். மக்களுக்கான இந்த போராட்டங்களை மாநில அரசு அடக்குவதை கண்டு ரசிக்கும் சமூக விரோத தீய சக்திகள்,பாஜகவிற்கு மக்கள் ஆதரவு பெருகுவதை கண்டு பொறுக்க முடியாமல், சட்ட விரோதமாக வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டு வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

ஒடுக்க வேண்டும்
மக்களுக்காக போராடும் பாஜகவினரை முடக்க எடுக்கும் முயற்சிகளை தமிழக காவல்துறை சற்றே ஒதுக்கி வைத்து விட்டு, அமைதி பூங்காவான தமிழகத்தை கலவரக் காடாக மாற்ற எண்ணும் சட்ட விரோத, மக்கள் விரோத, சமூக விரோத தீய சக்திகளை ஒடுக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.

மகாபாரத யுத்தம்
சட்டம் ஒழுங்கை காப்பாற்ற முடியாத அரசு, செயல்படாத அரசே என்பதை திராவிட முன்னேற்ற கழகம் உணர வேண்டும். அதிகாரத்தை வைத்து மிரட்டுவதாலும், அராஜக கூட்டணியினரை கொண்டு வன்முறையை தூண்டினாலும் பாஜகவினர் அஞ்ச மாட்டார்கள். பாஜகவை பொறுத்த வரை இது ஒரு மகாபாரத யுத்தமே. இந்த யுத்தத்தில் நீதியின் துணை கொண்டு, மக்களோடு இணைந்து போராடி தீய சக்திகளை முறியடித்து தர்மத்தை, நீதியை, ஜனநாயகத்தை நிலைநாட்டும் தமிழக பாரதிய ஜனதா கட்சி. இவ்வாறு நாராயணன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications