"தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்".. விஜய் தேர்வு செய்த தற்காலிக சபாநாயகர் சோழவந்தான் கருப்பையா யார்?
சென்னை: சட்டசபையை பொறுத்தவரை வானளாவிய அதிகாரம் என்றால் அது சபாநாயகருக்கு தான். இந்நிலையில் தான் தமிழக சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் தொகுதியின் தவெக எம்எல்ஏ கருப்பையா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர். இதற்கான உத்தரவில் முதல்வர் விஜய் கையெழுத்திட்டுள்ள நிலையில் கருப்பையாவின் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.

தமிழகத்தின் புதிய முதல்வராக தவெக தலைவர் விஜய் இன்று பதவியேற்றார். விஜய் சட்டசபையில் வரும் 13ம் தேதிக்குள் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும். இதற்கு முதலில் சட்டசபையை வழிநடத்தும் வகையில் தற்காலிக சபாநாயகர் தேர்வு செய்யப்பட வேண்டும். அதன்பிறகு சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் தற்காலிக சபாநாயகர் முன்னிலையில் எம்எல்ஏவாக பதவியேற்று கொள்ள வேண்டும்.
இந்நிலையில் தான் இன்று தற்காலிக சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டது. இதற்கான ஆவணத்தில் முதல்வர் விஜய் கையெழுத்திட்டார். அதன்படி தற்காலிக சபாநாயகராக மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டசபை தொகுதியின் தவெக எம்எல்ஏ கருப்பையா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவர் சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் முன்னிலையில் பதவி ஏற்பார். அதன்பிறகு நாளை சட்டசபை கூடுகிறது. அதில் தற்காலிக சபாநாயகர் கருப்பையா முன்னிலையில் முதல்வர் விஜய் உள்பட அனைவரும் எம்எல்ஏவாக பதவியேற்க உள்னர். இதையடுத்து தான் சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. அதனையும் கருப்பையா தான் நடத்த உள்ளார்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் தோற்றால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை வரும். வென்றால் மட்டுமே அவரால் முதல்வர் பதவியில் நீடிக்க முடியும். இப்படி இக்கட்டான சூழலில் தான் தற்காலிக சபாநாயகராக கருப்பையாவை, விஜய் தேர்வு செய்துள்ளார்.
தற்காலிக சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ள கருப்பையா முதலில் அதிமுகவில் செயல்பட்டு வந்தார். கடந்த 2011 சட்டசபை தேர்தலில் மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்த தேர்தலி்ல கருப்பையா அதிமுக சார்பில் 86,376 ஓட்டுகள் வாங்கி வெற்றி பெற்றார். பாமக வேட்பாளர் இளஞ்செழியனை (பெற்ற வாக்குகள் 49,768) 36,608 ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.
அதன்பின் அவருக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் தான் விஜய் கட்சி தொடங்கிய பிறகு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். சோழவந்தான் தொகுதியில் விஜய் வாய்ப்பு வழங்கினார். திமுகவின் சிட்டிங் எம்எல்ஏவான வெங்கடேஷனை எதிர்த்து களமிறங்கினார்.
#WATCH | Chennai: TVK leader MV Karuppaiah takes oath as Pro Tem Speaker of the Tamil Nadu Assembly in the presence of Governor Rajendra Vishwanath Arlekar and Chief Minister C Joseph Vijay pic.twitter.com/ssXjxtwA7M
— ANI (@ANI) May 10, 2026
இதில் கருப்பையாக மொத்தம் 63,907 ஓட்டுகள் வாங்கி வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் 61,229 வாக்குகள் பெற்று 2,678 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இந்த தொகுதியில் அதிமுக வேட்பாளர் மாணிக்கம் 49,494 ஓட்டுகளுடன் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார். நாம் தமிழர் கட்சியின் நாகலட்சுமி திருமாறன் 10,430 ஓட்டுகள் வாங்கியிருந்தார்.
இந்த வெற்றியை தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கருப்பையா தமிழக சட்டசபைக்குள் நுழைந்துள்ளார். இந்நிலையில் தான் கருப்பையாவுக்கு தற்காலிக சபாநாயகர் பதவி வழங்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications