மத்திய பட்ஜெட்டில் எதுவும் இல்லை.. தமிழகத்திற்கும் ஏமாற்றம் தான்.. விளக்கி சொல்லும் ஆனந்த் சீனிவாசன்
சென்னை: மத்திய அரசின் பட்ஜெட்டில் உத்வேகம் அளிக்கும் திட்டங்கள் எதுவும் இல்லை என்று பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் தெரிவித்துள்ளார். மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கான பெரும் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை என்று கூறிய ஆனந்த் சீனிவாசன், இது மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
2026-27ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், சில அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார். சென்னை - பெங்களூர் இடையிலான புதிய ரயில் வழித்தடம், சென்னை - ஐதராபாத் இடையிலான புதிய ரயில் தடம், ஆதிச்சநல்லூர் தொல்லியல் தளம், பொதிகை மலையேற்ற திட்டம் உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் பேசுகையில், என்னை பொறுத்தவரை இது நிதியமைச்சர் பேச வேண்டிய பட்ஜெட் அல்ல. ஒரு ஐஏஎஸ் அதிகாரி பேசிய உரை போல் அமைந்தது. இந்த பட்ஜெட்டில் பெரியளவில் எந்த தகவலும் இல்லை. ஒன்றரை மணி நேரத்தில் விவசாயிகளை பற்றி பேசுவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் தென்னை வளர்ப்பது எப்படி?
சந்தன மரம் எப்படி என்று மேலோட்டமாக பேசிவிட்டு, தென்னை மரத்திற்கு காசு தரேன் என்று சொல்லி சென்றுவிட்டார். இந்தியாவில் கட்டுமான துறைதான் அதிக வேலைவாய்ப்பை கொடுத்து வருகிறது. அதனைப் பற்றியும் பேசியதை போல் தெரியவில்லை. இந்த பட்ஜெட் உரைக்கு முன் பாசிட்டிவாக இருந்த பங்குச்சந்தை புள்ளிகள், தற்போது கீழே இறங்கிவிட்டது.
இந்த பட்ஜெட்டில் எதைப் பற்றியும் நிர்மலா சீதாராமன் பேசவில்லை. தமிழ்நாட்டிற்கு ஆதிச்சநல்லூர் சுற்றுலாவுக்கு உதவி செய்வோம் என்று கூறி இருக்கிறார்கள். அதனை தவிர, தமிழ்நாட்டிற்கு எதுவும் இல்லை. சென்னைக்கு ஒரு மிகவிரைவு ரயில் தடம் கொண்டு வருகிறோம் என்று அறிவித்துள்ளார்கள். மும்பை - அகமதாபாத் இடையில் புல்லட் ரயில் வரும் என்று மோடி அறிவித்தார்.
ஆனால் இதுவரை அந்த புல்லட் ரயில் வரவில்லை. இதனால் 15 ஆண்டுகளுக்கு பின் அதிவிரைவு ரயில் வருமா என்பது தெரியவில்லை. மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை கொடுக்கிறோம் என்றார்கள். 8 ஆண்டுகளாக கட்டுமானம் மட்டுமே நடந்து வருகிறது. அது ஜனவரி 2027ல் தான் தொடங்கப்படும் என்கிறார்கள்.
மத்திய அரசின் ஜிபிடி புள்ளிகள் எல்லாம் தவறானவை.. இதனை ஐஎம்எஃப் கூறி இருக்கிறது. ஜிடிபி வளர்ச்சி 7.5% என்று கூறுகிறார்கள். ஆனால் அரவிந்த் சுப்பிரமணியம் போன்றவர்கள் உண்மையான வளர்ச்சி 2% என்கிறார்கள். இந்த பட்ஜெட்டில் எது உண்மை, எது சரியான நம்பர், எது தவறான நம்பர் என்று சொல்ல முடியவில்லை.
இந்த பட்ஜெட்டில் சுற்றுலா, மருத்துவ சுற்றுலா, செமி கண்டக்டர் உள்ளிட்டவற்றுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் என்ன செய்யப் போகிறோம் மட்டுமே சொல்லி இருக்கிறார்கள். இந்த நிதியாண்டில் என்ன செய்யப் போகிறோம் என்று சொல்லாமல், அடுத்த 5 ஆண்டுகளுக்கான திட்டத்தை மட்டுமே கூறுகிறார்கள். எல்லோருக்கும் எல்லாம் என்பது எல்லோருக்கும் ஒன்றுமில்லை என்றாகிவிட்டதாக விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications