27 ஆண்டுகளுக்கு பிறகு.. இன்று ப்ளூ மைக்ரோ மூன்! மிஸ் பண்ணாதீங்க மக்களே!
சென்னை: சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு, 'புளு மைக்ரோ மூன்' என்ற அரிய வானியல் நிகழ்வு இன்று வானில் தென்பட உள்ளது. இது வானியல் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிலவு பூமியைச் சுற்றிவர சுமார் 29.5 நாட்கள் எடுத்துக்கொள்ளும். அதனால், சில மாதங்களில் இரண்டு பௌர்ணமிகள் வரும். இப்படி ஒரே மாதத்தில் வரும் இரண்டாவது பௌர்ணமியைத்தான் 'புளு மூன்' என்று அழைக்கிறார்கள். இது இரண்டரை முதல் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும். இந்த மே மாதத்தில், மே 1 மற்றும் மே 30 ஆகிய தேதிகளில் இந்த பௌர்ணமிகள் தென்படுகின்றன.

அதேபோல மைக்ரோ மூன் என்பதும் அதிசயமான ஒன்றுதான். நிலவு பூமிக்கு வெகு தொலைவில், அதாவது சுமார் 406,135 கிமீ தொலைவில் இருக்கும்போதுதான் 'மைக்ரோ மூன்' தோன்றும். வழக்கமான நிலவை விட இது 6% சிறியதாகவும், 10% மங்கலாகவும் தெரியும். 'சூப்பர் மூனுடன்' ஒப்பிடும்போது இது 14% சிறியதாக இருக்கும்.
'புளு மூனும்' 'மைக்ரோ மூனும்' சேர்ந்துதான் 27 ஆண்டுகளுக்கு ஒருமுறை 'புளு மைக்ரோ மூன்' என்ற இந்த அரிய நிகழ்வு நடக்கிறது. கடைசியாக 1999 அக்டோபர் 31 அன்றுதான் இது பதிவாகியிருந்தது.
'புளு மூன்' என்று பெயர் இருந்தாலும், நிலவு நீல நிறத்தில் தெரியாது. ஒரே மாதத்தில் வரும் இரண்டாவது பௌர்ணமியைக் குறிப்பதற்காகவே அந்தப் பெயர் பயன்படுத்தப்படுகிறது. இது வெளிறிய வெள்ளை அல்லது பொன்னிற ஆரஞ்சு நிறத்தில் தெரியும். வளிமண்டலத்தில் ஏற்படும் ஒளிச்சிதறலால் இந்த நிறம் உருவாகிறது.
இந்தியா உட்பட ஆசிய பசிபிக் நாடுகளின் பகுதிகளில் இன்று (மே 30) மாலை அல்லது இரவில் இந்த அரிய நிகழ்வைக் காணலாம். உலகின் மற்ற பகுதிகளில் மே 31ஆம் தேதி நிலவு உதிக்கும்போது இதைப் பார்க்க முடியும். வானம் மேகங்கள் இல்லாமல் தெளிவாக இருந்தால், வெறும் கண்களாலேயே இந்த நிகழ்வைப் பார்க்கலாம்.
நிலவு உதிக்கும்போது, பொன்னிற-ஆரஞ்சு நிறத்துடன் பெரிதாகத் தோன்றி, படிப்படியாக பிரகாசமான வெள்ளை நிறத்திற்கு மாறும். உலகின் பல பகுதிகளில் அடுத்த 'புளு மைக்ரோ மூன்' நிகழ்வு 2053ஆம் ஆண்டில்தான் நடக்கும் என்பதால், இந்த அரிய காட்சியைக் காணத் தவறவிட வேண்டாம் என்று வானியல் ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். கடந்த 2023 ஆகஸ்ட் 30 அன்று ஒரு 'புளு மூன்' தோன்றியது இங்கு குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications