காலை உணவு திட்டம்.. ஹெல்ப்லைனில் வந்த கோவை பெண்ணின் பாராட்டு.. சட்டசபையில் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
சென்னை: அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கான காலை உணவு திட்டம் தமிழ்நாடு முழுவதும் 2024ம் ஆண்டுக்குள் விரிவாக்கம் செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், காலை உணவு திட்டத்திற்கு கோவையைச் சேர்ந்த பெண் அளித்த பாராட்டு நெகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு விரிவாக்கம் செய்வது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
காலை உணவு திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளை, கல்லூரியில் படிக்கும் இளைஞர்களை மட்டுமல்லாமல், படிக்கவராமல் இடையில் நின்று விடக்கூடியவர்களையும் பள்ளி, கல்லூரிகளுக்குள் தமிழ்நாடு அரசு அழைத்து வருகிறது.

கோவையைச் சேர்ந்த பெண்
சில வாரங்களுக்கு முன் கோவையைச் சேர்ந்த தீபாராணி என்ற ஒரு பெண், 'முதலமைச்சரின் முகவரி' திட்டத்தில் உள்ள சிஎம் ஹெல்ப் லைன் தொலைபேசி எண்ணில் பேசி இருக்கிறார். பெரும்பாலும் தங்களது தேவைகளை, கோரிக்கைகளை, புகார்களை பதிவு செய்வதற்காகத்தான் அதிலே பலரும் பேசுவார்கள்.

மக்களின் பாராட்டு
'உங்களுடைய புகார் என்னம்மா?' என்று கேட்டதும், 'புகார் சொல்வதற்காக நான் போன் செய்யவில்லை, சி.எம். போன் நம்பர் என்னிடம் இல்லை, சி.எம்.-க்கு நன்றி சொல்வதற்காக போன் செய்தேன்' என்று தீபாராணி என்ற அந்தப் பெண்மணி சொல்லி இருக்கிறார். அந்தப் பெண், நான் காய்கறி வியாபாரம் செய்கிறேன். அதனால என் பிள்ளைக்கு காலையில சாப்பாடு கொடுக்க முடியாது.

மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி
என் மகன் ஐந்தாவது படிக்கிறான். காலை உணவுத் திட்டத்தின் மூலமாக அவனுக்கு தினமும் காலை உணவு கிடைத்து விடுகிறது, அது தரமானதாக இருக்கிறது. அதனால் முதலமைச்சருக்கு நன்றி சொல்லணும்" என்று அந்தத் தாய் நெகிழ்ச்சியோடு கூறியதுதான் எனக்குக் கிடைத்த பாராட்டு என்று நெகிழ்ச்சி தெரிவித்தார்,

திமுகவின் முழக்கம்
தொடர்ந்து, இதுபோன்று ஏராளமான எளிய மக்களின் பாராட்டின் காரணமாகத்தான், வாழ்த்துகளின் காரணமாகத் தான் பெருமை அடைந்து ஊக்கத்தோடு பணியாற்றுகிறோம். 'சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம்' இது தலைவர் கருணாநிதி முழக்கம். அதோடு, தமிழ் மக்களின் நலன் என்று வந்துவிட்டால், சொல்லாததையும் செய்வோம். ஏன்? சொல்லாமலும் செய்வோம் என்பதுதான் எங்கள் முழக்கம்.

காலை உணவு திட்டம்
அரசுப் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மதுரையில் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் 1,500க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை 2023-24ம் நிதியாண்டில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான அரசு பள்ளிகளுக்கும் படிப்படியாக விரிவாக்கம் செய்யப்படும் என்று அறிவித்தார்.












Click it and Unblock the Notifications