சிஎஸ்கே கேப்டன் ஆகும் சஞ்சு? அப்போது ருதுராஜ் நிலைமை என்ன.. அவரே சொன்ன முக்கியமான மேட்டர்
சென்னை: சிஎஸ்கே அணிக்கு சஞ்சு வந்தபோதே அவர் கேப்டனாக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், ருதுராஜ் தான் கேப்டனாக தொடர்கிறார். இதற்கிடையே தான் கேப்டன் பதவியைக் கேட்காமல் இருப்பது ஏன்.. ராஜஸ்தான் டூ சிஎஸ்கே டிரான்ஸ்பர் பின்னணி என்ன என்பது தொடர்பாக சஞ்சு சாம்சன் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
ஐபிஎல் இப்போது பரபரப்பான கட்டத்தை நெருங்கியுள்ளது. இன்றைய போட்டியில் சிஎஸ்கே மற்றும் லக்னோ அணிகள் மோதுகின்றன. ஆடும் அனைத்து போட்டிகளிலும் சிஎஸ்கே வென்றால் தான் சிக்கல் இல்லாமல் ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்ல முடியும். ஒரு போட்டியில் தோற்றால் கூட மற்ற அணிகளை நம்ப வேண்டி இருக்கும் என்பதால் ஒவ்வொரு போட்டியும் சிஎஸ்கேவுக்கு முக்கியம்..

சஞ்சு சாம்சன்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளே-ஆஃப் கனவை நனவாக்க ஒற்றை ஆளாகப் போராடி வருகிறார் சஞ்சு சாம்சன். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து ஒரு பிளாக்பஸ்டர் ட்ரேட் மூலம் சிஎஸ்கேவிற்கு வந்த சஞ்சு, சேப்பாக்கின் புதிய செல்லப்பிள்ளையாக மாறியிருக்கிறார். சமீபத்தில் நடந்த டி20 உலகக்கோப்பையில் தொடர் நாயகன் விருது வென்ற அதே அதிரடியை, மஞ்சள் உடை அணிந்தும் தொடர்ந்து வருகிறார் சஞ்சு. 400+ ரன்கள், டெல்லி மற்றும் மும்பை அணிகளுக்கு எதிராக இரண்டு மெகா சதங்கள் என சஞ்சுவின் பேட் அனல் பறக்கிறது.
இதற்கிடையே சஞ்சு சாம்சனுக்கு கேப்டன் பதவி வழங்க வேண்டும் என்ற குரல்களும் இருக்கவே செய்கிறது. சிஎஸ்கேவிற்குள் சஞ்சு நுழைந்ததுமே எழுந்த முதல் கேள்வி "ருதுராஜைத் தூக்கிவிட்டு சஞ்சு கேப்டன் ஆவாரா?" என்பதுதான். இதற்கு 'சூப்பர் கிங்ஸ்' பாட்காஸ்ட்டில் சஞ்சு கொடுத்துள்ள பதில் மிக முதிர்ச்சியானதாக இருக்கிறது. இதுவே இப்போது டிரெண்டாகி வருகிறது.
கேப்டன் பதவி
அதில் அவர், "நான் ஏற்கனவே ஒரு அணியில் (ராஜஸ்தான்) கேப்டனாக இருந்தவன். அங்கிருந்து வெளியேறி ஒரு புதிய அணிக்கு வரும்போது, 'எனக்கு இது வேண்டும், அது வேண்டும்' என நிபந்தனைகள் விதிக்கக்கூடாது. ஒரு புதிய வீட்டுக்குள் நுழையும்போது, முதலில் நம்முடைய தகுதியை நிரூபிக்க வேண்டும். அதைத் தான் நான் இப்போது செய்து கொண்டிருக்கிறேன்" என்றார்.
கேரளாவைச் சேர்ந்த சஞ்சு, சென்னைக்கும் மலையாளிகளுக்கும் உள்ள உறவை அழகாகக் குறிப்பிட்டார்.. அதில் அவர், "சென்னையிலும் துபாயிலும் ஏராளமான மலையாளிகள் உழைக்கிறார்கள். அவர்கள் மீது வைக்கப்பட்ட நம்பிக்கையைத் திரும்பக் கொடுக்கத் தங்கள் உயிரையே கொடுப்பார்கள். சிஎஸ்கே என் மீது நம்பிக்கை வைத்து அழைத்துள்ளது. அந்த நம்பிக்கைக்கு என் முழு உழைப்பையும் கொடுப்பேன்" என்றார்.
ருதுராஜ் கெய்க்வாட்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து தன்னைச் சென்னைக்குக் கொண்டு வர ருதுராஜ் கெய்க்வாட் தான் முதலில் பேசினார் என்ற ரகசியத்தை சஞ்சு உடைத்துள்ளார். அவர் மேலும், "ருதுராஜ் ஒரு வித்தியாசமான சூப்பர் ஸ்டார். 5 ஆண்டுகள் கேப்டனாக இருந்த ஒருவனை (சஞ்சு), தனது அணிக்கு அழைப்பதற்கு ஒரு தனித் துணிச்சல் வேண்டும். ருதுராஜிடம் அந்தத் தன்னம்பிக்கை இருக்கிறது. அவர் என்னைப் பற்றிப் பேசுவதை விட, அவரது செயல்பாடுகள் தான் என்னைக் கவர்ந்தன" என்றார்.
சஞ்சு
கடந்த போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக 87 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த சஞ்சு, வெறும் 13 ரன்களில் தனது மூன்றாவது சதத்தைத் தவறவிட்டார். இருப்பினும், அவரது இந்த ஃபார்ம் சிஎஸ்கே ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. ரன்களைக் குவிப்பது ஒருபுறம் இருந்தாலும், கேப்டன்சி மீது ஆசைப்படாமல் ருதுராஜுக்குப் பக்கபலமாக இருக்கும் சஞ்சுவின் இந்த மெச்சூரிட்டியை தான் சிஎஸ்கே ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications