திராவிடக் கோட்டையை சரிக்கும் கடப்பாரையா தவெக? 2026ல் விஜய் சாதிக்கப் போவது என்ன? விரிவான அலசல்!
சென்னை: காங்கிரசுக்கு பிறகு முதன்முறையாக 1967-ம் ஆண்டு திமுக ஆட்சி அமைத்தது. அதற்குப் பிறகு 1977 அதாவது 10 ஆண்டுகளுக்குப் பிறகு அதிமுக ஆட்சி அமைத்தது. அன்றிலிருந்து இன்று வரை இரண்டு திராவிட கட்சிகளே தமிழகத்தை மாறி மாறி ஆண்டு வருகின்றன. கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக இரண்டு பெரிய திராவிட கட்சிகளை மையமாகக் கொண்டு சுழன்று வந்த தமிழக அரசியல் சூழல் தற்போது நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தால் 2026 சட்டசபை தேர்தலில் வேறு பாதையில் பயணிக்கக்கூடும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
பண்ணையார் கட்சி மனப்பான்மை, இந்தி திணிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கிய காங்கிரஸ் தமிழகத்தில் 1967 ஆம் ஆண்டு ஆட்சியை இழந்தது. அதற்கு பிறகு எவ்வளவோ முயன்றும் காங்கிரஸால் தமிழகத்தில் எழுந்திருக்கவே முடியவில்லை.

1967ல் அண்ணா தலைமையில் திமுகவும், 1977-ல் எம்ஜிஆர் தலைமையில் அதிமுகவும் தமிழகத்தை ஆளத் தொடங்கின. கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் கடந்துவிட்ட போதும் தற்போது வரை அதே சூழல்தான் நிலவுகிறது. இந்த நிலையில் 2026 சட்டசபை தேர்தல் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும் என்கின்றனர்.
திராவிட கட்சிகள் ஆதிக்கம்
குறிப்பாக நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றி கழகம் இந்த தேர்தலில் முக்கிய பங்காற்றும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். தமிழக வெற்றிக்கழகம் அதிக இடங்களை வென்று ஆட்சியைப் பிடிக்கும் என்பது அல்ல.. அந்தக் கட்சி யாருடைய வாக்குகளை அதிகமாக பாதிக்கும் என்பதுதான் தற்போதைய அரசியல் சூழலில் முக்கிய கேள்வியாக இருக்கிறது. தமிழக அரசியல் இதுவரை இருமுனைப் போட்டியாக இருந்து வந்த சூழலில் தமிழக வெற்றி கழகத்தின் வருகையால் இந்த போட்டி மும்முனை போட்டியாக மாறி இருப்பதாக சொல்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
தமிழக வெற்றி கழகம்
சில கருத்துக் கணிப்புகளின் அடிப்படையில், தவெக 10 முதல் 20 சதவீதம் வரை வாக்குகளைப் பெறும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் அந்த கட்சிக்கு அதிக வரவேற்பு கிடைத்திருப்பது இதற்குக் காரணமாக பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் பல தொகுதிகளில் வெற்றி வித்தியாசம் குறைவாக இருக்கும் சூழலில், இவ்வளவு அளவிலான வாக்கு பிளவு தேர்தல் முடிவை முற்றிலும் மாற்றக் கூடியதாக இருக்கும்.
சட்டப்பேரவைத் தேர்தல்
2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் தரவுகள் இதற்கு ஒரு முக்கிய உதாரணமாக பார்க்கப்படுகின்றன. அந்த தேர்தலில் பல தொகுதிகளில் மூன்றாவது அணிகள் பெற்ற வாக்குகள், வெற்றி வித்தியாசத்தை விட அதிகமாக இருந்தன. இதனால் பல இடங்களில் முடிவுகள் மாறின. 2021 தேர்தலில் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி, கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம், மேலும் டி.டி.வி. தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போன்ற கட்சிகள் சேர்த்து சுமார் 11.5 சதவீத வாக்குகளை பெற்றன.
மூன்றாவது அணிகள்
இக்கட்சிகள் அதிக இடங்களை வெல்லவில்லை என்றாலும், பல தொகுதிகளில் முடிவை பாதித்தது. சுமார் 234 தொகுதிகளில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில், மூன்றாவது அணிகள் பெற்ற வாக்குகள் வெற்றி வித்தியாசத்தை விட அதிகமாக இருந்ததாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன. குறிப்பாக சில தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகள் மட்டுமே வெற்றி வித்தியாசத்தை விட அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
திமுக - அதிமுக
மூன்றாவது அணிகள் கடந்த தேர்தல்களில் ஒரு குறிப்பிட்ட கட்சியை மட்டுமே பாதிக்கவில்லை. திராவிட முன்னேற்ற கழகம் கூட்டணிக்கும், அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கூட்டணிக்கும் இரண்டுக்குமே பாதிப்பு ஏற்பட்டது. அதாவது மூன்றாவது அணியின் வாக்குகள் இரு தரப்பினரின் வெற்றியையும் மாற்றியதாக அரசியல் தரவுகள் சொல்கின்றன.
2026 சட்டமன்ற தேர்தல்
இதேபோல் 2026 சட்டமன்ற தேர்தலில் தவெக எந்த பகுதிகளில் எவ்வளவு வாக்குகளைப் பெறுகிறது என்பதே அதன் பலத்தை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருக்கும். நகர்ப்புறங்களில் - குறிப்பாக சென்னை, கோயம்புத்தூர் போன்ற பகுதிகளில் தவெக அதிக ஆதரவைப் பெற்றால், அது திமுக கூட்டணிக்கு சவாலாக அமையலாம் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் மேற்குத் தமிழகமும் தெற்கு மாவட்டங்களிலும் தவெக வாக்குகள் அதிகரித்தால், அதிமுக கூட்டணிக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
இளைஞர்களின் ஆதரவு
தவெகவின் முக்கிய பலமாக இளைஞர்கள் கருதப்படுகின்றனர். 20 முதல் 40 வயது வரை உள்ள வாக்காளர்கள் சுமார் 2.2 கோடி அளவில் இருப்பதாக மதிப்பிடப்படும் நிலையில், அதில் முதல் முறை வாக்களிக்க உள்ள இளைஞர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உள்ளது. இந்த இளைஞர்களின் ஆதரவு யாருக்குச் செல்கிறது என்பதே தேர்தல் முடிவை தீர்மானிக்கக்கூடியதாக இருக்கும்.
மும்முனைப் போட்டி
அரசியல் ஆய்வாளர்கள் கருத்துப்படி, தவெக 10 முதல் 15 சதவீதம் வரை வாக்குகளைப் பெற்றாலே பல தொகுதிகளில் இருமுனைப் போட்டி மும்முனைப் போட்டியாக மாறக் கூடும். இதன் மூலம் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தேர்தல் முடிவுகளை மாற்றும் திறன் அந்தக் கட்சிக்கு கிடைக்கலாம்.
தமிழ்நாடு அரசியல்
அதாவது, தவெக அதிக இடங்களை வெல்லாமல் இருந்தாலும், யார் ஆட்சியை அமைப்பார்கள் என்பதை தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக மாறும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன. 2026 தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது ஒரு கேள்வியாக இருந்தாலும், தவெக யாருடைய வாக்குகளை அதிகம் பாதிக்கும் என்பதே தமிழக அரசியலின் மிகப்பெரிய புதிராக மாறியுள்ளது.













Click it and Unblock the Notifications